ஏளனம் – கதை – எம்.மனோஜ் குமார்

ஸ்விக்கி செயலியில், ராகவ் ஆர்டர் செய்து தனக்கு தேவையான உணவு பொருட்கள் வாங்கினான்.

ஒருமணி நேரம் கழித்து, ராகவின் வசிப்பிடமான வடபழனிக்கு டெலிவரி ஊழியர் கார்த்திக் வந்தான்.

“சார்! நான் வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் தெரு வந்துட்டேன். லொகேஷன் சொல்லுங்க! சரியா எப்படி வரணும்?” அலைபேசியில் கேட்டான் கார்த்திக்.

“நேரா அப்படியே வாங்க! மாரநாதா சர்ச், சல்மான் மளிகை கடைக்கு அப்படியே எதிர்க்க பாருங்க! வைகுண்ட அப்பார்ட்மெண்ட்ஸ், நட்சத்திரா அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு அப்படியே பின்னாடி தான் அபர்ணா அப்பார்ட்மெண்ட். அங்க தான் நான் ரெண்டாவது மாடியில இருக்கேன். வாங்க!” ராகவ் சொன்னான். அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தான் கார்த்திக்.

“சார்! மாரநாதா சர்ச், சல்மான் மளிகை கடை வந்துட்டேன். குழப்பமா இருக்கு. சரியா எங்க வரணும்?” கார்த்திக் கேட்டான்.

“யோவ்! எத்தனை தடவை தான் சொல்றது? அதான் தெளிவா லொகேஷன் சொல்லிட்டேன் இல்ல! என்ன பிரச்சனை? போனை வை. வந்து சாப்பாடு கொடுத்துட்டு போ!” கார்த்திக்கைத் திட்டினான் ராகவ்

ராகவின் இருப்பிடமான அபர்ணா அடுக்ககத்தை, வந்தடைந்தான் கார்த்திக். அவன் ராகவைப் பார்த்தான். ஏதோ ஒரு வேலையில் மும்முரமாய் இருந்த ராகவ் கார்த்திக்கைக் கவனிக்கவில்லை.

ராகவ் திட்டியது கார்த்திக் மனதில் பெருங்கோபமாய் இருந்தது. கோபத்தில், அவனைப் பழிவாங்க உணவை ராகவிடம் சரியாக சேர்க்காமல், அடுக்ககத்தின் வாசலில் வைத்து விட்டு சென்றான் கார்த்திக்.

ராகவ் கார்த்திக்கை எங்கே இருக்கிறான்? என்று கேட்டு, அலைபேசியில் அழைத்து தெரிந்து கொள்ள பல முறை முயற்சித்தான். ஆனால் கார்த்திக் அவன் அழைப்பை எடுக்கவில்லை.

இறுதியில் ஒருவழியாக, அலைபேசியை எடுத்து “உங்க சாப்பாடு பார்சலை, அபார்ட்மெண்ட் வாசல்ல, வச்சுட்டு வந்துட்டேன். போய் எடுத்துக்கோங்க!” ஏளனமாக பதிலளித்தான் கார்த்திக்

ராகவ் கடுப்பானான். பசி வேறு அவனை உலுக்கியது. வேறு வழியில்லாமல், வெறுப்பில் கீழே இறங்கி வந்து, பார்சலை எடுத்துக்கொண்டு சென்றான் ராகவ்.

“என் லொகேஷன் வந்து சரியா சாப்பாடு தரல. அதோட, திமிரா சரியா பதில் சொல்லாம, சாப்பாடு பார்சலை அப்பார்ட்மெண்ட் வாசல்ல வச்சுட்டு போயிட்டான். யாரவது வந்து சத்தமே இல்லாம அமைதியா சாப்பாடு பார்சலை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னா, நான் கஷ்டப்பட்டு சாப்பாடு வாங்கினது வீண் தானே!” என கார்த்திக் மீது ராகவ், ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு புகார் செய்தான்

“ஒன்னும் கவலைப்படாதீங்க சார்! இவ்வளவு திமிரு காட்டின இந்த டெலிவரி வேலை செய்ற கார்த்திக்கை, வேலையை விட்டு தூக்கிடலாம்” என்று அவர்கள் ராகவிற்கு பதிலளித்தார்கள்.

ராகவின் புகாரின் அடிப்படையில், கார்த்திக் டெலிவரி ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

அதன் பிறகு, அவனை யாரும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு நிறுவனமாக ஏறி, இறங்கி அலைந்தது தான் மிச்சம். பிறகு, தன் தவறை உணர்ந்து அதற்காக வருத்தப்பட்டான்.

அவன் வேலை கேட்டு அலைந்து திரிந்ததில், நாட்கள் நகர்ந்தன. ஆனால், வேலை தான் கிடைத்த பாடில்லை. வேறு வழியில்லாமல், ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் சர்வராக வேலைக்குச் சேர்ந்தான்.

‘தன் வாழ்க்கை இப்படி ஆனதற்கு காரணமே, வேலையில் தான் காட்டிய உதாசீனம் தான்’ என்பதை உணர்ந்தான்.

அன்று அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தான் ராகவ். அவனைப் பார்த்ததும் கூனிக் குறுகினான் கார்த்திக்.

