நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 18

அடுத்து வந்த பத்து நாட்களும் ராகவைப் பார்க்காமலேயே நகர்ந்தன. ராகவ் வராமல் போனதற்குக் காரணம் புரியாமல் தவித்துதான் போனாள் இந்து.

‘அவன் அலுவலகம் சென்று விசாரிக்கலாமா?’ என்றுகூட நினைத்தாள்.

‘ஒரு வயசுப்பெண் ஒரு ஆணைப்பற்றி விசாரிக்கப் போய் அது தவறாக நினைக்கப்பட்டால்? அதுவும் அப்படி விசாரித்தால் தன் அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அங்கிருந்து அப்பாவிடம் சொல்லிவிட்டால்!’ நினைக்கவே பயமாயிருந்தது இந்துவுக்கு.

ராகவ் வராமல் இருப்பதன் காரணம் தெரியாமல் பித்துப் பிடித்து விடும்போல் இருந்தது.

இந்த பத்து நாட்களில் மூன்று முறை ரத்தினவேல் வீட்டுக்கு வந்து சென்றான் தனசேகர்.

இந்து கல்லூரி சென்றதும் வருவது, அவள் கல்லூரியிலிருந்து திரும்புவதற்குள் சென்று விடுவதென இருந்தான்.

அவளைப் பார்ப்பதை வேண்டுமென்றே தவிர்த்தான். வந்து சென்ற மூன்று முறையில் ஒருமுறை செண்பகத்தம்மாளுக்கு விலையுயர்ந்த சேலை வாங்கி வந்தான்.

“அத்தை மறுக்காம வாங்கிக்கோங்க அத்தை” என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடித்தான்.

வாய்கு வாய் செண்பகத்தம்மாவை “அத்தை! அத்தை!” என்றும், சுந்தரியம்மாவை “அத்தை மாமி” என்றும் அழைத்து அவர்களின் மனதில் இடம் பெற முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றான்.

காரியம் முடிக்க பெண்களைக் காக்கா பிடிக்கும் வித்தையை நன்றாகவே செய்தான்.

“பாரேன், தனசேகர! வயசு பொண்ணு இருக்குற வீடு. அந்தப் பொண்ணு வீட்டுல இருக்கும்போது போகப்படாதுன்னு இந்து காலேஜு போனப்புறமா வந்து
அது திரும்பறதுக்குள்ளாற போயிடறாப்ல. நல்ல புள்ள! தம்பி சம்முவ மவன நல்ல பையனாதா வளத்துருக்கான்” என்று சிலாகித்தார் செண்பகத்தம்மா.

பாவம், ரத்தினவேல் குடும்பத்தினர்.

தனசேகர் ஒரு ஃபிராடு என்றோ, அவன் தன் தாத்தா கணேசன் என்றும், தன் தந்தை ஷண்முகம் என்றும் சொன்னதெல்லாம் பொய்.

நாகராஜு தங்களிடம் சொல்லச் சொல்லி, தனக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே வந்து சொல்லுவதும், நாகராஜு வாங்கி அனுப்புவதை தான் வாங்கி வருவதுபோல் தந்து ஏமாற்றுவதையும், தனசேகர் நாகராஜுவின் கைப்பொம்மை என்பதையும் அவன் தங்கள் குடும்பத்தை பழிவாங்கவே தனசேகரை அனுப்பியுள்ளதையும் அறியாதிருப்பது விதிசெய்யும் வேலைதானோ!

கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததிருந்தாள் இந்து.

ஒருதட்டில் ஆப்பிள் துண்டுகளும் சாக்லேட்களும் வைத்து அவளிடம் நீட்டினார் சுந்தரி.

தட்டில் இருந்தவற்றைப் பார்த்த இந்து.

“ஓ! ஆப்பிள் அப்றம் சாக்லேட். ஏதும்மா ஃபாரின் சாக்லேட்?” என்றாள்.

“அதாண்டி! அந்தப் பையன் தனசேகர் வாங்கிகிட்டு வந்தது”

“அம்மா!” கத்தினாள் இந்து.

“அம்மா அவ ஒரு ஃப்ராடு. அவன பாத்தாலே எனக்குப் புடிக்கில. அவன யாரும் நம்பாதிங்க. அவ ஏதோ திடத்தோடதா நம்ம வீட்டுக்குள்ள நொழஞ்சிருக்கா. அவன் நல்லவன் இல்ல. போ! இத எடுத்திட்டு” கத்தினாள்.

அம்மா நீட்டிய தட்டை, அவள் விரலாலும் தொடவில்லை.

“க்கூம்! இவ கண்டா, இவ ரொம்ப பெரிய மனுஷி, எல்லாந் தெரிஞ்சவ. ஒருத்தர பாத்த ஒடனயே அவா நல்லவங்களா கெட்டவங்களான்னு கண்டு புடிச்சிடுவா. சொல்ல வந்துட்டா. எவ்ளவு நல்ல பையன் அந்த புள்ள! எத்தன மரியாத! எத்தன பணிவு! போகப் போக புரிஞ்சிப்ப” என்றார் செண்பகத்தமா குரலில் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்க்க.

