போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே என்று தொடங்கும் இப்பாடல் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் முதலாவது பாடலாகும்.

திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் சைவத்தின் தலைவனான சிவபெருமான் மீது வாதவூரடிகளாகிய மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

மார்கழி இறைவழிபாட்டின் போது திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மார்கழி 30 நாட்களுக்கு 30 பாடல்கள் பாடப் பெறுகின்றன.

திருப்பள்ளியெழுச்சி என்பது தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் ஒன்று. பள்ளி கொண்டிருக்கும் இறைவனை துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன. இப்பாடல்களில் வைகறைப் பொழுதில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ரங்கநாதப் பெருமானின் மீது பாடிய திருப்பள்ளியெழுச்சி பாடல்களும் புகழ் பெற்றவை.

சிவபெருமானின் திருவடிகளையும், திருமுகத்தினையும்; போற்றி வணங்கும் தம்மைக் காத்து அருளுமாறு வேண்டுதல் வைப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வாழ்விற்கு அடித்தளமான இறைவனே, உன்னுடைய திருமுகப் புன்முறுவலை வேண்டி திருவடிகளில் மலர் தூவிப் போற்றுகிறோம். எமக்கு உம்முடைய திருவருளைத் தந்து ஆண்டருள பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக என்று மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.

சேற்றில் செந்தாமரை மலர்கள் மலர்வதைப் போல, தம்மை உளமாற நினைப்பவர்கள் மனதில் செந்தாமரை மலர்களைப் போல தோன்றி அருளுவான் என்பதை இப்பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இனி திருப்பள்ளியெழுச்சி முதலாவது பாடலைக் காண்போம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 1

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டு நின்திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடியுடையாய் எமையுடையாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே விளக்கம்

என் வாழ்விற்கு அடிப்படையான மூலப்பொருளே, உன்னைப் போற்றுகிறேன்.

சேற்றில் நின்று அழகிய இதழ்களை விரித்து மலரும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறைந்திருக்கின்ற சிவபெருமானே,

இடபக் கொடியை உடையோனே,

என்னை ஆட்கொண்டோனே,

என்னுடைய தலைவனே, உன்னைப் போற்றுகின்றேன்.

பொழுது விடிந்து விட்டது. ஆதலால் உன்னுடைய அழகிய திருவடிகள் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று ஒத்த மலர்களைத் தூவி போற்றுகின்றேன்.

எங்களுக்கு அருள் புரியும் உன்னுடைய திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை, எங்கள் உள்ளத்தில் இருத்தி உன்னுடைய திருவடிகளை வணங்குகின்றேன். பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.

சூரியனைக் கண்டு சேற்றிலிருக்கும் செந்தாமரைகள் மலர்வதைப் போல், இறைவனின் நினைவு, குழம்பிய மனதில் இதயத் தாமரையை விளித்து எழச் செய்யும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: