புதிய வழித்தடம் – சிறுகதை

கொடிக்கால்பாளையம் என்று ஒரு சிறிய ஊர். ஊரை சுற்றி வயல்வெளிகள் இயற்கை எழில் குறையாமல் செழித்து இருந்தது.

வயலின் ஓரத்தில் வெட்டாறு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும். அவ்வப்போது ஆறு பெருக்கெடுத்து கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் வருவது உண்டு.

ஊருக்கு சற்று தள்ளி ஒரு மாந்தோப்பில் சிறிய கூரை வீட்டில் ஒரு தம்பதியினர் குழந்தைகளுடன் வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு அந்த தோட்டத்தை பாதுகாப்பதுதான் வேலை. இந்த தோட்டத்தில் உள்ள மா மரங்களையும் தென்னை மரங்களையும் குத்தகைக்கு தானே எடுத்து கொள்வார்கள்.

தேங்காய் மாங்காய்களை விற்று குத்தகை தொகையை செலுத்தி விடுவார்கள். மீதத்தை வைத்து குடும்பம் நடத்துவார்கள்.

மற்ற நாட்களில் வெளியில் சென்று கிடைத்ததை வாங்கியும் விற்றும் வருவார்கள். இப்படியுமாக கழிந்தது கழிந்தது.

ஒருசமயம் மழைக்காலம் ஆரம்பித்தது. இரவும் பகலும் மழை ஓயாமல் பெய்து கொண்டிருந்தது.

அவர்களால் பிழைப்புக்குப் போக முடியவில்லை. கையில் இருந்த காசும் செலவாகி விட்டது. குழந்தைக்கு பால் வாங்க கூட முடியவில்லை.

இருவரும் மழை எப்போது விடுமென்று பார்த்துக் கொண்டிருந்தனர். மழை விட்டபாடில்லை.

“இருந்த பருப்பு, மல்லி, மிளகு எல்லாம் சரியா போச்சு. இன்னைக்கு சமைச்சதோட அரிசியும் காலியா போச்சு. மழை வேற விடாம பெஞ்சுகிட்டு இருக்குது. இப்படியே பெஞ்சிகிட்டு இருந்தா இரண்டு புள்ளைங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறோம்னு தெரியலையே” என்றார் மனைவி.

கணவர் “இருக்கட்டும் நம்மள படைத்த கடவுள் விடமாட்டார். விடிகிற பொழுது நல்ல பொழுதாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு இருவரும் குழந்தைகள் அருகில் படுத்துக் கொண்டார்கள்.

அன்று இரவு மழையுடன் காற்றும் அது பங்குக்கு சேர்ந்துகொள்ள இடியும் மின்னலும் ஒத்து ஊத கச்சேரி ஆரம்பம் ஆனது.

நள்ளிரவு ஒரு மணி அளவில் தொடர்ந்து பெய்த மழையினால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது.

காற்று பலமாக அடிக்க மாமரத்தின் கிளை அவர்கள் வீட்டின் கூரை மீது விழுந்தது.

அவர்கள் இருவரும் கையில் பட்டதை எடுத்து சைக்கிளில் வைத்து கட்டிவிட்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு தட்டுத்தடுமாறி ஊருக்குள் வந்தனர்.

ஒரு வீட்டுத் திண்ணையில் இரவெல்லாம் விடிய விடிய உட்கார்ந்து இருந்தார்கள். இருந்த உடமைகள் எல்லாம் மழையோடு போய்விட, இரவெல்லாம் பேய் ஆட்டம் ஆடிய புயல் பொழுது விடிய ஆரம்பித்ததும் அடங்க தொடங்கியது.

“சரி, சரி பொழுது விடிய தொடங்கிடுச்சி. பொழுது பள பளன்னு விடியும் பொழுது நாம் இந்த ஊருக்குள்ளேயே இருக்கக்கூடாது.” என்று சொல்லிவிட்டு பெரிய குழந்தையை தன் தோளில் வைத்துக் கொண்டு சைக்கிளை தள்ள கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி தன் கணவன் பின் நடந்தார் அவருடைய மனைவி.

அவர்கள் நாடோடியாக ஊரை சுற்ற ஆரம்பித்தார்கள். பாதை எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்வார்கள். பகலெல்லாம் நடப்பார்கள். இரவு நேரங்களில் ஒரு மரத்தடியில் தங்கி விடுவார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாள் இரண்டு நாள் தங்குவார்கள். அங்கே ஏதேனும் பொழப்பு கிடைத்தால் செய்வார்கள். இல்லையென்றால் நடந்து கொண்டே இருப்பார்கள்.

