மூலிகைத் தாவரப் பொருட்களை முறைப்படி குடிநீர் செய்து அத்துடன் சர்க்கரை கலந்து காய்ச்சிப் பாகுப்பதத்தில் தயாரித்துக் கொள்ளலாம். இவ்வாறு தயாரித்துக் கொள்ளும் மணப்பாகினை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
ஆடாதோடை மணப்பாகு
700 கிராம் ஆடாதோடை இலைகளை எடுத்துக் கொண்டு சுத்தப்படுத்திக் குறுக அரிந்து கொள்ள வேண்டும். இதனுடன் 5.50 லிட்டர் நீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
குடிநீரானது 1.50 லிட்டராகச் சுண்டியவுடன் வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் 800 கிராம் சர்க்கரை சேர்த்துக் காய்ச்சிப் பாகுப் பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
ஆடாதோடை மணப்பாகில் இருந்து 10 முதல் 15 மில்லி லிட்டர் எடுத்து நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர இருமல், பல வகையான சுரம், கோழைக் கட்டு ஆகியன தீரும்.
நன்னாரி மணப்பாகு
45 கிராம் நன்னாரி வேர்ப் பட்டையை எடுத்துக் கொள்ளவும். இதனை இடித்து 2 லிட்டர் வெந்நீரில் ஊற வைக்கவும். பின் அதனை காய்ச்சி ஒரு லிட்டராக வற்ற வைக்கவும்.
இதனை வடிகட்டி அதில் 40 கிராம் சர்க்கரையைக் கரைத்துக் கொள்ளவும்.பின் அதனை பாகுப் பதத்தில் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
நன்னாரி மணப்பாகில் இருந்து 15 மில்லி லிட்டர் எடுத்து நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர கண்எரிச்சல், தாகம், நாவறட்சி, மேக நோய், நீர்ச்சுருக்கு, நீர்க் கடுப்பு ஆகியன தீரும்.
துருஞ்சி மணப்பாகு
ஒரு பங்கு துருஞ்சி நாரத்தம் பழச் சாற்றினை எடுத்துக் கொள்ளவும். இத்துடன் இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து பாகுப் பதத்தில் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.
துருஞ்சி மணப்பாகில் இருந்து 15 மில்லி லிட்டர் எடுத்து நீருடன் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர பித்த நோய் தீரும்.
மாதுளை மணப்பாகு
மாதுளம் பழத்தை தோல் நீக்கி விதைகளை ரசமாக்கிக் கொள்ளவும். பின் அதனுடன் கற்கண்டு, பன்னீர், தேன் ஆகியவைகளைச் சேர்த்து ஒன்றாகக் காய்ச்சி பாகுப் பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மாதுளை மணப்பாகில் இருந்து 10 முதல் 15 மில்லி லிட்டர் வரை எடுத்து நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த சோகை, கை கால் எரிச்சல், வாந்தி ஆகியன தீரும்.