ஆங்கிலத்தின் முதல் திங்கள் வந்து விட்டால்
புத்தாண்டு பிறந்துவிடும்! உள்ளமோ குதூகலிக்கும்
கூடிப் பேசி வாழ்த்துச் சொல்ல மனம் துடிக்கும்
‘அலைபேசி, தொலைபேசி, மின் அஞ்சல்
வாழ்த்து மடல்’ இன்னும் எத்துணையோ சாதனங்கள்
இவை மூலம் பரிமாறும் வாழ்த்துச் செய்தி!
குறிப்பாக அரசியலார், பெருமகனார்
அலுவலகத் தலைவர்க்குத் தனிச் செய்தி!
நேராக ஓடிச் சென்று வாழ்த்துச் சொல்லப் பழக்கூடை
மலர்க் கொத்து, மலர் மாலை, பொன்னாடை
ரேஷன் கடை வரிசைபோல் கால் கடுக்க நிற்கும் காட்சி!
தொலைக்காட்சி திறந்து விட்டால் அரிதாரம் பூசியவர்
தேவதை போல் காட்சி தந்து
கொஞ்சு தமிழ் பேசி கிளுகிளுப்பூட்டிடுவர்
திரையுலக வாழ்க்கை பற்றி விரிவாகப் பேசிடுவர்
நேயருக்கு வாழ்த்தும் சொல்லிடுவர் சில நேரம்!
துடிக்கும் இளம் காளையரும் கன்னியரும்
தேன் குடிக்க மனம் துடிக்கும் இளவல்களும்
மேல் தளத்து குடிமகனும் கூடிடுவர் ஒன்றாக
வருடத்தின் வருகைக்குக் காத்திருப்பர்!
கடிகாரக் கைகாட்டி இரவின் பன்னிரண்டைத்
தொட்டுவிட
பீரிட்டுப் பாய்ந்து வரும் ஒளிவெள்ளம்
இடிமுழங்கும் வெடியோசை
கண்ணாடிப் புட்டிகளெழுப்பி விடும் பல ஓசை
வாத்தியங்கள் எழுப்புகின்ற, காதைக் கிழித்து விடும்
மென்னிசைகள்!
புது வருடம் வரவேற்க புதியமுறை, புதிய வழி
நம் காவலர்க்கும் கூடவே பிறந்திடுமே தலை வலியும்
துப்புத் துலக்கிடவும், துயரங்கள் போக்கிடவும்,
மர்மங்கள் விலக்கிடவும்
புத்தாண்டு பிறந்த நாளே இத்துணையும் சேர்ந்தே
பிறந்து விட்ட காட்சிகள்தான் கண்முன்னே நிற்குதடி!
என்ன இது புத்தாண்டு?
எதை வரவேற்றோம் இந்நாளில்?
பூமித்தாய் சுழன்றதனால் பிறந்து விட்ட
நாழிகைகள், நிமிடங்கள், நாட்கள்,
மாதங்கள், வருடங்கள் இச்சுழற்சி,
நம் கையில் இவைகளில்லை.
ஆனால்,
நம்முள்ளே மறைந்திருக்கும்
மனமென்னும் ஊடகத்தே உறவுவில்லை, புரிதலில்லை,
மாற்றமில்லை,
ஒளிவெள்ளம் பாயவில்லை, மெல்லிசையும் கேட்கவில்லை,
மானுடமும் துளிர்க்கவில்லை
மாயையில் மயங்கி வரவேற்றோம் புதிய நாளை!
அது அல்ல புத்தாண்டு!
சாதியில்லாச் சமநீதி, சமவுரிமை, சகோதரத்துவம்
உழைத்திடவே நல்வாய்ப்பும், உகந்ததொரு ஊதியமும்
மானுடமும் துளிர்த்த காலை
புத்தாண்டு பிறக்கும்! புதிய வழி திறக்கும்!
சிராங்குடி த. மாரிமுத்து
மன்னார்குடி
94436 73155