எதனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனை நமக்கு நன்மையையே கொடுக்கும் என்பதை பிரார்த்தனையின் பரிசு என்ற கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு சமயம் மார்டின் என்ற கேரள நாட்டைச் சார்ந்தவர் ஒருவர், வியாபார விசயமாக மங்களுரில் காரில் போய்க் கொண்டிருந்தார்.
வழியில் கத்தோலிக்க சர்ச் ஒன்றைக் கண்டார். பிரார்த்தனை செய்வதற்காக காரில் இருந்து இறக்கி சர்சிற்குள் சென்றார்.
சர்ச்சில் ஒருவரும் இல்லை.
இறந்து போன ஒருவரை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் எடுத்து வந்து அங்கே வைத்திருந்தார்கள்.
அங்கே வருகிறவர்கள் தங்களின் அனுதாபத்தை எழுதி வைப்பதற்காக, சவப்பெட்டியின் அருகே திறந்த நோட்டுப் புத்தகம் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
சர்ச்சிற்குள் நுழைந்த மார்டின், சவப்பெட்டியில் இருந்த இறந்தவரின் உடல், அருகில் திறந்த நிலையில் இருந்த நோட்டுப் புத்தகம் ஆகியவற்றைக் கண்டார்.
சர்ச்சில் யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொண்டார்.
நோட்டுப் புத்தகத்தில் எதுவும் அதுவரை எழுதவில்லை.
உடனே மார்டின் இறந்தவருக்காக பிரார்த்தனை செய்தார்.
பின்னர் அருகில் திறந்த நிலையில் இருந்த நோட்டுப் புத்தகத்தில், இறந்தவருக்காக முதல் ஆளாக இரங்கல் செய்தி ஒன்றையும் தனது முகவரியையும் எழுதி விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ஒரு மாதம் கழித்து மார்டினுக்கு ஒரு கடிதம் வந்தது.
அக்கடிதத்துடன் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு இருந்தது.
அந்தக் கடிதம் மங்களூரில் இருந்து வந்திருந்தது.
யாரும் இல்லாமல் அனாதையாக சர்ச்சில் சடலமாக வைக்கப்பட்டிருந்தவரின் பெயரில் கடிதம் இருந்தது.
அதில் இறந்தவர் ஒரு கோடீஸ்வரர். அவருக்கு என்று நெருங்கிய உறவினர் என்று யாரும் கிடையாது.
தனது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று முதலில் பிரார்த்தனை செய்கிறவர் யாராக இருந்தாலும், அவருக்குப் ஒருகோடி பிரார்த்தனை பரிசு கொடுக்கும்படி அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.
தாங்கள் சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த, இறந்த கோடீஸ்வரருக்காக முதலில் பிரார்த்தனை செய்ததால், தங்களுக்கு இப்பணம் பிரார்த்தனைப் பரிசாக வழங்கப்படுவதாக குறிப்பிட்டப்பட்டிருந்தது.
இதனைக் கண்டதும் மார்டின் மிகவும் ஆச்சர்யத்துடன் இப்படியும் விநோதமான மனிதர்கள் இருக்கிறார்கள். விநோதமான சூழ்நிலையும் வருகின்றன என்று எண்ணினார்.
மார்டினுடைய எதனையும் எதிர்பாராத பிரார்த்தனைக்கு, இறைவனின் அன்பு பரிசினைப் பார்த்தீர்களா?
நாமும் எதனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், நமக்கு நன்மை கிடைக்கும்.
நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.