போகும் பாதையில் ஊரை ஒட்டி பெரிய மரம் இருந்தால் மரத்தினடியில் சுத்தம் செய்துவிட்டு தங்கி விடுவார்கள்.

காலையில் எழுந்து மனைவி குழந்தைகளை மரத்தடியில் விட்டுவிட்டு செலவுக்கு காசு கொடுத்துவிட்டு அவர் வியாபாரத்துக்கு சென்று விடுவார்.

பெரிய ஊர் பெரிய கடைத்தெரு என்றால் அங்கு சென்று பூண்டு, வெங்காயம் என்று எடுத்துக்கொண்டு வந்து வியாபாரம் செய்வார்.

போகும் ஊரில் கடற்கரை இருந்தால் அங்கு மீன் வாங்கி வியாபாரம் செய்பவர். எதுவும் இல்லை என்றால் பழைய இரும்பு வியாபாரம் செய்வார்.

போறதெல்லாம் ஊர் பாக்குறதெல்லாம் வேலை என்று அவர்கள் சென்று கொண்டு இருந்தார்கள்.

ஊர் ஊராக, மாவட்டம் மாவட்டமாக, மாநிலம் மாநிலமாக இப்படியுமாக பல நாட்கள் பல மாதங்கள் பல வருடங்கள் என உருண்டோடின.

அவர்கள் உலகை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். குழந்தைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள்.

‘தேர் எங்கு சுத்தினாலும் ஒருநாள் நிலையடிக்கு வந்தாகணும்’ என்ற பழமொழிக்கு இணங்க அவர்கள் ஓர் நிலையடியை தேடி வந்து கொண்டே இருந்தார்கள்.

சிதம்பரம், மாயவரம், பேரளம் என்று பாதை தொடர்ந்து கொண்டே இருக்க. இவர்களும் பிள்ளைகளுடன் நடந்து கொண்டே இருந்தார்கள்.

பேரளம் ரயில்வேகேட் வேகத்தடை அருகே வந்ததும் எதிரே சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி ஒரு லாரி வந்தது.

சைக்கிளை ஒரு ஓரமாக சாய்த்து நிறுத்திவிட்டு குழந்தைகளை அம்மாவுடன் பத்திரமாக இருக்க சொல்லி விட்டு ஓடிப்போய் லாரியின் பின்புறத்தில் ஏறினார். லாரி வேகத்தடையை கடந்து சென்றது.

சிறிது தூரம் சென்று ஒரு வளைவில் திரும்ப, லாரியில் இருந்து கீழே இறங்கினார். கையில் இரண்டு கரும்பு இருந்தது.

கையிலிருந்த கரும்பை குழந்தைகளிடம் ஆளுக்கொன்றாக கையில் கொடுத்துவிட்டு. சைக்கிளை தள்ள சக்கரங்கள் சுழல தொடங்கின.

மாலை 6 மணி இருக்கும் பொழுது இருட்ட தொடங்கியதும் ஓரிடத்தில் சைக்கிள் நின்றது. அந்த இடம் பழைய அம்பகரத்தூர்.

தெருவின் நுழைவாயிலில் ஆர்ச் மாதிரியான வளைவு இருந்தது. ஒதுக்குப்புறமாக மரம் ஏதும் கிடைக்கவில்லை.

மாறாக பூட்டிய வீட்டின் திண்ணை கிடைத்தது. அங்கு அக்கம், பக்கத்தினரிம் சொல்லிவிட்டு அன்று இரவு தங்கினர்.

நேரமாகி விட்டது. கல்லு கூட்டி சமைக்க நேரமில்லை. போவோரும் வருவோரும் வேடிக்கை பார்த்து செல்ல அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள பெண்கள் வந்து அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தார்கள்.

“ஏன்மா எங்கிருந்து வரீங்க? அம்மா நாங்க ஊர் ஊரா சுத்தி பொழப்பு தேடி நாடோடிகள சுத்திட்டு இருக்ககோம். இன்று இரவு இந்த ஊரு. நாளைய பொழுது ஆண்டவன் எங்க வச்சிருக்கானோ எப்படியோ தெரியல …”

ஊர் பெண்கள் “அடப்பாவமே, இந்த ரெண்டு பிள்ளைங்கள வெச்சிகிட்டு ஊரு ஊரா சுத்தரிங்கலே. ஆமாம் இந்த குழந்தைகளுக்கு எல்லாம் சாப்பாடு கொடுத்திட்டிங்களா? இரவு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க .” என்றனர்.

