பொறுப்பாளி யார்?

‘தாயிற் சிறந்த‌ கோயில் இல்லை’ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது பழமொழி. ஒரு குறிப்பிட்ட வயதுவரை குழந்தையானது தாயைச் சார்ந்தே வளர்ந்து வருகிறது.

பள்ளியில் சேர்க்கும் வரை என்று சொல்லலாம். உறக்கத்திலிருந்து எழுப்பி, குளிக்கச் செய்து ஆடைகளை மாட்டி, உணவை ஊட்டி பள்ளிக்கு அனுப்பும் வரை தாயானவள் தன் குழந்தையுடன் ஒன்றிப் போய்விடுகிறாள்.

குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என தாயானவள் தன் குழந்தைக்குக் கோயில் மாதிரிதான்.

கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் குழந்தைக்கு விவரம் தெரிகிற வயது வந்ததும், தந்தையின் கடமையும் ஆரம்பமாகிவிடுகிறது.

பள்ளியில் சேர்க்கும்வரை குழந்தையுடன் விளையாடியும், கொஞ்சியும் ‘ஹாயாகப்’ பொழுதைப் போக்கிய தந்தைக்கு குழந்தை பள்ளியில் சேர்ந்தது முதல் பொறுப்புணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.

இக்காலத்தைப் பொறுத்தமட்டில், என்னதான் தாய் படித்திருந்தாலும், குழந்தையின் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் சற்றுக் கெடுபிடி காண்பித்து, அக்குழந்தையை முறையாக, ஒழுங்காக படிக்க வைக்கக் கூடிய லாவகம் தந்தைக்கே தேவைப்படுகிறது.

குழந்தையின் மேல் உயிரையே வைத்திருக்கும் தாயானவள் குழந்தை சிறிது கண் கலங்கினாலும் பதறிப் போய் விடுகிறாள்.

பாசமும் செல்லமும் குறுக்கிட்டு அவளை எதுவும் செய்ய முடியாமல் கட்டிப் போட்டு விடுகின்றன.

குழந்தைப் பருவம் என்றில்லை. வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என எல்லா நிலைகளிலுமே தன் பிள்ளைகளிடம் தாய் அபரிமிதமான அன்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலைமையைத் தான் இன்னும் காண்கிறோம்.

ஊர் சுற்றி விட்டுச் சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறே பயந்து, பயந்து வீட்டுக்குள் நுழையும் பிள்ளையைத் தந்தையின் கர்ஜனையே வெலவெலக்க வைத்துவிடுகிறது.

தந்தையின் கோபத்திற்கு ஆளாகி, தண்டனையாகச் சாப்பாட்டை இழக்க நேரிடும் போது தாயானவள் குறுக்கிட்டு சமாதானக் கொடியை நாட்டி விடுகிறாள்.

முதுமைப் பருவத்தை எடுத்துக் கொண்டால், மனைவி பிள்ளைகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில் நாட்களைத் தள்ளி வரும் சூழ்நிலையில் தாயின் அன்பும், அரவணைப்பும், ஆலோசனையும் தான் தெம்பை ஏற்படுத்துகின்றன.

பிள்ளைகளை முறையாக வளர்த்து ஆளாக்கி சமூகத்தில் ஒரு நல்ல பிரஜையாக உலவ விடுவது என்பதில் தாயைக் காட்டிலும், தந்தையின் பங்கே நிறையத் தேவைப்படுகிறது.

நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தல், சரியான நேரத்தில், சரியான யோசனைகள் வழங்குதல், வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுத்தல், இப்படிப் பல்வேறு அம்சங்களை தந்தை தன் பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

ஆண் பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் இவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் கண்ணாடியைக் கையாளுவது போலச் செயல்படும் தந்தையானவர், பெண் பிள்ளைகளை வளர்க்கின்ற விஷயத்தில் சற்றுத் தடுமாறிப் போய் விடுகிறார். இங்கே தாயின் பங்கு அதிகமாகிவிடுகிறது.

செல்லம் கொடுப்பது, அன்பை ஊட்டுவது போன்றவைகள் ஆண் பிள்ளைகளுடன் ஒப்பிடுகையில் பெண் பிள்ளைகளுக்குத் தாயிடமிருந்து எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லாமற் போய்விடுகிறது.

‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை’ என்னும் பழமொழியைத் தாரக மந்திரமாகக் கொண்டு தன் பெண்ணை முறையாக, ஒழுங்காக வளர்ப்பதில் தாய்க்கு அதிக அக்கறை ஏற்பட்டுவிடுகிறது.

புகுந்த வீட்டில் பெயர் எடுக்கப் பெண்ணை வளர்க்கும் விஷயத்தில் தாய்க்குத் தந்தையைக் காட்டிலும் பொறுப்பு கூடுதலாகவே தேவைப்படுகிறது.

எனவே, பிள்ளைகள் ஆணோ பெண்ணோ கெட்டுப்போனால் பொறுப்பாளி யார் என்னும் கேள்விக்கு மிகச் சரியாக விடையளிக்க வேண்டுமானால், தாய்தான் தந்தைதான் என்று ஒருவர் மீது ஒருவர் பழியைச் சுமத்துவதைவிட, இருவருக்குமே சமஅளவில் பொறுப்பு, கடமை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நடத்துனரை மட்டும் வைத்துக் கொண்டு அல்லது ஓட்டுநரை மட்டும் வைத்துக் கொண்டு, ஒரு பயணிகள் பேருந்தை குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்க இயலாது.

அதேபோல், பிள்ளைகள் என்கிற பயணிகளைச் சுமந்து கொண்டு வாழ்க்கை என்னும் பேருந்தை முறையாக, சீராகச் செலுத்த தாய் ஓட்டுநர் என்றால், தந்தை நடத்துனர் எனலாம்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

Visited 1 times, 1 visit(s) today