மண் வாசனை, ஈரம் பதிந்த சாலை, சாலையோரத்தில் பாதாம் இலைகள், மேகம் முழுவதும் இருட்டு. நீ நினைக்கும் இருட்டல்ல, என் அம்மா சொல்வது போல் ‘கும் இருட்டு!!’
“இரு, அம்மா! அம்மா! அம்மா!”
உனக்கு அம்மா இருக்கிறாளா? அத்தனை மனிதருக்கும், ஈ, எறும்பு, நாய், பூனைகளுக்கும் அது அத்தியாவசியம். ஆனால் எனக்கு, ‘ஏழைக்கு எட்டா பட்டு துணி’யை போல மிக தொலைவில் போனது.
தாய் வாசம், நான் முன்பு குறிப்பிட்டது போல மண் வாசனை, பாதாம் இலை பொறுமை. பாலைவனத்தில் பல மையில்கள் கடந்து வந்த பரதேசி மேல், படும் சாரல் வீசிய தென்றல் போன்றது.
இந்த பரதேசிக்கு தென்றலும் இல்லை, சாரலுமில்லை. தாயுடன் பார்க்கும் அனைத்து மனிதர்களை பார்த்தாலும் எனக்கு ஒரு பொறாமை உண்டு தான்.
தாய் உனக்கு உண்டென்றால் அவளை இப்பொழுதே அரவணைத்து ஆராதி. ஏனெனில், இதை விரிவாய் பேச நான் ஒன்பதாம் வகுப்பு போக வேண்டும்.
நான் கார்த்திகா. உங்களின் கதைசொல்லி. நான் பெரிய கவிஞன் இல்லை, வாழ்வில் சில இழப்புகள் நம்மை கவிஞன் ஆக்கும்.
என் அப்பாவின் வேலை நிமித்தமாக, நாங்கள் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்து பத்து பதினைத்து வருஷம் ஆச்சு.
“ஏட்டி, என்ன வாட்ச்சா பாத்திட்டே இருக்கே?” என் தோழி ரேவதி கேட்டுட்டே இருக்கா.
“எனக்கு விரசா வீட்டுக்கு போகணும். அம்மைய பாக்கணும்”
“ஏட்டி நீ என்ன, இப்ப போட்ட குட்டி பூனைகணக்கா எப்ப பாரு ‘அம்மே, அம்மேனு’ எங்களலாம் பாத்தா மனுஷியா தெரியலயோ?”
“நான் ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசு வாங்கியிருக்கேன். இந்த மணி அடிக்கிற அண்ணன் எங்க போச்சு? பொறுப்பே இல்ல”
“மணி அடிச்சதும், மைதானத்தில இன்னைக்கு ஓடினா மாதிரி போயிடாத புள்ள!இரண்டு ரூவா குச்சைஸு வாங்கித்தரேனு சொல்லிருக்கே கேட்டுச்சா?”
‘ஹான் ஹான் டிஸ் டிங்ங்ங் டிங்’
“ஏ! ஓடாத, நில்லு. நானும் வாரேன்” என்றபடி ரேவதி பின் தொடர்ந்தாள்.
இதான் நாங்கள் வழக்கமாய் குச்சைஸு வாங்கும் கடை.
“அண்ணே, இரண்டு க்ரேப்பு”
இரண்டில் ஒன்றை ரேவதியிடம் கொடுத்துவிட்டு, கடைக்காரருக்கு காசு செட்டில் பண்ணிவிட்டு, க்ரேப்பை ருசித்தவாரே, மறுபடியும் ஓட்டம்.
வீட்டிற்கு பின்னங்கால் பிடரியில் பட ஓடினேன், நான் வாங்கி கோப்பையை அம்மாவிடம் காட்ட.
போகும் வழியில் நான் தினமும் வழிபடும் பிள்ளையார்.
“பிள்ளையாரப்பா, இன்னைக்கு அம்மே சுகம் கொள்ளனும். அவ, ஏன்சி நின்ன மேனிக்கு இருக்கனும். அவ படுக்கையில படுத்திருக்க கூடாது, கேடுச்சா?”
ஆமாம், அது ஒரு விபத்து. அம்மா கொஞ்ச நாளைக்கு முன்னால் புறத்தடியில் தடுக்கி விழுந்தாள்.
அதுலிருந்து டாக்டர்கள் பல புரியாத மருத்துவ மொழியில் நோய் பெயர்கள் வைத்து விட்டார்கள்.
“அம்மா! அம்மா! அம்மா! நான் ஓட்ட பந்தயத்துல மொத பரிசு. எங்கிருக்க நீ? அம்மா”
இன்றும் அம்மா படுக்கையிலே.