அவன் சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவ சென்ற நேரத்தில், டேபிளை வேகமாய் துடைத்துக் கொண்டிருந்தான்.

ராகவ் கை கழுவி விட்டு திரும்பிய போது, அவனைப் பார்த்து விட்டான். கார்த்திக் அவமானத்தில் தலை குனிந்து நின்றான். ராகவ் அவன் அருகில் வந்தான்.

“சார்! என்னை மன்னிச்சிடுங்க! நான் பண்ணினது ரொம்ப தப்பு. எனக்கு அப்போ தப்பா தெரியல. இப்போ நான் என் தப்பை உணர்ந்துட்டேன். நான் மட்டும் அன்னைக்கி, சோம்பேறித்தனத்தை காட்டமா இருந்திருந்தா, வேலை இல்லாம இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்.

நான் இனிமே இந்த தப்பை பண்ணவே மாட்டேன். வேலை இல்லைனா வருமானம் இருக்காது. வருமானம் இல்லாம என் குடும்பத்தை காப்பாத்த முடியாது. என் குடும்பம் என்னை நம்பி தான் இருக்கு.

நாங்க கஷ்டப்படுற குடும்பம் சார்! அப்பா இறந்துட்டாரு! அம்மா தெருவோரம் சாப்பாடு கடை வெச்சி, சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்துறாங்க. தம்பி, இப்போ தான் காலேஜ்ல முதல் வருஷம் சேர்ந்து படிக்கிறான். அவனுக்கு பீஸ் கட்ட கூட காசில்லை. அதனால தான் கிடைச்ச இந்த வேலையை செய்றேன்” தப்பை உணர்ந்து ராகவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சினான் கார்த்திக்.

“எந்த வேலையா இருந்தா என்ன? இந்த வேலையிலயும் உனக்கு சம்பளம் கிடைக்குது இல்ல”

“இல்ல சார்! அங்க வாங்கின சம்பளத்துல பாதி தான் இங்க வாங்குறேன்” கேட்ட ராகவிற்கு சங்கடமாய் போய்விட்டது.

“நானும் அவசரப்பட்டு கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன்” அவன் மனது பாரமாகி போனது. மனக்கஷ்டத்தோடு ஹோட்டலை விட்டு வெளியேறினான். தன்னால், அவனுக்கு இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டது என்று மனது அலை பாய்ந்தது.

ஸ்விக்கி செயலியில் அழைத்து பேசி, “கார்த்திக் லேட்டா வந்து டெலிவரி கொடுத்தான் என்கிற காரணத்திற்காக, அவனை பழிவாங்கணும்னு அப்பார்ட்மெண்ட் வாசலில் பார்சலை வெச்சிட்டு போயிட்டான்னு பொய் சொன்னேன். சாரி! என்ன மன்னிச்சிக்குங்க! மறுபடியும் அவன வேலையில சேர்த்துக்கோங்க” தாழ்மையாய் கேட்டுக் கொண்டான் ராகவ்.

“ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை? உங்களால ஒருத்தன் வேலையே போயிடுச்சு”

“மன்னிச்சிக்குங்க! மறுபடியும் அவனை வேலையில சேத்துக்கோங்க” ராகவ் கெஞ்சி கேட்டான்.

“சரி முயற்சி பண்றோம்.”

மறுநாள் கார்த்திக்கின் அலைபேசி அடித்தது.

“கார்த்திக்! நீ டெலிவரி செய்யும் வேலைக்கு வந்து ஜாயின் பண்ணு. சாரிப்பா! ராகவ்ங்கிற கஸ்டமர் சொன்ன பேச்சைக் கேட்டு, உன்னை வேலையை விட்டு தூக்கிட்டோம். தப்பு உன் மேல இல்ல. உன்ன பழி வாங்க அவர்தான் கம்ப்ளைன்ட் பண்ணினதா சொன்னாரு. நீ நாளைக்கே வந்து ஜாயின் பண்ணிடு” அவர் சொன்ன போது மனம் முழுக்க ஆனந்தம் கூடியிருந்தது.

ராகவ்வின் அலைபேசி எண்ணுக்கு டயல் செய்தான் கார்த்திக்.

“ரொம்ப நன்றி சார்! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல? வேற யாரவது உங்க இடத்துல இருந்தா, நான் செய்த தப்ப சுட்டிக்காட்டி கிட்டு இருப்பாங்க. ஆனா, நீங்க நான் செய்த தப்பை மறச்சு, நீங்க தப்பு செய்ததா சொல்லி எனக்கு மறுபடியும் வேலை வாங்கி கொடுத்தீங்க. ரொம்ப நன்றி சார்!” நன்றிப் பெருக்கில் அவன் வார்த்தைகள் தடுமாற்றம் அடைந்தன. காற்று இறங்கி வீசியதில் அவன் மனம் குளிர்ந்தது.

அவனது இதயம் என்னும் காகிதத்தில் ராகவ் பெயர் அழிக்க முடியாத அளவிற்கு நிரந்தர மையால் எழுதப்பட்டது.

எம்.மனோஜ் குமார்

                                                   

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.