நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒருவருடைய மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க இயலாது.
நம்மில் பலர் பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை இல்லை.
ஒருவருடைய மனநிலையே மகிழ்ச்சிக் காரணமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் கதையே மகிழ்ச்சிக்கு என்ன விலை? என்பதாகும். கதையைப் பார்ப்போம்.
முத்தூரில் இந்திரன் என்ற செல்வந்தன் வசித்து வந்தான். அவனுடைய வீட்டிற்கு அருகில் சந்திரன் என்ற ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். சந்திரனுக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர்.
சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சந்திரனின் குடும்பத்தினர் இரவு ஆனதும் பாட்டுப் பாடி, ஆடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.
இந்திரனுக்கோ சந்திரனின் குடும்பத்தினர் ஏழைமையிலும் மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்கவில்லை.
சந்திரன் குடும்பத்தினரை மகிழ்ச்சியாக இருக்க விடக்கூடாது என இந்திரன் எண்ணினான். அதற்காக ஒரு திட்டத்தை வகுத்தான்.
பணமா பாசமா?
திட்டத்தின்படி ஒருநாள் இரவு வேளையில், சந்திரனை இந்திரன் பணமுடிச்சோடு சந்தித்தான்.
சந்திரனிடம் இந்திரன் “சந்திரா, நீ உன்னுடைய குழந்தைகளுடன் அன்றாட உணவிற்காக மிகவும் கஷ்டப்படுகிறாய். இந்த பணமுடிப்பினைக் கொண்டு உன்னுடைய வறுமையைப் போக்கிக் கொள்.” என்றான்.
இதனைக் கேட்டதும் சந்திரன் “அப்படியா?” என வியந்து கேட்டான்.
அதற்கு இந்திரன் “ஆனால் ஒரு நிபந்தனை. உன்னுடைய குழந்தைகளில் யாரேனும் ஒருவரை என்னுடன் என்னுடைய மாளிகைக்கு அனுப்பிவிடு. நான் அக்குழந்தையை பராமரித்து வருகிறேன். உனக்கு தேவையான பணத்தினை அவ்வப்போது வழங்குகிறேன்.” என்று கூறினான்.
அதனைக் கேட்டதும் “நான் என்னுடைய வீட்டில் உள்ளவர்களிடம் இவ்விசயத்தைப் பற்றிக் கூறி, அவர்களின் விருப்பத்தை அறிந்த பின் இப்பணத்தைப் பெற்றுக் கொள்கிறேன்” என்றான்.
அதற்கு இந்திரன் “பரவாயில்லை. நீ இதனை எடுத்துக் கொண்டு செல்” என்று வற்புறுத்தி பணப்பையைக் சந்திரனிடம் கொடுத்துவிட்டான்.
சந்திரனும் நடந்தவைகளை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தான். தன்னுடைய குழந்தைகளிடம் “யார் இந்திரன் வீட்டிற்குச் செல்கிறார்களோ, அவர்கள் வயிறு நிறைய உண்ணலாம் என்று கூறினான்.
ஆனால் குழந்தைகள் யாரும் இந்திரன் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை.
இந்திரனிடம் சந்திரன் தன்னுடைய குழந்தைகள் இந்திரன் வீட்டிற்கு வரவிரும்பவில்லை என்று கூறி பணமுடிப்பைக் கொடுத்தான்.
பணமா பாட்டா?
அதற்கு இந்திரன் “சரி, பணமுடிப்பை நீயே வைத்துக் கொள். நாளை முதல் உன்னுடைய குடும்பத்தினர் யாரும் பாடக்கூடாது, ஆடக்கூடாது.” என்று கூறி அனுப்பிவிட்டான்.
சந்திரன் தன் குடும்பத்தினரிடம் பணமுடிப்பைப் பெற்றுள்ளதால் இனி யாரும் பாடவோ, ஆடவோ வேண்டாம் என்று கூறினான்.
ஒருநாள் இரவு ஆட்டம் பாட்டம் இல்லாமல் துன்பமாகக் கழிந்தது.
மறுநாள் இரவு சந்திரனின் இளைய மகன் ‘ஊலலா.. ஊலலா..’ என்று பாடத் தொடங்கினான். குடும்பத்தினர் அனைவரும் அவனுடன் இணைந்து மகிழ்ச்சியாக பாடினர்.
சந்திரன் இந்திரனிடம் பணமுடிச்சைக் கொடுத்துவிட்டு “எங்களுடைய மகிழ்ச்சிக்கு என்ன விலை? எவ்வளவு பணம் கொடுத்தாலும் எங்களுடைய மகிழ்ச்சியை வாங்க இயலாது.” என்று கூறிச்சென்றான்.
இந்திரன் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வாழ்க்கைக்காகப் பணம் என்ற நிலை மாறி, பணத்திற்காக வாழ்க்கை என்ற நிலை வந்தால், மகிழ்ச்சி நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.
ஆதலால் சந்திரனைப் போல் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை வாழுங்கள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!