புத்தபிரான் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! ‘
கௌதம புத்தர்’ என்று பாடத்தில் படித்திருப்பீர்கள்!
‘துன்பத்திற்குக் காரணம் ஆசை‘ என்று உலகத்தினருக்கு எடுத்துக் கூறியவர்.
அனைத்தையும் துறந்து துறவியானவர். இவர் மகானாக மாறுவதற்கு முன் இளவயதில் ஒருகாடு வழியே சென்று கொண்டிருந்தபோது அழகான ஏரி ஒன்றைக் கண்டார்.
அந்த ஏரியில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த தாமரை மலர்களைக் கண்டதும் அவற்றில் ஒன்றைப் பறித்து, அதன் நறுமணத்தை நுகர விரும்பினார்.
குனிந்து ஒரு தாமரை மலரை நெருங்கிய போது அசரீரிக் குரல் ஒன்று ஒலித்தது.
“புத்தா, இறைவனுக்குச் சொந்தமான இந்த மலரை அவன் அனுமதியின்றி பறிக்கலாமா? பறிப்பதற்கு முன் இறைவனிடம் ஒரு வார்த்தை பிரார்த்தனை மூலம் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லையா?”
புத்தர் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு மௌனமாகத் திரும்பினார்.
அந்த சமயம் காட்டுவாசி ஒருவன் அதே ஏரியில் இறங்கினான். கை,கால்களை கழுவி விட்டு சடக்கென ஒரு தாமரை மலரைப் பறித்து நுகர்ந்து அதன் நறுமணத்தை அனுபவித்தவாறே சென்று விட்டான். புத்தருக்கு ஒரே வியப்பு!
‘தான் அம்மலரைப் பறிக்கச் சென்ற சமயம் எழுந்த அசரீரிக் குரல் காட்டுவாசி பறித்தபோது எழாததின் காரணம் என்ன?’
இறைவனை வாய்விட்டுக் கேட்டே விட்டார்.
“எல்லாம் வல்ல இறைவா! நான் மலரைப் பறித்த போது என்;னைத் தடுத்து எனக்குப் போதனை வழங்கினாய். அதே மலரை இன்னொருவர் பறித்த சமயம் மௌனமாகி விட்டாயே, ஏன்?”
அசரீரி மீண்டும் ஒலித்தது!
“அனைத்தையும் அறிந்த புத்தனே, இவ்வுலகுக்கே வழிகாட்டியாக, பெரிய மகானாக வாழ்க்கையின் தத்துவங்களைப் போதிக்கப் போகும் தத்துவ ஞானியாக நீ விளங்கப் போகிறாய்!
இவ்வளவு சிறப்புமிக்க மகானாக விளங்கப்போகும் உன் ஒவ்வொரு செய்கையும் மிகுந்த கவனமுடன், நிதானித்து, தீர ஆலோசித்து, எவர் உள்ளமும் புண்படாத அளவுக்கு பாதிக்காத அளவுக்கு செய்யப்பட வேண்டும்.
மற்றவர்களுக்கு வழிகாட்டியாக, நல்ல ஆசானாக, மிகச் சிறந்த குருவாக மாறப் போகும் நீ ஒருசிறு தவறுகூட செய்யலாகாது. ஆகவேதான் நீ செய்ய விடாமல் தடுத்தேன்.
ஒரு பெரிய மகான் செய்யும் சிறு தவறினால் இவ்வுலகம் பல வழிகளில் பாதிப்படையும். அதே சமயம் சாதாரண ஓர் மனிதன் செய்யும் பல தவறுகள் இவ்வுலத்தைப் பாதிப்பதில்லை.
அந்தக் காட்டுவாசி உன்னைப் போல புத்தனாக மாற முடியாது. மாறப் போவதும் இல்லை. நீ அந்தக் காட்டுவாசி போல் தவறிழைக்கக்கூடாது.
எப்போதுமே ஓர் தூய்மையான வெள்ளைத்துணியில் காணப்படும் கரும்புள்ளி தெளிவாகத் தெரியும். அதே சமயம் சேறு சகதிகளில் புரண்டு எழும் பன்றியின் உடலில் ஏதேனும் அழுக்கோ கரும்புள்ளியோ தென்பட்டால்கூட அது எவர் கண்களுக்கும் தெரியப் போவதில்லை. அதன் குணாதிசயம் அப்படி. நீ இப்போது புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன்.”
புத்தர் நெகிழ்ந்து போனார். ஏற்கனவே அறிவுக் களஞ்சியமாக விளங்கிய அவர் உள்ளம், ஆன்மா மீண்டும் புத்துயிர் பெற, தீர்க்கமான அவரது எண்ணங்கள் பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்தன. கை கூப்பி இறைவனை நினைத்து நன்றி செலுத்தினார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!