புதிர் கணக்கு – 29

புறாக்கள்

“அன்பான உள்ளுர்காரர்களே! இதோ எங்களுடைய இரண்டாவது புதிரை இப்போது கூறுகிறேன். கவனமாகக் கேளுங்கள்” என்று ஆரம்பித்தது செஞ்சிவப்புக் கிளி.

“ஐயா, இப்போது ஒரு புதுமையான கணக்கை நான் கூறுகிறேன்.

ஒரு காட்டில் பல்வேறு பறவைகள் வசித்து வருகின்றன. அங்கு ஒரே மரத்தில் நூறு புறாக்கள் வாழ்ந்து வந்தன.

ஒரு வேடன் வேட்டையாட எண்ணித் தன்னிடமுள்ள ஒரு பயங்கரமான ஆயுதத்தால் “டமார்” என்ற சத்தத்தை உண்டாக்கி ஒரு புறாவைச் சாகடித்து விட்டான் என்றால் மீதி எத்தனை புறாக்கள் அங்கு இருக்கும் என்பதே கேள்வி” என்று செஞ்சிவப்புக் கிளி கேட்டது.

“மீதி தொண்ணூற்று ஒன்பது புறாக்கள் இருக்கும்” என்று உடனே பதில் கூறிய குறுமணி “இது கூடவா தெரியாது” என்று கேலியாகச் சிரித்தது.

“வேறு யாராவது பதில் கூறுகின்றீர்களா?”என்று செஞ்சிவப்புக் கிளி மீண்டும் கேட்டதும் கரிகாலன் கழுகு யோசிக்க ஆரம்பித்தது. மற்ற உள்ளுர் பறவைகளும் யோசித்தது.

“என்ன குறுமணி சொன்னது சரிதானே” என்றது பருந்து பாப்பாத்தி. குருவி சின்னான் ஒன்றும் தெரியாக அப்பாவி போல அமைதியாக இருந்தது.

“99பறவைகள் தான் மீதி இருக்கும்” என்று காக்கை கருப்பனும் கூறியது.

“தவறு நண்பர்களே தவறு” என்று கூறிய செஞ்சிவப்புக் கிளி தனது புதிருக்கான விடையையும் அதற்கான விளக்கத்தையும் கூறியது. அதனைக் கேட்ட உள்ளுர்ப் பறவைகள் வெட்கித் தலை குனிந்தன.

“டேய் சின்னான்! நீயாவது சரியான பதிலைச் சொல்லியிருக்கலாமே!” என்று பருந்து பாப்பாத்தி கேட்டது.

“எனக்கென்ன தெரியும் நான் சின்னப் பையன் தானே!” என்று பதில் கூறிவிட்டு அங்கு நிற்காமல் சின்னான் பறந்து சென்று விட்டது.

“ஒரு வேட்டைக்காரன் நூறு புறாக்கள் இருந்த இடத்தில் தனது ஆயுதத்தால் ஒன்றைக் கொன்றுவிட்டால் மீதி எத்தனை இருக்கும்? ” என்று கேட்டது.

“பயத்தால் பிற புறாக்கள் பறந்து விடுமே; எனவே ஒன்றும் அங்கே இருக்காது” என்று கிண்டல் செய்து கூறிவிட்டு அடுத்த புதிரை கூற ஆரம்பித்தது.