மொபைல் சிணுங்கியது.
ராகவன் அதை எடுத்து உயிர்ப்பித்தார்.
லேடி டாக்டர் சௌந்தரம் பேசினார்.
“டாக்டர் வெரி வெரி சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். இந்த நேரத்துல உங்களை தொந்தரவு செய்யறேன்.”
“விஷயத்தைச் சொல்லுங்க சௌந்தரம்”
“ஒரு அம்மா ஐ.சி.யூ.வில அட்மிட் ஆயிருக்காங்க. அப்சர்வேஷன்ல வச்சிருக்கோம். பல்ஸ்ரேட் குறைஞ்சிக்கிட்டே வருது. நீங்க வந்து பார்த்தீங்கன்னா…”
“எவ்வளவு வயசு இருக்கும்? எப்போ அட்மிட் ஆனாங்க…?”
“அறுபத்தஞ்சு இருக்கும் டாக்டர். நைட் ஒன்பது மணிக்கு கேஸ் அட்மிட் ஆயிருக்கு”
“ஓ.கே. வந்து பார்க்கிறேன்.” இணைப்பை துண்டித்த ராகவன் மணியைப் பார்த்தார்.
இரவு 12.30.
ராகவனுக்கு இப்போது டூட்டி இல்லைதான். இதுபோல் எமர்ஜென்சி கேஸ் வரும்போது சிரமம் பார்க்காமல் அக்கறையுடன் சென்று கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
காரில் சென்று கொண்டிருந்த ராகவனின் மனம், வாழ்க்கையில் நடந்து முடிந்த கசப்பான அனுபவங்களை அசைபோட்டது.
ப்ளஸ் டூ முடித்தவுடன் மெடிக்கல் காலேஜில் படிப்பது குறித்து தந்தையுடன் வாக்குவாதம். தந்தைக்கு விருப்பமில்லை. மெரிட் அடிப்படையில் கிடைத்திருக்கும் சீட். வீணாக்க விருப்பமில்லை ராகவன்.
தந்தைக்கோ தன் விவசாயத் தொழிலுக்கு உதவுமே என நினைத்து விவசாயக் கல்லூரியில் சேர கட்டாயப்படுத்த, ராகவனின் பிடிவாதம் வீட்டை விட்டே வெளியேற்றிவிட்டது.
“என் கண் முன் நிற்காதே. இந்த வீட்டுப்படியை இனி மிதிக்காதே…” தந்தையின் கர்ஜிப்பு ராகவனின் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இளரத்தம், வைராக்கியம், டாக்டராக வேண்டும் என்ற வெறி.
நண்பர்கள் உதவியுடன் காலேஜில் சேர்ந்து ஸ்காலர்ஷிப்பில் படித்து முடித்து முதல் வகுப்பில் தேறி ‘சுகம் கிளீனிக்’கில் பயிற்சி டாக்டராகப் பணியாற்றி கைராசி டாக்டர் என பெயரெடுத்து, ஐந்நூறு டாக்டர்கள் சேர்ந்து நடத்தும் அந்த கிளீனிக்கின் சீஃப் டாக்டர் இன்று.
முப்பது வருடங்களில் ஒருமுறைகூட ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. தாய், தந்தை பற்றிய விபரம் எதுவும் தெரியாத நிலையில் திருமணம்கூட செய்து கொள்ளாமல் சமூக சேவையையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருவதை நினைத்துப் பெருமூச்சு விட்டார்.
கிளீனிக் வாசலில் ராகவனை எதிர்பார்த்து டாக்டர் சௌந்தரம் நிற்க, அவரோடு வேகவேகமாக ஐ.சி.யூ. வார்டுக்குள் நுழைந்து டாக்டர் சௌந்தரம் கைநீட்டிக் காண்பித்த பேஷண்டைப் பார்த்து அதிர்ந்தார் ராகவன்.
கனவா, நனவா எனப் புரியாத நிலையில், “அம்மா!” என சுற்றுச்சூழலையும் மறந்து வாய்விட்டு கத்தி விட்டார்.
மயக்க நிலையில் இருந்த பேஷண்ட் குரல் கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து ராகவனைப் பார்க்க, அருகில் நின்றுகொண்டிருந்த டாக்டர் சௌந்தரம், “டாக்டர் இவங்களை உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்க,
அம்மாவின் கையை பாசத்துடன் மெல்ல வருடியபடி, “டாக்டர், இவங்கதான் என் தாய். நான் படிச்ச டாக்டர் படிப்பு இப்பதான் எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கு. நான் எடுத்த பிறவியின் பயனை அடைஞ்சிட்டேன்…” என நெகிழ்ந்தார் ராகவன்.
அதன் பிறகு சொல்ல வேண்டுமா… தாயைக் காப்பாற்ற தேவையான சிகிச்சைகளை வெகு சிரத்தையுடன் மேற்கொண்டார் டாக்டர் ராகவன்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998