புதிர் கணக்கு – 15

“இதோ அடுத்த கணக்கினை நோக்கி நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. கவனமாக கேளுங்கள்” என்று அறிவித்த மந்திரியார் நரி தொடர்ந்து பேசலானார்.

“நம் காட்டை சுற்றிலும் வேலி அமைக்க நினைத்த நமது அரசர் அதற்கென ஒரு குழுவினை ஏற்படுத்தினார். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் வேலையை துவக்கினர்.

வேலி போடும் வேலை முடிய 6 நாட்கள் ஆனது. அக்குழுவின் தலைவர் நமது அரசரிடம் கூறும் போது 8 பேர் உடல் நலக் குறைவால் இப்பணியில் கலந்து கொள்ளவில்லை.

அவர்களும் வந்திருந்தால் இந்த வேலை 5 நாட்களில் முடிந்திருக்கும் என்று கூறினார். அப்படியானால் மொத்தம் எத்தனை பேர் வேலைக்கு வந்தார்கள் என்பது தான் கேள்வி” என்று கூறினார்.

“நன்றாக யோசித்து விடை கூறுங்கள் விடை கூறிய பின்பு அனைவரும் மதிய உணவுக்குச் செல்லலாம்” என்றார்.

அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சேவகன் கழுதை காங்கேயனை அழைத்து “உணவுச் சாலையில் உணவு தயாராக உள்ளதா?” என்று பார்த்து வா என அனுப்பி வைத்தார்.

சிறிது நேரத்திற்கு பின் குட்டி எலி எலிக்கண்ணன் எழுந்து மெதுவாக ஒரு பதிலை கூறியது.

“வேறு யாராவது இருக்கிறீர்களா? என்று கேட்ட பின்பு எழுந்த சீனியப்பனும் ஒரு விடையை கூறியது.

“இருவர் மட்டும் தானா வேறு யாருமில்லையா? என்று மீண்டும் கேட்க யாரும் எழாததால் மந்திரியார் தொடர்ந்தார். “எலிக்கண்ணனும் சீனியப்பனும் கூறிய விடைகள் மிக மிகச் சரியானவேயே! அவர்களை பாராட்டுங்கள் இருவருக்கும் தலா 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இப்போது அனைவரும் உணவுச் சாலைக்குச் செல்வோம் அங்கு தயாராகி இருக்கும் உணவை உண்ட பின்பு மீண்டும் கூடலாம்” என்று கூறிய மந்திரியார் அரண்மனையின் உணவுச் சாலையை நோக்கி நடக்க அனைவரும் பின் தொடர்ந்தனர் அவர்களுக்கு பின் சேவகன் கழுதை காங்கேயனும் தொடர்ந்து சென்றது.

அரண்மனை விருந்தை ஆளுக்கு ஒரு பிடி பிடித்தனர். அவர்களுடன் அரசரும் கலந்து கொண்டதால் அங்கு ஒரு அமைதி நிலவியது.

“என்ன குழந்தைகளே நன்றாக பதில் கூறுகின்றீர்களா? அதிகமான மதிப்பெண்கள் வாங்குபவர்க்கு நாளை மறுநாள் நடைபெறும் விழாவில் பரிசும் பாராட்டும் கிடைக்கும்” என்று அனைவரையும் பார்த்து கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

அதன் பின்னே அனைவரும் மீண்டும் தமது வழக்கமான இடத்தில் கூடினார்கள்.

“இந்த புதிருக்கு சரியான விடையை எலிக் கண்ணனும் சீனியப்பனும் கூறினார்” என்று அறிவிப்பை கேட்டு இருவருமே மேடைக்கு வந்தனர்.

“யாராவது ஒரு ஆள் போதுமே!” என்ற வெட்டுக்கிளியின் வேண்டுகோளை கேட்டு சீனியப்பன் பின்வாங்க எலிக்கண்ணன் மேடையெறி பேச ஆரம்பித்தது.

ஐயா, இந்த புதிரில் வேலிபோடும் குழுவினர் 8 பேர் வராததால் 6 நாட்களில் பணியை முடித்தனர் என்றும் அவர்களும் வந்தால் 5 நாட்களில் முடியும் என்றும் கூறப்பட்டது.

வேலைக்கு வந்த நபர்களின் எண்ணிக்கை X என்போம். 

அவர்கள் ஆறு நாட்கள் வேலை செய்தார்கள் என்றால் மொத்த உழைப்பு 6X எனலாம்.

8 நபர்கள் அதிகம் வந்திருந்தால் 5 நாள்களில் மொத்த உழைப்பு 5 x (X+8) எனலாம்.

இரண்டும் சமம் என அறிகிறோம். எனவே

                      6X = 5 x (X+8)   

                      6X = 5X + 40

                      6X-5X = 40

                     X = 40         

எனவே மொத்தம் வேலை செய்தவர்கள் 40 பேர் என்று அறிந்து விடையை கூறினேன்” என்று எலியார் விடையை கூறியது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.