பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்

பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான்.

“என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?”

“டாக்டர் வந்ததே ஒருமணிக்குத்தான். ஏகப்பட்ட பேஷண்ட்ஸ். என் முறை வந்து கண் டெஸ்ட் முடிந்து, பஸ் பிடித்து வர இவ்வளவு லேட் ஆயிடுச்சு”

“சேகர் நீ இப்போ உடனே என்னோடு அந்த கண் ஆஸ்பத்திரிக்கு வா. உன் வண்டியில்தான் போறோம்”

“என்னடா இப்பத்தான் அங்கிருந்து வந்தே. திரும்பவும் அங்கேயே போகணும்னு சொல்றே. என்னை எதுக்கு கூப்பிடறே?”

“அதெல்லாம் சஸ்பென்ஸ்… நீயே நேரில் வந்து பார்த்துக்கோ”

சேகருக்கு பிரபாகர் சொல்வது எதுவும் புரியவில்லை. ‘எதற்காக என்னையும் அழைத்துக் கொண்டு போகிறான்?’ மண்டை காய்ந்தது அவனுக்கு.

கண் ஆஸ்பத்திரி வெளியே வண்டியை நிறுத்திய சேகர் மீண்டும் பிரபாகரிடம் கேட்டான். “டேய் இப்போதாவது சொல்லேன்.”

“சொல்றேன் சொல்றேன். அவசரப்படாதே. எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்தேன் தெரியுமா? பெண் பார்க்கத்தான்”

“என்னடா உளர்றே? பெண் பார்க்கவா?”

“ஆமாம் உன் அம்மா விரும்புகிற மாதிரி மனம் கோணாமல் கூடமாட ஒத்தாசை செய்கிறாற்போல், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்கிறாற்போல் பெண்ணைத் தேடிக்கிட்டிருக்கிறதா சொல்லிக்கிட்டிருந்தேல்ல?”

“ஆமாம். அதுக்கென்ன இப்போ? நானும் பத்து பதினைந்து பெண்களையாவது பார்த்திருப்பேன். ஓன்று இருந்தால் ஒன்று இல்லை. என் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் ஒரு பெண்கூட அமையலே”

“நான் இங்கேயே நிற்கிறேன். டாக்டர் ரூம் வெளியே பேஷண்ட்ஸ் காத்திருப்பாங்க. அங்கே போய் பாரேன்”

குழப்பம் மேலிட சேகர் பிரபாகர் சொன்ன இடத்தில் போய் பார்த்துவிட்டு எதுவும் புரிந்து கொள்ள முடியாமல் சிறிது நேரத்தில் வெளியே வந்தான்.

“என்னடா, என்ன இருக்கு அங்கே? டோக்கன் வரிசைப்படி ஒவ்வொருத்தரா டாக்டரைப் போய் பார்க்கிறாங்க.”

“அவ்வளவுதான் பார்த்தாயா?”

சேகர் ஆட்காட்டி விரலை மோவாயில் வைத்தபடி அண்ணாந்து பார்த்தவாறே சற்று நினைவுபடுத்திப் பார்த்தான்.

“ம்…ம்… அழகான பெண் ஒன்று கண்டேன். எவ்வளவு பொறுமையாய் ஒவ்வொரு பேஷண்ட்டையும் கையைப் பிடிச்சு ரொம்ப பாசமாய், அன்பாய், ஆதுரமாய் பேசி டாக்டர் ரூமுக்குள் கூட்டிட்டுப் போறா தெரியுமா!”

“கரெக்ட். சரியாத்தான் பார்த்திருக்கே. அந்தப் பெண்ணைத்தான் உனக்கு செலக்ட் பண்ணியிருக்கேன். உங்க குடும்பத்துக்குப் பொருத்தமா இருப்பாள். என்ன சொல்றே?”

“நீ சொல்றதெல்லாம் ஓ.கே. ஆனால் அந்தப் பெண் பற்றிய விவரங்களை எப்படித் தெரிஞ்சுக்கிறது? எங்கே போய் யாருகிட்டப் பேசறது?”

“அந்தப் பெண்ணின் அண்ணன் இங்குதான் இருக்கிறான். அவனுக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும். அவனோட பேசறியா?”

“சரி கூட்டிட்டுப் போ…”

“இதோ உன் முன்னாலேயே நிற்கிறேனே. பேசு. அந்தப் பெண் என் தங்கச்சி தான்டா. உனக்குப் பிடிச்சிருக்கா? வேலை வேண்டாம்னு நீ நினைச்சா விட்டுடச் சொல்றேன். என்ன சொல்றே?”

பிரபாகர் இப்படி சொன்னதும் சேகர் அவனைக் கட்டித் தழுவியவாறே சொன்னான்.

“இவ்வளவு பழகியும் இது நாள் வரை உன் குடும்பத்தைப் பற்றியும் உனக்கு இவ்வளவு அழகாய் ஒரு தங்கச்சி இருக்கிறதையும் ஏண்டா சொல்லாமலிருந்தே?”

“நான் சொல்ல என்ன இருக்கு? எனக்கு பிடிச்சா எங்கம்மாவுக்கும் ஓ.கே.தான். கையில வெண்ணையை வச்சுக்கிட்டு இவ்வளவு நாளா நெய்க்கு ஊர் ஊராய் அலைச்சுக்கிட்டிருந்திருக்கேன் பாரு. மேற்கொண்டு ஆக வேண்டியதை உடனே பாருடா”

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.