“அம்மா இதுக்கு மேல விரவு பொறுக்கி சமைக்க முடியாது. கடைக்கு போயி ஆளுக்கு ரெண்டு இட்லி வாங்கிட்டு வரணும்” என்று அம்மா சொன்னார்.

பக்கத்து வீட்டு பெண்கள் “இருங்க இருங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போனார்கள்.

சிறிது நேரத்தில் கொஞ்சம் சாப்பாடு, குழம்பு, இட்லி தோசை என்று ஆளுக்கொன்றாக கொண்டுவந்து கொடுத்தனர். அவர்கள் அனைவரும் சாப்பிட்டுப் படுத்தனர்.

காலையில் பொழுது விடிந்தது. டீயும் வரூக்கியும் சாப்பிட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

மறுநாள் காலை நீலக்கிடங்கு வீதியில் பூட்டிய கார்செட் வாசலில் கண் விழித்தார்கள். சைக்கிள் சுவற்றில் சாய்ந்து நின்றது.

“புள்ளைங்கள பத்தரமா பாத்துக்க . இங்கே காத்தா புள்ள கோடியில் வேலைக்கு ஆள் எடுக்கிறார்களாம். நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவர்களின் அப்பா போய்விட்டார்.

சிறுவர்கள் இருவரும் அங்கு ஓடிக் கொண்டிந்த சாக்கடையில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அம்மா சாலையோரத்தில் கல்லைக் கூட்டி சமைத்துக் கொண்டிருந்தார்.

மாலை 5 மணி அளவில் அவர்களின் அப்பா கையில் இரண்டு பையுடன் வந்தார். ஒரு பையில் காய்கறி, கருவாடு, அரிசி என்று இருந்தது.

இன்னொரு பையில் மிச்சர், இனிப்புசேவு, பக்கோடா பொட்டலம் என்று இருந்தது. ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டனர்.

இப்படி ஓரிரு வாரங்கள் சென்றன. அந்தத் தெருவில் ஒரு நான்கைந்து வீடுகள் தாண்டி ஒரு வீட்டில் முறுக்கு மீசையுடன் ஒரு பெரியவர் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தர்.

ஒருநாள் அவர்களின் அப்பாவை அழைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை சைக்கிளில் தட்டுமுட்டு சாமான்கள் ஏற்றப்பட்டன. சிறுவனை அவனுடைய அப்பா தோளில் ஏற்றிக் கொண்டார்.

சைக்கிள் நகர்ந்தது. சிறுமியும், அவர்களுடைய அம்மாவும் பின்தொடர்ந்தனர்.

ஒரு மணி நேர நடைக்கு பிறகு தலைதெருவில் உள்ள முருகு தோட்டத்தின் வாசல் கேட் அருகே வண்டி நின்றது.

சிறிது நேரத்தில் முறுக்கு மீசையுடன் அந்த பெரியவர் பைக்கில் வந்து கேட்டை திறந்து விட்டார். உள்ளே சென்றனர்.

பெரிய தோட்டம் காடு போன்று இருந்தது. உள்ளே தகர சீட் போட்ட ஒரு வீடு இருந்தது.

வீட்டின் கதவு திறக்கப்பட்டு அவர்களின் அப்பாவிடம் பேசிவிட்டு சாவி கொடுக்கப்பட்டது. அப்பா வாட்ச்மேன் ஆனார்.

கொல்லையில் ஒரு குளமும் ஆறு மாமரம், இரண்டு நாவல் மரம், ஒரு பலா மரம், மூன்று தென்னை மரம், ஒரு இலந்தை மரம், வேப்ப மரம் நெல்லி மரம் என்று பலவகை மரங்கள் இருந்தன.

அதுமட்டுமல்ல செடிகளும் கொடிகளும் சேர்ந்து காடாக மண்டிக் கிடந்தன.

அதை சுத்தம் செய்வதும் கொல்லையைப் பாதுகாப்பதும் தான் இவர்களின் வேலை. மாதம் 200 ரூபாய் சம்பளம், பாண்டிச்சேரியில் இருந்து மணி ஆர்டரில் வரும்.

