மங்கையர்கரசியார் நாயனார் – பாண்டிய நாட்டை சைவ சமயத்திற்கு மாற்றியவர்

மங்கையர்கரசியார் நாயனார்

மங்கையர்கரசியார் நாயனார் சமண சமயத்தை தழுவிய பாண்டிய மன்னனையும் மக்களையும் திருஞானசம்பந்த நாயனாரைக் கொண்டு சைவ சமயத்திற்கு மாற்றிய பாண்டிய அரசி.

சிவனடியார்களான 63 நாயன்மார்களில் அறுபது பேர் ஆண்கள், மூவர் பெண்கள். காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசியார் மற்றும் இசைஞானியார் ஆகியோரே அப்பெண் நாயன்மார்கள் ஆவர்.

காரைக்கால் அம்மையார் இறைவனாலே ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட சிறப்புடையவர்.

மங்கையர்கரசியார் சமண சமயத்தின் பிடியிலிருந்த பாண்டிய நாட்டினை சைவத்திற்கு மாற்றியவர்.

இசைஞானியார் ‘வன்தொண்டர்’ என்றழைப்படும் சுந்தரரின் தாய்.

மங்கையர்கரசியார் சோழ மன்னனின் மகளாகப் பிறந்து நின்றசீர் நெடுமாற பாண்டிய மன்னனின் மனைவியானவர். இவருடைய இயற்பெயர் மானி என்பதாகும்.

இவர் பாண்டிய நாடு சைவத்திற்கு மாற மிகமுக்கிய காரணமாக இருந்ததால் மங்கையருள் அரசி என்னும் பொருள் உடைய மங்கையர்கரசியார் என்ற சிறப்பிக்கப்படுகிறார்.

பெண் நினைத்தால் ஒரு சமூகத்தைச் சீர்திருத்தமுடியும் என்பதற்கு 63 நாயன்மார்களுள் ஒருவரான மங்கையர்கரசியார் நாயனார் ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

சோழ மன்னனின் மகளாகப் பிறந்த மானிக்கு இயற்கையிலேயே சிவனார் மேல் பேரன்பு ஏற்பட்டது. அவர் வளர்ந்த சோழநாட்டிலும் சைவ நெறி பின்பற்றப்பட்டதால் அவருக்கு சிவனாரை எப்போதும் மறவாமல் இருக்கும் சூழல் அவருக்கு அமைந்தது.

திருமணப் பருவம் எய்திய மானியை பாண்டிய அரசனான நின்சீர் நெடுமாறன் மணந்து பாண்டி அரசியாக்கினார்.

நாளடைவில் பாண்டிய நாட்டில் சமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. நின்சீர் நெடுமாறப் பாண்டியனும் சமணத்தின்பால் பற்று கொண்டான். மதுரை மக்களும் மன்னன் வழியே நின்றனர்.

ஆனால் பாண்டிய அரசியான மானியும், பாண்டிய நாட்டு அமைச்சரான குலச்சிறையாரும் சிவனடியைப் போற்றி நின்றனர்.

மன்னன் சமணத்தைக் கடைப்பிடித்ததால் பாண்டிய நாட்டு சிவாலயங்களில் வழிபாடு குறைந்து போயிற்று; சமணம் செழித்தது.

பாண்டிய அரசிக்கும், அமைச்சர் குலச்சிறையாருக்கும் சிவவழிபாடு மேற்கொள்ள அரசன் அனுமதி அளித்திருந்தான்.

பாண்டி மாதேவியான மானி, திருஆலவாய் அண்ணலிடம் பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க வேண்டும் என்பதை விண்ணப்பமாகக் கொண்டு வழிபாடு மேற்கொண்டாள்.

பாண்டிய அரசனை சைவத்திற்கு மாற்ற மானி பலவாறு முயற்சி செய்தாள். ஆனால் ஏதும் பலனளிக்கவில்லை.

மந்திரமாவது நீறு

அப்போது ஓர்நாள் சோழ நாட்டில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவத்தொண்டு புரிந்து வருவதை அறிந்தாள்.

திருஞான சம்பந்தரின் உதவியால் சமணத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் பாண்டிய நாட்டை சைவத்திற்கு மாற்ற முடியும் என்று எண்ணினாள்.

தம்முடைய எண்ணத்தை குலச்சிறை நாயனாரிடம் தெரிவித்தாள் மானி. அப்போது ஞானசம்பந்தர் சோழ நாட்டில் வேதாரண்யத்தில் திருநாவுக்கர நாயனாருடன் தங்கியிருந்தார்.

குலச்சிறையாரின் உதவியுடன் ஆட்களை அனுப்பி திருஞான சம்பந்தரை மதுரைக்கு அழைக்கச் செய்தார் மானி.

மானி மற்றும் குலச்சிறையாரின் வேண்டுகோளை ஏற்று ஞானசம்பந்தர் மதுரை வந்தார்.

திருஞானசம்பந்தரைக் காண வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியதால் மன்னிடம் ஆலவாய் அண்ணலை வழிபடச் செல்வதாகக் கூறி திருக்கோவிலை அடைந்தார் மானி.

திருஆலவாய் அண்ணலை வழிபாடு செய்ய ஞானசம்பந்தர் திருக்கோவிக்கு எழுந்தருளினார்.

அப்போது கைகளைக் கூப்பி அவர் முன்னே சென்ற மானியை குலச்சிறையார் “இவரே பாண்டிமாதேவி மானி” என்று கூற, மானி ஞான சம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.

