பொரித்த துவையல் செய்வது எப்படி?

பொரித்த துவையல் அருமையான தொட்டுக் கறியாகும். தேங்காய் கொண்டு செய்யப்படும் இத்துவையல் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

வழக்கமாகச் செய்யும் தேங்காய் துவையலை விட இது மணத்திலும், சுவையிலும் சற்று வேறுபட்டிருக்கும். இனி சுவையான பொரித்த துவையல் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

தேங்காய் – ½ மூடி (பெரியது)

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

கல் உப்பு – தேவையான அளவு

பொரிக்கத் தேவையானவை

உளுந்தம் பருப்பு – ஒரு குழிக் கரண்டி

மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

கடுகு – ¼ ஸ்பூன்

மிளகு – 7 எண்ணம்

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கீற்று

பொரித்த துவையல் செய்முறை

முதலில் தேங்காயைப் பூவாகத் துருவிக் கொள்ளவும். புளியை பிய்த்துப் போட்டு அது மூழ்கும் வரை சிறிதளவு தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

மிளகாய் வற்றலில் காம்பினை நீக்கி விடவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றிக் காய விடவும்.

அதில் குழிக் கரண்டி உளுந்தம் பருப்பைச் சேர்க்கவும்.

பின் அதனுடன் கடுகு, மிளகு, அலசி உருவிய கறிவேப்பிலை, காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

 

தாளிக்கும்போது
தாளிக்கும்போது

 

உளுந்தம் பருப்பு பொன்னிறமானதும் அடுப்பினை அணைத்து விடவும்.

பின் இக்கலவையை ஆற விடவும். மிக்ஸியில் தேங்காய்த் துருவல், பொரித்த உளுந்தம் பருப்பு கலவை சேர்த்து முதலில் லேசாக அரைக்கவும்.

 

உளுந்தம் பருப்புக் கலவையை தேங்காய் துருவலுடன் சேர்க்கும்போது
உளுந்தம் பருப்புக் கலவையை தேங்காய் துருவலுடன் சேர்க்கும்போது

 

பின் இதனுடன் ஊற வைத்த புளி மற்றும் புளி ஊற வைத்த தண்ணீர், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும்.

 

புளி, கல் உப்பு சேர்த்ததும்
புளி, கல் உப்பு சேர்த்ததும்

 

தேவை எனில் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சுவையான பொரித்த துவையல் தயார்.

 

பொரித்த துவையல்
பொரித்த துவையல்

 

இதனை பருப்பு சாதம், கலவை சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், வற்றல் குழம்பு ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் தேவையான அளவு வெள்ளைப் பூண்டினை பொரிக்கத் தேவையான பொருட்களுடன் சேர்த்து வதக்கி துவையல் தயார் செய்யலாம்.

– ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.