புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்கக் கூடிய ஆற்றல் ஆகும்.

இவ்வகை ஆற்றலானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல், பூமி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், நீர்மின்சாரம், காற்று ஆற்றல், உயிர்த்திரள் ஆற்றல் மற்றும் உயிர்எரிபொருள் ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது பெரும்பாலும் மின்சார உற்பத்தி, நீரினை வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டல், போக்குவரத்து போன்ற அன்றாட செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலானது வற்றாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது. மேலும் இவ்வகை ஆற்றல் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே இன்றைய நாட்களில் இவ்வகை ஆற்றல் முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்

சூரியன், காற்று, நீர்ப்பெருக்கு, புவிவெப்ப ஆற்றல், உயிர்த்திரள் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆகும்.
இம்மூலங்களிலிருந்து தேவைப்படும் நேரங்களில் ஆற்றலை மீண்டும் மீண்டும் பெற முடியும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே மிகஅதிகளவு கிடைக்கின்றன. மேலும் இவ்மூலங்களிலிருந்து ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது அவை சுற்றுசூழலுக்கு பெரும்பாலும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.

உலகில் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை இம்மூலங்களிலிருந்தே பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியாவில் மொத்த ஆற்றல் உற்பத்தியில் 14.7 சதவீத ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்படுகிறது.

 

சூரியன்

சூரிய ஆற்றல்
சூரிய ஆற்றல்

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலங்கள் பலவற்றிற்கு ஆதாரமாக சூரியன் விளங்குகிறது. சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் ஆகும்.

காற்று, நீர்பெருக்கு, உயிர்த்திரள் ஆகியவற்றிற்கு சூரியன் மறைமுக ஆற்றல் மூலமாக உள்ளது.

சூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றவானது மின்சாரம் தயாரிக்கவும், நீரினை வெப்பப்படுத்தவும், குளிரச்செய்யவும் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சூரியனிடமிருந்து பூமி பெறும் ஆற்றலின் ஒரு சிறுபகுதியை மட்டுமே நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக பயன்படுத்துகிறோம்.

 

காற்று

காற்றாலை மின்சாரம்
காற்றாலை மின்சாரம்

 

சூரிய வெப்பம் மற்றும் புவிச்சுழற்சியின் காரணமாக காற்றானது வீசுகிறது. காற்று வீசும்போது வெளியிடப்படும் ஆற்றலினை காற்றாலைகள் மூலம் சேமித்து மின்சாரம் பெறப்படுகிறது.

ஏனைய ஆற்றல் மூலங்களிங்களிலிருந்து ஆற்றலைப் பெறும் முறையைவிட காற்றாற்றலை சேமித்து பயன்படுத்தும் முறையில் சுற்றுசூழல் மாசுபடுவது குறைவாக உள்ளது.

காற்றாற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறும் முறையில் இந்தியா உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.

 

நீர்ப் பெருக்கு

கடல் அலை மின்சாரம்
கடல் அலை மின்சாரம்

 

புவியின் ஈர்ப்பு விசையால் நீரின் இயக்க ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும் முறையே நீர்மின்சக்தி என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாற்றலைப் பெறும் முறையில் திடக்கழிவுகளோ, பசுமை இல்ல வாயுக்களோ வெளியிடப்படுவதில்லை. எனவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நீர்மின்சாரம் முக்கிய இடத்தினைப் பெறுகிறது.

நீர்மின்சாரம் உற்பத்தியில் இந்தியா உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது.

 

புவிவெப்ப ஆற்றல்

புவி வெப்ப ஆற்றல் மின்சாரம்
புவி வெப்ப ஆற்றல் மின்சாரம்

 

புவிவெப்ப ஆற்றல் என்பது பூமியினுள் சேமித்து  வைக்கப்பட்டிருக்கும் வெப்ப ஆற்றலைக் குறிக்கும். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

கட்டிடங்களை வெப்பமூட்டவும், குளிர்விக்கவும் புவிவெப்ப ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

 

உயிர்த்திரள் ஆற்றல்

உயிரினங்களின் மூலம் (இறந்த நிலையிலோ, அவற்றின் கழிவுகளிலிருந்தோ) பெறப்படும் ஆற்றல் உயிர்த்திரள் ஆற்றல் எனப்படும்.

இவ்வகை ஆற்றலானது மின்சாரம் தயார் செய்யவும், போக்குவரத்து எரிபொருளாகவும், வேதிப்பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

விறகு, வைக்கோல் போன்றவை இவ்வகை ஆற்றல் மூலங்களுக்கு உதாரணங்களாகும்.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் நிறைகள்

சூரியன், காற்று, புவிவெப்பம், கடல் போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்கள் இயற்கையில் மிகஅதிகளவு கிடைக்கின்றன. மேலும் இவ்வளங்களை இலவசமாகவும் பெறலாம்.

புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது குறைந்த அளவே பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. எனவே இவ்வளங்கள் சுற்றுசூழலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குவதில்லை.

புதுப்பிக்கத்தக்க வளங்களைப் பெறுவதற்கு நாம் பிறநாடுகளை சார்ந்திருக்கத் தேவையில்லை.

புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலைப் பெறத் தேவையான கட்டுமானப் பணிகள் வேலைவாய்ப்பினை உருவாக்குகின்றன.

புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலினைப் பெறுவதால் மின்சாரக் கட்டணம் குறையும். அதே சமயம் அனல் மற்றும் அணு மின்உற்பத்தி நிலையங்களினால் உண்டாகும் சுற்றுசூழல் பாதிப்புகள் குறையும்.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் குறைகள்

புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலைப் பெறத் தேவையான கட்டுமானங்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்கான முதலீடு அதிகம்.

சூரிய ஒளியானது பகலில் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும். இரவு மற்றும் மழை காலங்களில் சூரிய ஒளி கிடைப்பது கிடையாது.

புவிவெப்ப ஆற்றலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போது பூமிக்கு அடியில் இருக்கும் நச்சு வேதிப் பொருட்கள் பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. இதனால் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

நீர்மின்சாரம் தயாரிக்க அணை கட்டும்போது அணைக்கட்ட தேவையான முதலீடு அதிகரிக்கிறது. மேலும் அவ்விடத்தில் உள்ள உயிர்சூழலும் பாதிப்படைகிறது.

காற்றாலையிலிருந்து மின்சாரம் தயார் செய்யும்போது காற்றாற்றல் அதிகம் பெறக்கூடிய தளங்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.

காற்றாலைக்கான கட்டுமானங்கள் பறவைகளின் வாழ்வியல் சூழ்நிலையை மாற்றி அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.

 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து தேவையான ஆற்றலை சுற்றுசூழல் மாசடையாத வகையில் பெற்று அளவோடு பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்