ஒரே ஒருநாள்
குளத்தங்கரைக்கும்
அடுப்பங்கரைக்கும்
விடுமுறை விடுங்கள்!
வீட்டு வாசலை பெருக்கிக்கொள்கிறேன்
குடும்பத்தாரை பார்த்துக் கொள்கிறேன்
மளிகை கடைக்கு சென்று வருகிறேன்
குழாயடியில் சக்காளத்தியிடம்
சண்டை போட்டுக் கொள்கிறேன்
கொளுத்தும் வெயிலில்
கொத்து வேலைக்கு சென்று வருகிறேன்
என் குடும்பமே ………….
தெரிந்தவர்களுக்கு சேதி அனுப்புங்கள்
அவள் இறந்து விட்டாள்
அவள் இறந்துவிட்டாள்
தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள்
இப்போதாவது அவளை நிம்மதியாக உறங்க விடுங்கள்!
6 வயதில் பழக்கப்பட்டவள்
அக்காவாகி
அம்மாவாகி
ஆயாவும் ஆகிவிட்டாள்
இப்பொழுது வரை வாசலை
கோலம் போட்டு அழகாக்குகிறாள்
கடைசி வரை மறந்தே போகிறாள்
தன் வாழ்வை அழகாக்க!
காலையில் கோழியை திறந்து விட்டாள்
கொஞ்ச நேரம் மாட்டை அவிழ்த்து விட்டாள்
தேங்கி நிற்கும் சாக்கடைக்கும் வழி செய்தாள்
ஒரே விடயத்தை மறந்து போனாள்
தனக்கு விடுதலை வாங்க!
பெற்ற குழந்தை விழுந்தவுடன்
ஓடிப்போய் தூக்கிய தாய்மனம்
முதுமை முதிர்ந்தது
பெற்றவள் தடுக்கி விழுந்தாள்
தாண்டிப் போய் மனைவியை
கட்டியணைத்த பிள்ளை மனம்
ஆஹா ! என்னே அருமை
தாயின் கண்ணீர் அவர்களை
மனமார வாழ்த்தியது
“வாழ்க வளமுடன் “
ஊட்டி ஊட்டி வளர்த்த பிள்ளைகள்
வளர்ந்தபின் ஒருவேளை சோறு இடவில்லை
திடீரென பாசம் பெருகியது
பிள்ளைகள் அனைவரும் ஓடி வந்து ஊட்டி விட்டார்கள்
அவள் இறந்த பிறகு “வாய்க்கரிசி “
ர.குரு
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு
மாநிலக் கல்லூரி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!