பித்தலாட்டம் – கதை

வண்டியூர் கிராமத்தில், உள்ளாட்சி தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் ஒரு பெரிய கட்சியின் சார்பாக தேர்தலில் களம் இறங்கினர்.

பார்த்திபன் ஊர் தலைவர் பதவிக்கு நின்றார். அவரது சகாக்கள் கவுன்சிலர் பதவிகளுக்கு நின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி சார்பாக பலநபர்களை தேர்தல் களத்தில் நிற்கச் செய்திருந்தனர்.

பார்த்திபனும் அவரது சகாக்களும் தங்களுக்கு ஓட்டளிக்க வேண்டி வீடு வீடாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.

பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், “ஒவ்வொரு வீட்டுக்கும், ஆயிரம் ருபாய் கொடுத்து விடுவோம்!” என்று பேசிக் கொண்டு, ஒவ்வொரு வீடாக, பணப் பட்டுவாடா செய்தனர்.

அந்த கிராமத்தில் பாபு எனும் இளைஞன் அவனது மனைவி உமாவோடு வாழ்ந்து வந்தான். பார்த்திபனிடம் ஓட்டுக்காகப் பணம் வாங்காத ஒரு சிலரில் பாபுவும் ஒருவன்.

உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்று அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

பார்த்திபன் வெற்றி பெற்று ஊர் தலைவர் ஆனார். அவரது சகாக்கள் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் ஆகினர்.

ஒருநாள் ஊர் மக்களோடு சேர்ந்து பாபு மற்றும் அவனது மனைவி உமா, ஊர் தலைவர் பார்த்திபனிடம், ஊரின் பிரச்சனைகள் அடங்கிய புகார் மனு அளித்தனர்.

பாபுவை ஊர் தலைவர் பார்த்திபன் தனியாக அழைத்தார். பின்னர் புகார் மனுவை கிழித்து விட்டு குப்பை கூடையில் வீசினார்.

பிறகு பாபுவிடம், “தம்பி! மக்கள் பிரச்சனையை தீர்த்து வெச்சிட்டா! நாங்க எப்படி எலெக்சன்ல செலவழிச்ச பணத்தை திரும்ப மீட்கிறது? இந்த மக்கள், அந்த பணத்தை திருப்பி கொடுப்பாங்களா?” என்று கேள்வி கேட்டார்.

“ஐயா! மக்கள் ரொம்ப பாவம்! உங்களை நம்பி ஒட்டு போட்டு ஜெயிக்க வெச்சிருக்காங்க! நீங்க ஊருக்கு நல்லது பண்ணா, அடுத்த தடவை இதை விட பெரிய பதவில உங்களை உட்கார வைப்பாங்க!” என்று பாபு கூறினான்.

“தம்பி! உனக்கும் உன் பொண்டாட்டிக்கும், எவ்வளவு பணம் வேணாலும் கொட்டி தரேன்! வாங்கிட்டு, ராஜா மாதிரி செட்டில் ஆகிடு! சந்தோஷமா இரு! எதுக்கு இந்த வீணா போன ஜனங்களோட சேர்ந்து, உன் நேரத்தையும் உடம்பையும் கெடுத்துகிற? இந்த ஜனங்களை விட்டு தள்ளு!”

“ஐயா! முடியாதுங்க! மக்கள் பிரச்னையை, தீர்க்காம இந்த இடத்தை விட்டு போக மாட்டேன்” என பாபு கூறினான்.

அதனைக் கேட்டு கோபம் அடைந்த பார்த்திபன் “ஏன்டா! அறிவு இல்லை? ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டியா?” என பாபுவை திட்டி, மேஜையில் உள்ள சொம்பில் இருக்கும் தண்ணீரை பாபுவின் மேல் ஊற்றினார்.

இதனால் பொறுமை இழந்து, கோபம் அடையும் பாபு “டேய்!” என ஆவேசமாக கூச்சலிட்டான். பார்த்திபனின் சட்டையை பிடித்து அடிக்க முயன்றான்.

ஊர் தலைவர் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள், பாபுவை மோசமாக போட்டு அடித்தனர். போலீசை வரவழைத்து, போலீஸ்காரர்களிடம் பாபுவை ஒப்படைத்தனர்.

போலீஸ்காரர்கள் பாபுவை கைது செய்து அழைத்து சென்றனர். உமா மற்றும் அன்கிருந்த மக்கள் கூட்டத்தினர் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீஸ்காரர்கள் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அந்த இடமே போர்க்களமாக மாறியது.

நடந்தவற்றை அதே கிராமத்தைச் சேர்ந்த விவேக் மற்றும் அவனது நண்பர்கள் வீடியோ எடுத்து ‘பேஸ்புக்’, ‘ட்விட்டர்’, ‘ஷேர்சாட்’, ‘இன்ஸ்டாகிராம்’ என சமூக ஊடக செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளை பரப்பி விட்டனர். அச்செய்தி ஊரெல்லாம் நாடெல்லாம் வைரலாக பரவியது. அது மாநில முதலமைச்சர் வரை சென்றது.

முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் பார்த்திபன் மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் பதவி பறிபோனது.

மீண்டும் ஒரு வருடம் கழித்து உள்ளாட்சி தேர்தல் புதிதாக நடைபெற்றது. அத்தேர்தலில் களமிறங்கி பாபு வெற்றி பெற்று, புதிய ஊர் தலைவராகவும் உமா துணை தலைவராகவும் விவேக் மற்றும் அவனது நண்பர்கள் புதிய கவுன்சிலர்களாக பதவியேற்றனர்.

அதன்பின் அந்த கிராமம் அபார வளர்ச்சி அடைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியோடு வாழ தொடங்கினர்.

எம்.மனோஜ் குமார்