அவரை எழுப்பிய ஞானசம்பந்தர் “பல சமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காணவே யாம் வந்தோம்” என்று கூறி ஆலவாய் அண்ணலை வழிபட அங்கிருந்தோருடன் திருக்கோவிலுக்குச் சென்றார்.
பின்னர் ஞானசம்பந்தர் தம் அடியவர் கூட்டத்தினருடன் திருமடத்தில் தங்கினார்.

வாது செய்ய பாண்டியநாட்டிற்கு வந்திருந்த ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த சமணர்கள் மன்னிடம் சென்று அவரைப் பழித்து கூறினர்.

அன்று இரவு மானியிடம் பாண்டிய அரசன், “சோழநாட்டு சிவபிள்ளை வாது செய்ய பாண்டிய நாட்டிற்கு வந்துள்ளதைக் கண்டதால் சமணர்களுக்கு கண்டமுட்டு (காண்பதால் தீட்டு). அதனைக் கேட்டதால் எனக்கு தீட்டுமுட்டு (கேட்டதால் தீட்டு)” என்று சோகத்துடன் கூறினான்.

“வாதில் வெல்வபவர்கள் பக்கமே நாம் செல்லலாம்.” என்று மானி பாண்டியனுக்கு ஆறுதல் கூறினாள். எனினும் ‘அச்சிறுபிள்ளைக்கு அமணர்கள் ஏதும் தீங்கிழைக்கக் கூடாது’ என்று எண்ணியபடி உறங்கினாள்.

சமணர்கள் முதல்நாள் இரவு ஞானசம்பந்தர் மடத்திற்கு தீவைத்ததையும், அவர் அதிலிருந்து தப்பியதையும் கேட்ட மானி முதலில் அதிர்ந்து பின்னர் மகிழ்ந்தாள்.

ஞானசம்பந்தரின் வாக்கின்படி சமணர்கள் வைத்த தீ பைய பாண்டியனை அணுகி வெப்பு நோயாக மாறி வாட்டத் தொடங்கியது. சமணர்களாலும், வைத்தியர்களாலும் பாண்டிய மன்னனைக் குணப்படுத்த முடியவில்லை.

அப்போது மன்னனிடம் பாண்டி மாதேவி “சோழநாட்டு சிவக்கொழுந்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்கொரு வாய்ப்பு தாருங்கள்.” என்று வேண்டினாள்.

நோயின் கொடுமையால் பாண்டிய அரசனும் சம்மதம் தெரிவித்து ஞானசம்பந்தரை அரண்மனைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தான்.

சம்பந்தர் ‘மந்திரமாவது நீறு‘ பதிகம் பாடி பாண்டியனின் வெப்பு நோயை நீக்கினார்.

ஆனாலும் சமணர்கள் தங்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் ஞானசம்பந்தரை வாதிற்கு அழைத்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற அனல் மற்றும் புனல் வாதங்களில் சம்பந்தர் வெற்றி பெற்றார். சம்பந்தர் புனல் வாதத்தில் ‘மன்னனும் ஓங்குக’ என்னும் வரியைக் கொண்டு பதிகம் பாடி இறையருளால் பாண்டியனின் கூனை நிமிரச் செய்து நின்சீர் நெடுமாறப் பாண்டியனாக்கினார்.

அதன் பின்னர் பாண்டிய மன்னன் சைவத்திற்கு மாறினான். அவனைத் தொடர்ந்து பாண்டிய நாட்டு மக்களும் சைவர்களாகினர்.

ஞானசம்பந்தர் சிறிது காலம் பாண்டிய நாட்டில் தங்கியிருந்து நின்றசீர் நெடுமாற நாயனார், மங்கையர்கரசியார் நாயனார் மற்றும் குலச்சிறை நாயனார் ஆகியோருடன் பாண்டிநாட்டு தலங்களுக்குச் சென்று வழிபட்டு பின்னர் சோழநாடு புறப்பட்டார்.

நின்றசீர் நெடுமாறப் பாண்டியன் சீரும் சிறப்புமாக மதுரையை ஆட்சி செய்ய உதவிய மங்கையர்சரசியார் நாயனார் அடியார் தொண்டு செய்து இறுதியில் நீங்கா பேரின்பமான வீடுபேறு பெற்றார்.

மங்கையர்கரசியார் நாயனார் சிறப்புகள்

நல்லாட்சி செய்வது மன்னனின் கடமை எனினும் மன்னன் அதனைச் செய்யத் தவறும்போது சீர்திருத்த வேண்டியது அரசியின் கடமை என்பதை நிரூபித்தவர்.

திருஞான சம்பந்த நாயனாரால் பாடல்களில் பாடப்பெற்ற பெருமை உடையவர்.

நெறி தவறும் கணவனை நல்வழிப்படுத்துவது மனைவியின் பொறுப்பு என்பதற்கு இன்றைய பெண்களுக்கும் முன்னுதாரமாக திகழ்பவர்.

பாண்டிய மன்னனை நின்றசீர் நெடுமாற நாயனார், அமைச்சரை குலச்சிறை நாயனார் என்று 63 நாயன்மார்கள் வரிசையில் இடம் பெறச் செய்த பெருமை பெற்றவர்.

மங்கையர்கரசியார் நாயனார் சிவன்பால் கொண்டிருந்த பேரன்பால் சமணத்தின் பிடியில் சிக்கியிருந்த பாண்டிய அரசனையும் பாண்டிநாட்டு மக்களையும் சைவத்திற்கு மாற்ற காரணமாக இருந்ததால் 63 நாயன்மார்களுள் ஒருவராக திகழும் பாக்கியம் பெற்றார்.

மங்கையர்கரசியார் நாயனார் குருபூஜை சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

மங்கையர்கரசியார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘வரிவளையாள் மானிக்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.