பொங்குதமிழ்க் கடலலையில் புதுச்சுடரைப் படரவிட்டுச்
சங்கெழுப்பி முத்தெழுப்பிச் சலசலக்கும் புள்ளெழுப்பிப்
பங்கயமேல் படுத்துறங்கும் பனிப்போர்வை தானெழுப்பி
எங்கிருந்தோ இயக்குகிற எரிகதிரைப் போற்றுகின்றோம்
பொங்கிவரும் புதுப்புனலில் பொலிகமழ்ப்பூ மிதந்துவர
அங்கயல்கள் விளையாடும் ஆற்றுநீரை அணையெடுத்துத்
தங்கநிற நென்மணிகள் தருந்தவச்செந் தோளுழவர்
செங்கரத்தைப் போற்றுகின்றோம் செழித்துவாழப் போற்றுகின்றோம்
பொங்கிவரும் பச்சரிசி புதுப்பானைப் பொங்கலொடு
மங்கலஞ்சேர் பொன்மஞ்சள் மணங்கமழும் பசும்பாலும்
நங்கரத்தில் தவழ்வதற்கு நாவறண்டும் உழைத்தளிக்கும்
செங்காளை மாட்டோடு செம்பசுவைப் போற்றுகின்றோம்
பொங்கிவரும் பாலெரிக்கப் போடுகின்ற விறகுடனே
தங்கிவிட்ட பழங்கொடுமை தரித்திரங்கள் பொசுங்குதற்கும்
செங்கரும்பின் தீஞ்சுவைபோல் செவ்வளங்கள் சேர்வதற்கும்
செங்குருதி சொந்தமெலாம் சேர்ந்துவாழப் போற்றுகின்றோம்
பொங்கலெனும் பண்டிகையில் புத்தாடைப் பூண்டுவந்து
மங்கிவரும் வாழ்வெதிர்க்க மறம்வளர்க்கும் பிள்ளைகளைத்
தங்கமெனப் பளபளக்கும் தத்தையிளங் கன்னிகளை
எங்களிணைக் காளைகளை எழுச்சியுடன் போற்றுவமே

ஆதிகவி(எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
பேச 8667043574
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!