மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்!

மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்வித்த
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

பிணியுற்று சாதிப் பிணியுற்று
மதப் பேதமுற்று மதிகெட்டு
வீழ்ந்திட்ட ஊழலில் வீழ்ந்திட்ட
எங்களை விடுவிக்க இரட்சிக்க
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

அஹிம்சையால் அராஜகத்தை அழித்திட்ட
பண்பான அன்பினால் பரங்கியைத் துரத்திட்ட நீ
பண்பின்றி பதவி வெறியால் தாழ்ந்திட்ட வீழ்ந்திட்ட
பாரதத் தலைவர்களை மீட்சிக்க
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

நீ வந்திட்டாய் நீ வந்திட்டாய்
மறு பிறவியாய் வந்திட்டாய்
மார்டின் லுதர் கிங்காய் மண்டேலாவாய்
செய்திட்டாய் நீ செய்திட்டாய் அதிசயங்கள்
ஆனால்
எங்கேயோ அல்லல் படும் மக்களுக்கே செய்திட்டாய்
இங்கேயே இப்போதே வந்து விடு இல்லையேல்
கொடிய கோட்சேக்கள் பூண்டிடுவார்
மகாத்மா வேடம்
பிறகு
நீயே வந்திட்டாலும் நம்புவோம் நாங்கள்
கோட்சேக்களைத் தான் மகாத்மாவென்று
ஏனென்றால்
போலிகளையே பார்த்துப் பழகிவிட்ட எங்களுக்கு
நிஜம் மறந்து போனது
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

எல்லார்க்கும் எல்லாமும் வேண்டி
கடையனுக்கும் கடைத்தேற்றம் என்றேங்கி
கடைசி வரையில் வாழ்ந்திட்டாய்
கடையனைத் தேடுகிறோம்
கடைத்தேற்றம் கொடுக்கத்தான்
காணவில்லை! காணவில்லை!
கடையன் தொலைந்து போனான் இடைவெளியிலே!
நீ வந்து விடு அவனைக் கண்டு விடு
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

மகாத்மா நீ மகிழ்ந்து போவாய் என்று
நாங்கள் செய்து விட்ட சாதனைகள் எராளம் எராளம்
போரிட்டேம் போரிட்டோம்
பல முறை போரிட்டோம்
தெரியவில்லை பெற்றோமா வெற்றி என்று
புதைத்திட்டோம் அகிம்சையைப் புதைத்திட்டோம்
பல நூறு அடிக்கும் கிழே!
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

புத்தன் சிரித்தான் புத்தன் சிரித்தான் என்றே
புதைகுண்டு வெடித்திட்டோம் போக்ரானிலே
பிறகும் வெடித்திட்டோம்
புதைகுழியில் எங்களையே புதைத்திட்டோம்!
வந்து விடு வந்து விடு
அகிம்சையை ஆழத்திலிருந்து எடுத்துத் தந்து விடு
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

அரை நிர்வாணமாய் நின்றாய் நீ அன்று
மானுட அவலத்தை மதுரையில் கண்டு
ஆனால் இன்றும் ஆடைப் பஞ்சத்தில்
அகில பாரதத்தில் அநேகம் பேர்
வந்துவிடு அனைவர்க்கும் ஆடை தந்து விடு
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

அழகழகாய் அழகழகாய் அழகிகளை
தந்து விட்டோம் அகிலத்திற்கே
அழுக்கழுக்காய் அழுக்கழுக்காய் ஆகிவிட்டோம்
அகத்தினுள்ளே உள் அகத்தினுள்ளே
வத்து விடு அரை நிர்வாண அழகரே
தந்து விடு எங்கள்அகத்தினுக்கு அழகை
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

ஒற்றுமை நாட்டிற்கு வேண்டி
உயிரை நீ விட்டாய்
நீ சிந்திய ரத்தத்தால்
நாடு ஒன்று சேர்ந்தது அன்று
மதத்தீ கொழுந்து விட்டு எரியும் இன்று
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

தளர்த்தி விட்டோம் கட்டுப்பாட்டை நாங்கள்
பெருக்கிவிட்டோம் பொருளாதாரத்தை
ஆனால் தளர்ந்து விட்டோம் வெளி கலாச்சார போகத்திலே
நீ வாழ்விக்க வந்து விடு எங்களை
தந்து விடு அமைதியின் கலாச்சாரத்தின் சாரத்தை
எங்களுக்குத் தந்து விடு!
உன்னைப் (பின்) பற்றியே வாழ விடு!
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

இப்படி ஒரு மாமனிதன் வாழ்ந்தான் என
நம்ப மறுப்பார்கள் என்று சொன்னானே
அறிஞன் ஐன்ஸ்டின் அன்று!
அறிவுற்ற அறிஞர் பலர்
இங்கேயே இப்போதே நம்பவில்லை.
நம்பவிடவில்லை நீ வாழ்ந்தாய் என்று
அதுவும் கொடிய கொடுங்கோலன்
ஹிட்லரின் காலத்திலே நீ வாழ்ந்தாய் என்று
ஆகவே,
இங்கேயே இப்போதே வந்து விடு
இங்கேயே எப்போதும் இருந்து விடு
இறக்காமல் இருந்து விடு
வந்து விடு உன் கல்லறையில் இருந்து எழுந்து விடு
வாழ்வு கொடு எங்களுக்கு சாந்தியான வாழ்வுகொடு
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!

Dr. இராமானுஜம் மேகநாதன்
பேராசிரியர் (மொழிக்கல்வி)
மொழிக் கல்வித் துறை
தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்
புதுதில்லி 110016
கைபேசி: 09968651815
மின்னஞ்சல்: rama_meganathan@yahoo.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.