“கார்த்திகா! என்னலே! கத்திட்டே வாரா? இங்க காட்டு. இங்க பாரேன் எம்புள்ளைய!!”
“என் கந்தா, அழகி புள்ள நீ” என்று ஆரத் தழுவினாள்.
“சரி, உனக்கு அம்மா என்ன செஞ்சி தரட்டும் சொல்லு” படுக்கையில் ஈரம் நிறைந்த முதுகுடன், என் தாய் வலியை மறைத்துக்கொண்டு, என் பசியாற்ற என்ன வேண்டும் என்று கேட்கிறாள்.
அவளுக்கு எல்லா இடமும் வலி. திரும்பி படுத்தாள் வலி, நின்றால் வலி, பேசினால் வலி. இவை அனைத்தையும்விட தன் பிள்ளைக்கு பிடித்ததை செய்து கொடுக்க முடியவில்லையே என்ற வலி.
இப்பொழுது நான் என்ன சொல்ல? செய்து கொடு என்று சொன்னால், அவளுக்குச் சிரமம். வேண்டாம் படு என்று சொன்னால் அவளுடைய இயலாமை குறித்த மன வேதனை. அதனை அனுபவித்தால் மட்டுமே புரியும்.
நான் கூறிய கடவுள் இவள் தான். பொன்னுதாயி!! பொன்னுதாயி ஒரு தேவதை. பொன்னுதாய் இவ்வுலகில் ஒன்று தான்.
இப்படிபட்ட தாய் இன்னொருவருக்கு அமைய வேண்டுமென்று மற்றவர்கள் ஆசைப்படும் தாய் தான் இந்த பொன்னுதாயி. அவள் பெயர் போல அவள் பொன்னு தாய் தான்.
‘பார்ப்பதற்கு என் தாய் முகம், பசிக்கு அவள் வைக்கும் ரசம் சோறு, பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இவள் மடியின் ஓரத்தில் வசித்துவிட எனக்கு சம்மதம்’ என்ற முடிவில் இருந்த போது அந்த நாள் வந்து சேர்ந்தது.
கடவுளுடன் சீட்டாடுவது கொஞ்சம் கடினமானது, எவ்வளவு கவனமாக இருந்தாலும் பார்க்காமலே அறிந்து கொள்கிறார்.
அன்று அம்மாவுக்கு ரொம்ப முடியவில்லை.
அன்று எதுவும் ஆகாது என்று தானே நான் ரேவதி வீட்டுக்கு போனேன். என் அறியாமையை எதை வைத்து அடிக்க?
திரும்பி வந்து பார்க்கிறேன். வெளியே ஆம்புலன்ஸ். சிவப்பு நீல வெளிச்சம்.
ஹூம்! என் இருதயம் துடிக்கிறது, துடிக்கிறது, துடிக்கிறது.
அருகே செல்கிறேன், அம்மா படுத்தவாறே “ஒன்னுமில்லே! ஒன்னுமில்லே!” என்கிறாள். மூச்சு வாங்கியது. அவளை ஏற்றிக்கொண்டு போகிறார்கள்.
“அதான் ஒன்னுமில்லனு சொல்றால அம்மா. இங்கையே இருக்கட்டும் விடுங்க” கத்தினேன்.
அவர்கள் தூக்கிக் கொண்டு போனார்கள்.
“அம்மா! அம்மா! இருமா. நீ இங்கேயே படு”
“கார்த்திகா விடு! விடு!” என்றார்கள் சுற்றி இருந்தவர்கள்.
“அம்மா ஒரு சின்ன செக்கப்காக போறா, வந்திடுவா”
“எனக்கு தெரியும் அவ வந்திருவானு, இருந்தாலும் வேனா, அம்மா! அம்மா! இங்க பாரு”
பாதி மயக்கத்தில், என்னை பார்த்தாள்.
“நான் உன்ன பார்த்துக்கிறேன், நீ படுத்துட்டே இங்கையே இருமா” என்றபடி அழுதேன்.
அம்மா அந்த வண்டியில் ஏறும் முன்பு சில வார்த்தைகள் சொன்னாள்.
“ஃபிரிட்ஜ்ல அம்மா உனக்கு மல்லிபூ வெச்சிருக்கேன். இங்க வா! நல்லா படிக்கனும். நல்ல புள்ளையா இருக்கனும். கிட்ட வா” என்று முத்தம் கொடுத்தாள். கையைப் பிடித்தாள்.
எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.
கொஞ்சம் நேரம் கழித்து அம்மாவை வெள்ளை போர்வையில் மூடி கொண்டு வந்தார்கள்.
