நரேந்திரனின் முன் ஜாக்கிரதை உணர்வு விவரிக்க இயலாதது.
பேனா இரவல் கேட்டால் மூடியைத் தன்னிடம் வைத்துக்கொண்டு கொடுப்பதும், கோவிலில் காலணிகளை வெவ்வேறு இடங்களில் பிரித்துப்போட்டு பாதுகாப்பதும், வாட்ச் எவ்வித சேதமும் ஆகாமலிருக்க இடது மணிக்கட்டின் உட்புறமாகக் கட்டுவதுமாக தனது உடைமைகளை வெகு சிரத்தையுடன் பாதுகாத்துக் கொள்வான்.
அரசாங்க உத்தியோகத்தில் கை நிறைய சம்பளம். வங்கிகளில் கணிசமான சேமிப்பு. சொந்த வீடு, கார் என நல்ல வசதியுடன் கஷ்டமில்லாத வாழ்க்கை.
திருமண வயதை எட்டியும், பார்க்கும் பெண்களை எல்லாம் ஏதாவதொரு சாக்கு சொல்லி தட்டிக்கழித்து வருபவன்.
இவனுடைய குணாதிசயங்களால் நண்பர்களும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் நரேந்திரன் எங்கு கூப்பிட்டாலும், கூடியமட்டும் அவனுடன் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள்.
அன்று புரோக்கர் சொன்ன வரன் ஒன்றைப் பார்க்க கிளம்பினான் நரேந்திரன். வழக்கம்போல் யாரும் அவனுடன் வரவில்லை. தங்கள் வேலைகளை விட்டு விட்டு, வெட்டித்தனமாக அவனுடன் பொழுதைக் கழிக்க யாரும் தயாராகயில்லை.
புரோக்கர் கொடுத்த விலாசத்திற்கு நரேந்திரன் மட்டும் தன்னந்தனியாகப் போனான். அவனுக்கு பெண்ணை ரொம்பவும் பிடித்திருந்தது.
அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, ஓ.கே. சொல்லிவிட்டு கிளம்பும் நேரத்தில் பெண்ணின் பெற்றோர், பெண் அவனிடம் தனியாகப் பேச விரும்புவதாகச் சொன்னார்கள்.
அவனுக்குள் சிறு அதிர்ச்சி. இருந்தாலும் ‘என்னதான் பெரிதாகக் கேட்டுவிடப் போகிறாள்?’ என சமாதானம் செய்துகொண்டு பெண்ணோடு பேச தயாரானான்.
“எனக்கு சுற்றி வளைத்துப் பேசத் தெரியாது. நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன்.” என்றாள் அந்தப்பெண்.
“வெல்கம்! நல்ல விஷயம்தானே…” என்றான் நரேந்திரன்.
“நீங்க மட்டும் என்னைப் பார்க்க வந்திருக்கீங்களே… உங்க அப்பா, அம்மா, உறவினர், நண்பர் யாருமே வராதது ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு…”
“நான் சின்னப் பையனா இருந்தபோதே அப்பா போயிட்டார். என் அம்மாதான் வீடு, ஓட்டல் என வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்து, இந்த நிலைக்குக் கொண்டு வந்தாங்க. கூடப்பிறந்தவங்க யாருமில்லை. உறவினர்கள் எல்லாம் வெவ்வேறு ஊர்களில் இருக்காங்க. அவர்களுக்கு ஏன் சிரமம் என்று யாரையும் நான் கூப்பிடவில்லை…”
“உங்க அம்மாவையாவது அழைத்து வந்திருக்கலாமே?…”
“என்னை தப்பா நினைக்காதீங்க. அம்மா ஆஸ்த்துமா நோயால் நாலைந்து வருஷமா படுத்த படுக்கையில் இருக்காங்க. என்னால் அவங்களை கவனிக்க முடியல. அதனால் அவங்களை…”
மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாமல் தயங்கினான்.
“அவங்களை….?” என்று இழுத்தாள் அந்தப் பெண்.
“அவங்களை போன மாசம்தான் முதியோர் இல்லத்தில் சேர்த்தேன்.” என்றான் நரேந்திரன்.
“உங்க முன் ஜாக்கிரதை உணர்வு, பல்வேறு விஷயங்களில் நீங்கள் காட்டும் சிரத்தை பற்றியெல்லாம் புரோக்கர் விலாவாரியாக எங்களுக்குச் சொன்னார்.
உங்களையும், உங்க உடமைகளையும் பாதுகாப்பாய் வச்சுக்கத் தெரிந்த உங்களுக்கு, உங்க வளர்ச்சிக்கு காரணமாயிருந்த தாயை உடமையாய் நினைக்கத் தெரியலையா?
முடியாத அவங்களை அனாதை இல்லத்தில் விட்டிருக்கீங்களே… நாளைக்கு எனக்கும் இதே கதிதானே…? அதனால…” என நிறுத்தினாள் அந்தப் பெண்.
“அதனால… என்ன சொல்ல வர்றீங்க? அம்மாவைக் கூட்டிட்டு வந்துடட்டுமா?” – கேட்டான் நரேந்திரன்.
‘சுயநலத்தையே தாரக மந்திரமாகக் கொண்டிருக்கும் உங்களைத் திருமணம் செஞ்சுக்க எனக்கு துளிகூட இஷ்டமில்லை. நீங்க போகலாம்.” என்று முகத்திலடித்தாற்போல் பேசியவள் அறையை விட்டு வெளியேறினாள்!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!