பொரி அரிசி உருண்டை என்பது அருமையான சிற்றுண்டி. இதனைச் செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமான இதனை அடிக்கடி செய்து கொடுக்கலாம்.
இதனைச் செய்வதற்கு எல்லாவிதமான அரிசிகளையும் பயன்படுத்தலாம். நான் இப்பதிவில் சிவப்பு அரிசி (மாப்பிளை சம்பா) அரிசியினைப் பயன்படுத்தியுள்ளேன்.
நீங்கள் உங்களுக்கு விருப்பமான எந்த அரிசியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதனைச் செய்வதற்கு நிலக்கடலை, பாதாம் பருப்பு ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல ஆரோக்கியமான ஒன்றாக இது விளங்குகிறது.
இனி சுவையான பொரி அரிசி உருண்டை செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி – 1 கப்
மண்டை வெல்லம் – 1 கப் (தூளாக்கியது)
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் – 2 எண்ணம்
நிலக்கடலை பருப்பு – 1/3 கப்
பாதாம் பருப்பு – 10 எண்ணம்
செய்முறை
மாப்பிளை சம்பா அரிசியினை நன்கு கழுவி, சல்லடையைப் பயன்படுத்தி தண்ணீரை ஒட்ட வடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, கழுவி தண்ணீரை வடித்த அரிசியைச் சேர்க்கவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைத்து அரிசியை ஒருசேர நன்கு வறுக்கவும்.
அரிசி பொரிந்து நிறம் மாறியதும், அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி ஆற விடவும்.
மிக்ஸியில் அரிசியைச் சேர்த்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.


நிலக்கடலைப் பருப்பினை வாணலியில் சேர்த்து, அடுப்பினை சிம்மிற்கும் சற்று அதிகமாக வைத்து, ஒருசேர நன்கு வறுத்துக் கொள்ளவும்.
நிலக்கடலைப் பருப்பு ஆறியதும் அதன் தோலினை நீக்கி விடவும்.
மிக்ஸியில் தோல் நீக்கிய நிலக்கடலைப் பருப்பு, பாதாம் பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.

மண்டை வெல்லத்தை பொடியாக நசுக்கிக் கொள்ளவும்.
மிக்சியில் பொடியாக்கிய மண்டை வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மண்டை வெல்லமும் தேங்காய் துருவலும் சேர்ந்து விழுதாகி விடும்.


வாயகன்ற பாத்திரத்தில் பொடித்த பொரி அரிசி மாவு, மண்டை வெல்லம் – தேங்காய் துருவல் கலவை, பொடித்த நிலக்கடலை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைந்து ஒருசேரத் திரட்டி பத்து நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.



பத்து நிமிடங்கள் கழித்து அதனை சிறுசிறு உருண்டைகளாகத் திரட்டவும்.
சுவையான பொரி அரிசி உருண்டை தயார்.

இதனை ஒருவாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
குறிப்பு
தேங்காய் துருவலுக்கு புதிதான தேங்காயைப் பயன்படுத்தவும்.