பொரிகடலை பர்பி அசத்தலான இனிப்பு ஆகும். இதனை சிறிது நேரத்தில் செய்து விடலாம். இதற்குத் தேவையான மூலப்பொருட்களும் குறைவு.
பண்டிகைக் காலங்களின் போதும், விருந்தினர் வருகையின் போதும் இதனை குறைவான நேரத்தில் எளிதாக செய்து அசத்தலாம்.
இதனைச் செய்து நான்கைந்து நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
இனி சுவையான பொரிகடலை பர்பி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பொரிகடலை – 1 கப்
மண்டை வெல்லம் – 1 கப் (தூளாக்கியது)
தண்ணீர் – 1 கப்
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை
பொரிகடலையை வாணலியில் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை ஆற வைத்து மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும்.

மண்டை வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை சூடேற்றிக் கொள்ளவும்.
பின்னர் வெல்லக் கரைசலை வடித்துக் கொள்ளவும்.



வாயகன்ற பாத்திரத்தில் வெல்லக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
வெல்லக் கரைசல் லேசாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

பின்னர் வெல்லக் கரைசலுடன் பொடித்து வைத்துள்ள பொரிகடலை மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.

சட்டென பொரிகடலை மாவு கெட்டியாகி விடும். ஆதலால் கைவிடாது கிளறவும்.
அவ்வப்போது நெய்யினைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

வாணலியில் மாவானது ஒட்டாமல் திரளும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.


ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

சுவையான பொரிகடலை பர்பி தயார்.
நான் ஆறிய மாவில் சிறிய மூடியைப் பயன்படுத்தி வட்டத் துண்டுகளாக்கியுள்ளேன். மீதமுள்ளவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டியுள்ளேன்.

குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் முந்திரிப் பருப்பு, பிஸ்தா ஆகியவற்றை துருவி மேலே அலங்காரத்திற்குப் பயன்படுத்தலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஏலக்காய் பொடியை மாவில் ஒருசேரக் கலந்து கொண்டு பின்னர் தண்ணீரில் சேர்த்துக் கிளறலாம்.
பொரிகடலையை வறுத்து பின்னர் பொடி செய்து பயன்படுத்தினால் பர்பி வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!