குயில் குப்பம்மாள் எழுந்து புதிரைக் கூற ஆரம்பித்தது.
“ஐயா கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நானும் என் நண்பன் மயில் மாதவியும் ஒரு சமயம் ஒரு பழத்தோட்டத்தில் சந்தித்துக் கொண்டாம்.”
அங்கு உயரமான கிளைகள் அடர்ந்த மரங்கள் நிறைந்து இருந்தன. எனவே நான் மரத்தில் இருந்து பழங்கள் பறிப்பது என்றும் மயில் மாதவி அவற்றைப் பொறுக்குவது என்றும் முடிவு செய்து கொண்டோம்.
ஆனால் பறித்துப்போடும் எனக்கு இரண்டு பங்கும் எடுத்து வைக்கும் மயிலுக்கு ஒரு பங்கும் என்றும் முடிவு செய்து கொண்டோம்.
நானும் சில பழங்களைப் பறித்துப் போட்டேன். மயில் மாதவியும் அவற்றைச் சேகரித்து எடுத்து வைத்திருந்தது. ஒப்பந்தப்படி எனக்கு இரண்டு பங்கும் மயிலுக்கு ஒரு பங்கும் எனப் பிரித்துக் கொண்டோம்.
ஆனால் மயில் மாதவி என்னிடம் கெஞ்சிக் கேட்டு எனது பங்கில் ஒரு பழத்தைப் பற்றிக் கொண்டது. பின்னர் பார்த்தால் இருவரிடமும் சமமான அளவு பழங்கள் இருந்தன.
அப்படியானால் நான் பறித்த பழங்கள் எத்தனை என்பது தான் கேள்வி” என்று குயில் கேட்டது.
“என்ன குயில் குப்பம்மாவின் புதிருக்கு மயில் மாதவியாவது சரியான விடையைக் கூறுமா?” என்று கேட்டது பருந்து பாப்பாத்தி.
“நான் குயிலுடன் அந்தப் பழத்தோட்டத்தை நோக்கிச் சென்றதும் உண்மை. பழங்கள் பறித்ததும் உண்மை. அவற்றைப் பங்கு பிரித்துத் தின்றதும் உண்மை. ஆனால் எத்தனை பழங்கள் பறித்தோம் என்பதையும் மறந்து விட்டேன். இப்ப என்ன செய்ய முடியும்?” என்று மயில் மாதவி வருந்தியது.
“சரி வேறு யாராவது விடையைக் கூற முயற்சி செய்யலாமே” என்று கரிகாலன் கழுகு கேட்டது.
“ஏன் வெளியூர்க்காரங்களை மட்டும் கேட்க வேண்டியதுதானே? எங்களைப் பார்த்து ஏன் கேட்கிறீர்கள்?”என்று கிளி கீதம்மா கேட்டது.
“ஆமாம் அதுவும் சரிதான். வெளிநாட்டுப் பறவைகள் மட்டும்தானே பதில் சொல்லவேண்டும். அதற்காகத்தானே இதையே உருவாக்கினோம்.” என்று கரிகாலன் கழுகு ஒத்துக் கொண்டது.
“பிறகு என்ன அவர்களைப் போய்க் கேளுங்கள்!” மயில் மாதவியும் தன் பங்காகக் கூறியது. இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவைகள் சற்று திகைத்தன. என்ன செய்வது என்பதை அறியாது விழித்தன.
“அந்தச் சிட்டுக்குருவி சின்னான் இருந்தால் எப்படியாவது விடையைச் சொல்லிக் கொடுத்து நம்மை தப்பிக்கச் செய்வான். இப்போது அவனையும் காணோமே என்ன செய்வது?” என்று புலம்பியது வெளிநாட்டு செஞ்சிவப்புக் கிளி.
“குருவி தலையில் பனங்காயின்னு சும்மாவா சொன்னாங்க? அவனோ ரொம்ப சின்ன பொடியன். ஏதோ அவன் யோகம் இது வரைக்கும் அவன் சொன்னதெல்லாம் சரியா இருந்தது. அவனால் இந்த மாதிரி கடினமான புதிருக்கெல்லாம் விடையைக் கூற முடியுமா என்ன?” என்று புல்புல் பறவை குத்தல் மொழியில் பேசியதும் கோபம் கொண்ட செஞ்சிவப்புக் கிளி பதில் கூறியது.
“குருவி தலையில்தான் பனங்காய் வைக்கமுடியாது புல்புல்லாவது அதைச் சுமக்கலாம் அல்லவா” என்றதும் புல்புல் பறவை அமைதியாகத் தலையைக் குனிந்தவாறு அமர்ந்துவிட்டது.
வெளிநாட்டுப் பறவைகளின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஆந்தை அருக்காணி வெளிநாட்டுக்காரரின் இயலாமையை எண்ணிப்பார்த்து “பாவம் இவர்கள் பதில் சொல்லவில்லை என்றால் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றல்லவா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. விடையை யாருமே கூறவில்லையென்றால் அவர்களின் கதி என்னாகும் அவர்கள் குழந்தைகளின் கதி என்னவாகும்” என்று நினைத்து வருந்தியது.
சிறிது வருத்தத்துடன் யோசித்த ஆந்தை அருக்காணி தனது பொந்தில் இருந்தவாறே பேசியது.
“நண்பர்களே இந்தப் புதிருக்கான விடையை நான் கூறலாமென்று நினைக்கின்றேன். அனைவருக்கும் சம்மதமா?”என்று கேட்டது.
“அதனாலென்ன சரியான பதிலைக் கூறினால் அடுத்த புதிரைச் சொல்ல வசதியாக இருக்குமல்லவா? அதனால் நீங்களே விடையைச் சரியாக சொல்ல நினைத்தால் சொல்லலாம்” என்று கரிகாலன் கழுகு சொன்னதும் அருக்காணி ஆந்தை ஏதோ ஒரு பதிலைக் கூறியது.
“சரியான விடைதான் ஆந்தை அருக்காணி கூறியது” என்று குயில் குப்பம்மாள் ஒத்துக் கொண்டது.
குயில் தனது கேள்வியாக மயிலும் அதுவும் பழம் பறித்ததையும் பறித்தவனுக்கு இருபங்கு, பொறுக்கிய மயிலுக்கு ஒரு பங்கு என்று பிரித்ததாகவும், குயிலிடம் மயில் 1 பெற்றால் சமம் என்றும் சொன்னது.
அதன்படி மயிலுக்கு 2 பழங்களும் குயிலுக்கு 4 பழங்களும் வந்ததாகவும் குயிலிடம் மயில் 1 பழத்தை பெற இருவரிடமும் சமமாக இருந்தன எனவே மொத்தம் குயில் பறித்த பழங்களின் எண்ணிக்கை 6 என ஆந்தை அருக்காணி விடை கூறியது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)