பிரெட் சில்லி அருமையான சிற்றுண்டி ஆகும். அசத்தலான சுவையினை உடைய இது எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.
குழந்தைகள் மாலையில் பள்ளிவிட்டு வரும்போது இதனைச் செய்து கொடுக்கலாம்.
பிரெட் சில்லி தயார் செய்ய சாதாரண பிரெட், கோதுமை பிரெட், மற்ற தானியங்களிலிருந்து தயார் செய்யப்படும் பிரெட் என எந்த வகைப் பிரெட்டினையும் பயன்படுத்தலாம்.
நான் பிரெட் சில்லி தயார் செய்ய சாதாரண பிரெட்டினையே பயன்படுத்தியுள்ளேன்.
இனி சுவையான சுவையான பிரெட் சில்லி தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரெட் – 10 துண்டுகள்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
தக்காளி – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
காரட் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
சுவீட் கார்ன் – 4 டேபிள் ஸ்பூன் (அவித்து உதிர்த்தது)
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
கொத்த மல்லிப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி 3/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லி இலை – 2 கொத்து
வெண்ணைய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்
வெண்ணை – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
செய்முறை
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கச் சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
காரட்டை துருவிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி சதுரத்துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.
பிரெட் துண்டுகளின் இருபறமும் லேசாக வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.

பின்னர் அதனை தோசைக் கல்லில் இட்டு இருபறமும் லேசாக சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
சுட்ட பிரெட்டை சிறுதுண்டுகளாக வெட்டவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்.
அதனுடன் வெண்ணைய் சேர்த்து உருகியதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்.


அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை நீக்கும் வரை (ஒரு நிமிடம்) வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் துருவிய காரட் இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

அதில் தக்காளி சேர்த்து மசிந்ததும் அவித்து உதிர்த்த ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


அதில் மஞ்சள் பொடி, கரம் மசாலாப் பொடி, மல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறி ஒருநிமிடம் வதக்கவும்.

பின்னர் அதனுடன் 2 குழிக்கரண்டி தண்ணீர் சேர்த்து அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.

30 வினாடிகள் கழித்து வதக்கிய பிரெட் துண்டுகளைச் சேர்த்து மெதுவாக ஒருசேரக் கிளறி அடுப்பினை அணைத்து விடவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லி இலையைத் தூவவும்.

சுவையான பிரெட் சில்லி தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் குடைமிளகாயை நறுக்கி ஸ்வீட் கார்ன்னுக்கு அடுத்துச் சேர்த்து சில்லி தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!