புதினா துவையல் என்பது சுவையானதும் சத்தானதும் ஆகும்.
புதினா இலை வாய்துர்நாற்றத்தை நீக்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். பசியினைத் தூண்டும். இரத்தத்தினை சுத்தம் செய்யும். உடல் எடையைக் குறைக்கும்.
புதினா இலைகளை அப்படியே வாயில் வைத்து மென்று தின்றால் வாய் புத்துணர்ச்சி அடைவதை உணரலாம்.
புதினா இலைகளைக் கொண்டு சுவையான துவையல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புதினா – ஒரு கைபிடி (சுத்தம் செய்தது)
கொத்தமல்லி – ஒரு கைபிடி (சுத்தம் செய்தது)
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)
புளி – சிறிய எலுமிச்சை அளவு
நிலக்கடலைப் பருப்பு – ஒரு கை பிடி
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
தேங்காய் – ½ மூடி (சிறியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் கொத்தமல்லி மற்றும் புதினாவை தண்ணீரில் அலசி வடிதட்டில் போட்டு வடிகட்டவும்.
வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
நிலக்கடலைப் பருப்பை தோல்நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி வைக்கவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் அலசி வைத்துள்ள கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
புதினா இலை பாதி வதங்கிய நிலையில் புளியைச் சேர்த்து வதக்கவும்.
புதினா இலையை முக்கால் பாகம் வெந்தபோது அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
இரு நிமிடங்கள் கழித்து நிலக்கடலைப் பருப்பைச் சேர்த்து வதக்கவும்.
ஓரிரு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும்.
பின் புதினாக் கலவையை நன்கு ஆறவிடவும்.
நன்கு ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து விடவும். சுவையான புதினா துவையல் தயார்.
இதனை கலவை சாத வகைகள், இரசம் சாதம், மோர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம். இத்துவையலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி செய்து தோசை, இட்லி, சப்பாத்தி வகைகளுடனும் உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகாய் வற்றல் சேர்த்தும் துவையல் தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!