அதே வண்டி, அதே வெளிச்சம்.
கதறி அழும் சத்தம், இரைச்சல். கொஞ்ச நேரத்தில் சங்கு சத்தம். மணி சத்தம்.
சத்தத்தை வெறுத்துப் போனேன்.
‘அம்மா அங்கே படுத்து இருக்காளே, இவர்களுக்கு என்ன பித்தா? அம்மா என்னமா? என்ன இதல்லாம்? ஹா! ஹா! ஹா! வாமா! நம்ம போய் காபி குடிப்போம், இவங்களலாம் துரத்திட்டு நம்ம காமடி பார்ப்போம் டீவில.
லூசு பயலுவ. அம்மா நீ எழுந்துறு. எனக்கு அந்த பழம்புரி செஞ்சுகுடு பசிக்குது. வாமா, வா நீ! இப்ப ஏஞ்சிக்க போரியா இல்லையா நீ? ஏ புள்ள ரேவதி! அஸ்வதி! இதான்மா அஸ்வதி! ஏண்டி அழுதுட்டே இருக்கா?
அம்மா இதான்மா அஸ்வதி. இவளுக்கும் பழம்புரி வேணுமாம் வா! வா! ஹான் அம்மா. நம்ம நாளைக்கு கடைக்கு போகனும். புதுதுணி எடுக்கனும் தீபாவளி வருதுல? என்ன கேடுச்சா? என்னமா கேட்குதா?
என்னமா பேச மாட்டிங்கிற? என்ன பிடிக்காம போயிடிச்சா? இரு! காரத்திய கூப்பிட்டிறேன். நான் இனிமே சேட்ட பன்ன மாட்டேமா! எதிர்த்து பேச மாட்டே! நீ தண்ணி கேட்டா கொண்டு வரே! எதிர்த்து பேச மாட்டே! அம்மா!! கேட்டுச்சுல?’
சடங்கு செய்து கொண்டு இருக்கிறார்கள். நான் இன்னும் கனவில் இருக்கிறேன்.
ஆரவார அழுகையோடு அம்மா, கண்ணீருடன் செல்கிறாள்.
“எறக்கி விடுங்க, எறக்கி விடுங்க”
“கார்த்திகா! கார்த்திகா!” என்று பிடித்து இழுத்தார்கள்.
‘நீ வச்சுட்டு போன குழம்பு அப்படியே இருக்கு. உன் கைமனம் அப்படியே இருக்கு. சாப்பிட்டா தீர்ந்துடுமோனு பயமா இருக்கு. நான் சைவமா மாறிட்டேன், நீ வைக்காது மீன் குழம்பு எவ வச்சாலும் எனக்கு வேண்டாம்.
நான் ருதுவானேன். எனக்கு சடங்கு பிடிக்கல. உன் புடவையெல்லாம் என் கிட்ட பத்திரமா இருக்கு. அப்பப்ப வாசம் பிடிச்சுகிறேன்.
உன் வாசனை கொஞ்சம் கொஞ்சமா மறையுது. உன் குரலும். எனக்காக ஒரு தடவ பேசறியா? வீட்ல இன்னொருத்தி இருக்கா. எனக்கு சுத்தமா பிடிக்கல.
அப்பா வில்லன் ஆனார். அடித்தார், அழுதேன், பதராதே! இப்ப இல்ல. நல்லவன் ஆனார்.
பெரியம்மா வீடுக்கு போனேன், அவள் பிள்ளைக்கு தனி உபசரிப்பு, இது சரியா? நீ அப்படி இல்லையேம்மா? உன்ன போல யாருமே இல்லைம்மா. நீ எனக்கு உசுரு ம்மா. நீ வாம்மா’ அவள் புடவையை கட்டி பிடித்தவாறே, கண்ணீருடன்.
உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை. எல்லோரையும் நேசித்து நேசித்து பிரியும் வதை.
உயிர் போவதுகூட விடுதலைதான். ஆனால் யாரோ இறப்பதை சகிப்பது இறக்கும் வரை வலிக்கும் வதை.
பிரிவை மனம் சகிப்பதேயில்லை. மனதிற்கு அன்பு காட்ட மட்டுமே தெரிகிறது. அன்பில்லாத இடத்தில் மனம் சிறுபிள்ளையைப்போல அழுது விடுகிறது.
க.சஞ்ஜெய்
சென்னை
கைபேசி: 7904308768
படித்துக்கொண்டு இருக்கையிலே கண்ணில் தண்ணீர். நல்ல எழுத்து.
❤️
இந்த உணர்வினை முழுவதுமாக உள்வாங்கியதன் விளைவு, இன்று இறவு தூக்கமில்லை.