20 வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதேச்சையாக பேருந்து நிலையத்தில் சந்தித்தேன்.
முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விவரம் கேட்ட போது மனது கஷ்டமாக இருந்தது.
இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டு பிரிந்தோம்.
அன்றிரவு நண்பனை சந்தித்த விபரத்தை என் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டேன்.
“நம்ம பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல கூட ஒரு டீச்சருக்கு இன்னும் திருமணம் ஆகல வயசு 35 க்கு மேல் இருக்கும்” என்றாள் என் மனைவி. எனக்கு பொறி தட்டியது.
மறுநாள் அந்த டீச்சரை சந்தித்து எனது நண்பனை பற்றி எடுத்துச் சொல்லி “ஏன் நீங்க ரெண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?” என்று கேட்டேன்.
ரொம்ப நேரம் யோசித்து விட்டு இறுதியில் டீச்சர் சம்மதிக்க, விவரத்தை நண்பனுக்கு தெரிவித்து உடனே ஸ்கூலுக்கு வர சொன்னேன்.
அடுத்த அரை மணி நேரத்தில் நண்பன் வந்தான். அவனுக்கு டீச்சரை காண்பித்து “பிடிச்சிருக்கா?” என்று கேட்டேன்.
“டீச்சர் பாக்குறதுக்கு எனக்கு அக்கா மாதிரி தெரியுறாங்க. வயசு குறைவா வேற பொண்ணு இருந்தா பாரு.” அவன் சொன்ன போது எனக்கு தலை சுற்றியது.
‘இப்படி குத்தம் சொல்லிக்கிட்டே, வேணாம்னு சொல்லுவ. கேட்டா கல்யாணம் ஆகலேன்னு வருத்தம் வேற’ மனதிற்குள் திட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தேன்.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!