மா மரங்கள் காய்க்கும் காலங்களில் அவர்களே குத்தகைக்கு எடுத்துக் கொள்வார்கள். சிறுவர்கள் நன்றாக மரமேறுவார்கள்.

மரம் ஏறி மாங்காய்களை பறித்து கொடுப்பார்கள். அப்பா வெளியில் சென்று வியாபாரம் செய்வார்.

தோட்டத்திற்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஓட்டு வீடு. அதில் விஏஓ குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

இங்கிலீஷ் கான்வென்ட்டில் படித்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் புதிதாக வந்தவர்களிடம் அன்பாக பழகினார்கள்.

ஒருநாள் விஏஓ அவர்களின் அப்பாவிடம் பேசினார். “என்ன பாய் இப்படியே போயிட்டு இருந்தா என்ன செய்றது? உங்க புள்ளைங்க வளர்ந்துட்டாங்க. புள்ளைங்கள பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டாமா?”

“எங்க சார், சம்பாதிக்கிறது வயிற்றுக்கும் வாய்க்கும் சரியா இருக்குது. எங்களிடம் ரேஷன் கார்டும் இல்லை. என்ன செய்யறதுன்னே தெரியல.”

“என்ன பாய் இத முன்னாடியே என்கிட்டா சொல்ல வேண்டாமா? இத்தனை மாசமா எங்களிடம் பழகுறீங்க. சரி நாளைக்கு என் ஆபீசுக்கு வாங்க”

அதன் பின் ஒரு சில தினங்களில் ரேஷன் கார்டு கிடைத்து விட்டது.
பிறகு ஒரு நல்ல நாளில் விஏஓவின் உதவியுடன் சிறுவர்கள் இருவரும்
தலைத்தெருவில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் சேர பர்த் சர்டிபிகேட் தேவை இல்லை. வலது கையால் இடது காதைத் தொட வேண்டும். அவ்வளவுதான்.

சிறுவர்கள் இருவரும் நன்றாக படித்தனர். இப்படியே ஒரு சில வருடங்கள் சென்றன.

சிறுமி மூன்றாம் வகுப்பு வரை தான் படித்தாள். சிறுவன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தான்.

ஒருநாள் முறுக்கு மீசை பெரியவருக்கும் சிறுவர்களின் அப்பாவுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு, மனக்கசப்பு வந்துவிட்டது.

சைக்கிள் திரும்பியது. நடைப்பயணம் தொடர்ந்தது. அதே நீலகிடங்கு வீதி , அதே கார்செட் வாசல். இம்முறை இரண்டு தினங்கள் தான்.

ஒரு இஸ்லாமிய பெரியவர் அதிகாலையில் பள்ளியில் தொழுது விட்டு அவ்வழியே வந்தார். அவர்களின் அப்பாவிடம் பேசினார்.

“உங்கள பார்த்தா இஸ்லாமியர் மாதிரி தெரியுது. ஏன் இந்த புள்ளைங்கள வச்சிக்கிட்டு கஷ்டப்படுரிங்க. என் ஊர் திட்டச்சேரி.

திட்டச்சேரி என்றாலே வந்தாரை வாழவைக்கும் சிங்கார திட்டச்சேரி என்பார்கள். அந்த ஊருக்கு வாங்க. உங்களுக்கு தங்கவும் பிழைக்கவும் நான் வழி காட்டுகிறேன்” என்றார்.

திரும்பவும் சைக்கிளின் சக்கரம் சுழன்றது திட்டச்சேரியை நோக்கி.

அன்று சாயங்காலமே திட்டச்சேரி வந்து சேர்ந்தனர். பெரியவர் சொன்னது போல் இஸ்லாமிய ஜமாத்தினரிடம் பேசி வேலையும் வாங்கித் தந்தார்.

இறந்தவர்களை அடக்கம் செய்யும் வேலையும் ஒரு இருப்பிடமும் கிடைத்தது. சிறுவனை ஒரு டீக்கடையில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்த்து விட்டார்.

சிறுவனுக்கு சில வருடங்களில் டீ மாஸ்டராக பதவி உயர்வு கிடைத்தது. சிறுமி பெரியவளானதும் மணமுடித்து கொடுத்தார்கள்.

அந்தக் குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டது வந்தாரை வாழவைக்கும் சிங்கார திட்டச்சேரி.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு