பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப் பூ நஞ்சா?

பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியை முதியவர் ஒருவர் கூறுவதை பச்சோந்தி பாப்பம்மா கேட்டது.

பழமொழியை பற்றி மேலும் ஏதேனும் கூறுகின்றனரா? என்று தொடர்ந்து முதியவர் கூறுவதை கவனிக்கலானது.

பெரியவர் சிறுவர்களிடம் “இந்தப் பழமொழி தோன்றிய விதத்தை பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்.

கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் தெனாலிராமன் என்ற விகடகவி இருந்தான். அவன் மிகுந்த புத்திசாலி.

ஒரு சமயம் அரண்மனையில் இருந்த அபூர்வ வகை ரோஜா மலர்கள் தினசரி களவு போயின. ரோஜா மலர்கள் களவு போவதாக அரசரிடம் தோட்டக்காரன் புகார் கொடுத்திருந்தான்.

அப்போது ஒருநாள் அரண்மனை தோட்டத்தில் தெனாலி ராமன் மகன் ரோஜா மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அங்கு வந்த காவலர்களிடம் தெனாலி ராமனின் மகன் மாட்டிக் கொண்டான்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலிராமன் மகனுடன் அவன் பறித்த பூக்களை ஒரு கூடையில் வைத்து வண்டியில் ஏற்றி அரண்மனைக்கு கொண்டு சென்றனர்.

வண்டி செல்லும் வழியில் தெனாலிராமன் வந்தான். காவலர்கள் அவனிடம் நடந்த விபரங்களைக் கூறி வண்டியில் இருந்த மலர் கூடையையும் அவனுக்குக் காட்டினார்கள்.

தெனாலிராமனும் சிரித்துக் கொண்டே “சரி சரி கொண்டு போங்கள்” என கூறிவிட்டு மகனைப் பார்த்தவர் “பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா” எனக்கூறிவிட்டு சென்றுவிட்டார்.

தெனாலிராமனின் மகன் யோசித்தான். ஒவ்வொரு பூக்களாக தின்ன ஆரம்பித்தான். வண்டி அரண்மனைக்கு சென்றது. அங்கு தெனாலிராமனும் இருந்தார்.

காவலர்கள் மன்னரிடம் விஷயத்தை கூறினார்கள். அரசரும் திருடனை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்,

திருடனாக தெனாலிராமன் மகனை கண்டதும் அரசர் துணுக்குற்றார். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு இவன் திருடிய மலர்களை கொண்டு வாருங்கள் என்றார்.

காவலர்கள் மலர் கூடையை கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் வெறும் கூடைதான் இருந்தது. மலர்கள் தான் தெனாலிராமன் மகனின் வயிற்றுக்குள் அல்லவா இருக்கிறது!

அரசர் அவனை விடுதலை செய்துவிட்டார். அன்றிலிருந்து இந்தப் பழமொழி வழக்கத்தில் மக்களால் பேசபட்டு வரலாயிற்று.” என்று பெரியவர் கூறினார்.

இதனைக் கேட்டவுடன் பச்சோந்தி பாப்பம்மா வட்டப்பாறையினை நோக்கிச் சென்றது. வட்டப்பாறையில் எல்லோரும் கூடியிருந்தனர்.

காக்கை கருங்காலன் எழுந்து “என் அருமைக் குட்டிகளே குஞ்சுகளே. உங்களில் யார் இன்றைக்கு பழமொழியைப் பற்றிக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

அப்போது அங்கு வந்த பச்சோந்தி பாப்பம்மா “தா..த்..தா இன்றைக்கு பழமொழியைக் கூறும் வாய்ப்பினைத் தாருங்கள்” என்று மூச்சுவாங்கக் கூறியது.

அதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “பச்சோந்தி பாப்பம்மா. நீ முதலில் சிறிது நேரம் இளைப்பாறிக் கொள். பின் கேட்டறிந்த பழமொழியைக் கூறு” என்றது.

சிறிது நேரம் இளைபாறிய பச்சோந்தி பாப்பம்மா “நான் இன்றைக்கு பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா என்ற பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் பற்றிக் கூறப்போகிறேன்” என்று தான் கேட்டறிந்த முழுவதையும் கூறியது.

காக்கைக் கருங்காலனும் “குழந்தைகளே பழமொழியைப் பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாளை மற்றொரு பழமொழி பற்றி தெரிந்து கொள்வோம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.