புதிர் கணக்கு – 18

சேவல்

“அடுத்த புதிரை நோக்கி நாம் அனைவரும் செல்வோமா?” என கேட்ட நரியார் தொடர்ந்தார்”.

நம் காட்டில் வாழும் அணில் அன்னாச்சாமியின் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் இப்போது நினைவிற்கு வருகிறது.

அன்னாச்சாமியின் தாத்தாவிற்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் மூவரும் ஒவ்வொரு பிள்ளைகளை வைத்திருந்தனர். தாத்தா சில கொட்டைகளை கொண்டு வந்தார்.

முதலாவது மகன் இந்த கொட்டைகளை கண்டான். தன் மகனுக்கு ஒன்றை தின்ன கொடுத்துவிட்டு மீதியை 3 பங்காக்கி ஒரு பங்கை தனக்கு எடுத்து சென்று விட்டான்.

பின்னர் மற்றொரு மகன் வந்தான் கொட்டைகள் இருப்பதை கண்டது தானும் தன் மகனுக்கு ஒன்றை கையில் கொடுத்துவிட்டு மீதி இருப்பதை 3 பங்காக்கி ஒரு பங்கை தனக்கு எடுத்து சென்று விட்டான்.

பிறகு வந்த அன்னாச்சாமியின் தந்தையும் தன் மகன் அன்னாச்சாமிக்கு ஒன்றை தந்து விட்டு மீதமுள்ள கொட்டைகளை 3 பங்காக்கி 1 பங்கை எடுத்துச் சென்றுவிட்டார்.

“அன்னாச்சாமியின் தாத்தா வீடு வந்து பார்த்தால் மீதம் 6 கொட்டைகள் மட்டுமே இருந்தன என்றால் அணில் தாத்தா கொண்டுவந்த மொத்த கொட்டைகள் எத்தனை இதுதான் கேள்வி” என்று கூறி அமர்ந்தார்.

பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே காட்டெருமை கனகன் விடை கூறியது அதன் பின்னர் எழுந்த கொண்டை சேவலின் மகன் சங்கு நிறத்தான் ஒரு விடையை கூறியது.

“சங்கு நிறத்தான் கூறிய விடை மட்டுமே சரியானது; கனகன் கூறியது தவறான விடையாகும். எனவே சங்கு நிறத்தான் மட்டுமே பத்து மதிப்பெண்கள் பெறுகிறது” என்று அறிவித்த மந்திரியார், “அனைவரும் சங்கு நிறத்தானை உற்சாகப்படுத்துங்கள்” என்று கூறியதும் கை தட்டல் பலமாக இருந்தது.

சங்கு நிறத்தானும் வந்து விளக்கம் சொல்ல ஆரம்பித்தது.

 

அணிலின் 3 குழந்தைகளை பற்றிய புதிரில் ஒவ்வொன்றும் மூன்றில் ஒரு பகுதியும் அதிகமாக ஒன்றும் எடுத்துச் சென்றதாகவும் மீதி 6 இருந்தது என்றும் கூறப்பட்டது.கடைசியாக இருந்த பழங்கள் 6 (3-ல் 2-பங்கு)

அன்னாசாமியின் தந்தை எடுத்த பழங்கள் 3 (3-ல் 1-பங்கு)

அன்னாசாமிக்கு கொடுத்த பழத்தையும் சேர்த்தால் மொத்த பழங்கள் 10 (6 + 3 + 1 = 10)

அதாவது அன்னாசாமி தந்தை எடுக்கும் முன்பு இருந்த பழங்கள் = 10

 

இரண்டாவது மகன் எடுத்தது போக இருந்த பழங்கள் 10 (3-ல் 2-பங்கு)

இரண்டாவது மகன் எடுத்த பழங்கள் 5 (3-ல் 1-பங்கு)

இரண்டாவது மகனின் பேரனுக்கு கொடுத்தையும் சேர்த்த மொத்த பழங்கள் 16 (10 + 5 + 1 = 16)
இரண்டாவது மகன் எடுக்கும் முன்பு இருந்த பழங்கள் 16

 

முதலாவது மகன் எடுத்தது போக இருந்த பழங்கள் 16 (3-ல் 2-பங்கு)

முதலாவது மகன் எடுத்த பழங்கள் 8 (3-ல் 1-பங்கு)

முதலாவது மகனின் பேரனுக்கு கொடுத்தையும் சேர்த்த மொத்த பழங்கள் 25 (16 + 8 + 1 = 25)

ஆக மொத்தம் அன்னாசாமியின் தாத்தாவிடம் இருந்த மொத்த பழங்கள் 25 இருந்தன என கணக்கிட்டு விடை கூறினேன் என தனது விளக்கத்தை அளித்து விட்டு சங்கு நிறத்தான் சென்றுவிட்டது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

Visited 1 times, 1 visit(s) today