“போகப் போக நான் புரிஞ்சிக்கிறேனா? நீங்க புரிஞ்சிக்கிறீங்களான்னு பாப்போம். நீயும் அம்மாவுந்தான் அந்த ஃப்ராட நம்புறீங்கனா. அப்பா கூடவும் நம்புறதுதான் ரொம்ப வேதனை” சொல்லிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் இந்து.

“க்கூம்! பாப்பம்! பாப்பம்!” தோளை முகவாய்க் கட்டையில் இடித்துக் கொண்டார் அப்பத்தா.

விடிகாலை மூன்று மணிக்கே எழுந்து விட்டார் பார்வதி மாமி.

‘இன்னும் ஒருமணி நேரத்தில் கோயமுத்தூர்லேந்து ராகவ் வந்துடுவான். கொழந்த அங்க நன்னா சாப்டானோ இல்லியோ? ட்ரெயினிங் எப்டி இருந்துதோ? பதினஞ்சு நாளா கொழந்தய பாக்காம கண்ணே பூத்துப்போச்சு. கொழந்தைக்கு நன்னா சமச்சுப் போடனும்’ தாயுள்ளம் பலவாறு யோசித்தது.

ஊடே, ‘மீனாட்சியா? அலமேலுவா? யார கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவெடுத்திருப்பான்’ என்ற எண்ணமும் எட்டிப் பார்த்தது.

‘டொக்..டொக்..’ வாசல் கதவு தட்டப்படும் சப்தம்.

‘ஹை! ராகவ் குட்டி வந்துட்டான்’ மனம் சந்தோஷிக்க வேகமாய்ச் சென்று கதவைத் திறந்தார் மாமி.

“வாடா செல்லம்” மகனை ஆசை பொங்க வரவேற்றார் மாமி.

“செல்லக்குட்டி! எப்புர்ரா இருக்க? நல்லபடியா ட்ரெயினிங் முடிஞ்சுதா?”

“ம்..நல்லாருக்கேம்மா. நீ எப்பிடி இருக்க?”

“பதினஞ்சு நாளா நீ இல்லாம வீடு வீடாவே இல்லடா அம்பி. சரி சரி வந்த ஒன்னவே ‘தொண தொண’ன்னு ஆரபிச்சுட்டேம் பாரு. போய் வாய கொப்பிளிச்சுட்டு மூஞ்சி அலம்பிண்டு வா! காபி தரேன். குடிச்சிட்டு படுத்து ரெஸ்ட் எடு” சொல்லிக் கொண்டே சமையல் கட்டுக்குப் போனார் மாமி.

காபி குடித்துவிட்டுப் படுத்தவனுக்கு படுக்கை கொள்ளவில்லை. ‘எப்படா எட்டரையாகுமெ’ன்று மனசு தவித்தது.

‘எப்பிடியும் இன்னிக்கு பஸ் ஸ்டாப் போய் இந்துவ பாத்துடனும். நேத்தியோட பத்தம்போது நாளாச்சு இந்துவ பாத்து’ மனசு கணக்கிட்டது. ‘இன்னிக்கு எப்டியும் பாத்துடனும்’ தீர்மானமாய் மனசிடம் சொல்லிக் கொண்டான்.

காலை மணி எட்டு.

அறையைவிட்டு வெளியே வந்தவனை “என்னடா ராகவ்! அதுக்குள்ள எழுந்துட்ட?” அம்மா கேட்டதும் “தூக்கம் வல்ல” என்றான்.

குளித்துவிட்டு பேண்ட் ஷர்ட்டுக்கு மாறி தலை வாரிக் கொண்டான். சுவற்றில் ஆணியில் மாட்டியிருந்த வண்டிச் சாவியை எடுத்தபோது,

“என்ன ராகவ்! அதுக்குள்ள ஆபீஸா கெளம்பிட்ட? டிபன் கூட சாப்பிடல?” என்று கேட்டார் மாமி.

“இல்ல, ஆபீஸ்லாம் போல. வெளீல கொஞ்சம் வேலருக்கு. ஒடனே வந்துடுவேன்” அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்று வண்டியை எடுத்தான் ராகவ்.

புரியாத புதிராய் மகனைப் பார்த்தபடி நின்றார் மாமி.

‘ராகவ் கொஞ்ச நாளாய் முன்போல் இல்லை’ என்று மனது சொன்னது. நெருடலாய் இருந்தது.

வண்டி, இந்து பஸ் ஏறும் நிறுத்தம் நோக்கிப் பறந்தது.

பஸ் ஸ்டாப்பில் வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு நிமிர்ந்தபோது,
ஒத்தையடிப் பாதையிலிருந்து மெயின் ரோடில் கால் வைத்த இந்துவின் மீது ராகவின் பார்வை விழுந்தது.

மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

இந்துவின் பார்வை தன்மீது விழுவதற்காக வண்டியின் ஹாரனை அழுத்தினான்.

மனதில் பதிந்த ஓசை கேட்டதும், சட்டென ஓசை வந்த இடம் நோக்கினாள் இந்து. மகிழ்ச்சியில் திணறிப் போனாள்.

(நேசம் வளரும்)

காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.