வணக்கம் மனிதர்களே! இன்று காலை, ஆகாயத்தில் தவழ்ந்த படி பூமியை சில நிமிடங்கள் பார்த்தேன்.
நான் பார்த்த அந்த இடம் ஒரு பெருநகரம் என்று நினைக்கிறேன்.
அங்கு ஏராளமான கட்டிடங்கள் இருந்தன. அவையெல்லாம் நீங்கள் வசிக்கும் இல்லங்களாக இருக்கலாம்.
அப்பொழுது, ′பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் உங்களது அறிவாற்றலால் நீங்கள் தனித்துவமானவர்கள்′ என்பதை மீண்டும் உணர்ந்து கொண்டேன்.
பெரும்பாலும் விலங்குகள் இயற்கையாகவே தங்களுக்கு ஏற்ற பகுதிகளைத் தெரிந்து கொண்டு அவற்றில் வசித்தாலும், அவை தங்களுக்கென பிரத்யேகமான குடியிருப்புகளை உருவாக்கிக் கொள்வதில்லை.
ஆம், இப்பொழுது நினைவிற்கு வருகிறது. சில பறவைகள் எழில்மிகு கூட்டினை கட்டுவதை பார்த்திருக்கிறேன்.
சரி, இதனை சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?
வாயுக்களாகிய எங்களுக்கென வீடு எது? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான விடையை நானே தேடினேன்.
″அதான் வளிமண்டலம் இருக்கிறதே!. அங்குதான் வாயுக்கள் எப்போதும் திரிந்து கொண்டே இருக்கின்றனவே, அப்போ அது தானே உங்களுக்கு வீடு?″ என்கிறீர்களா?
உங்களது நினைப்பு சரி தான். ஆனால், எங்களுக்கு வளிமண்டலம் மட்டும் வீடு அல்ல. மண்ணும் தான்.
என்ன குழப்பமாக இருக்கிறதா?
நாங்கள் மண்ணிலும் இருக்கின்றோம். அதாவது, மண் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் தான் நாங்கள் இருக்கிறோம்.
அதனால் எங்களை ‘மண் வாயுக்கள்‘ என்றும் அறிவியல் உலகில் அழைக்கின்ற்னர்.
நிலத்திற்கு மேலே வாயுக்கள் இருப்பதால் அதனை வளிமண்டலம் என்று அழைக்கிறீர்கள் அல்லவா?
அதுபோன்று மண்ணிலும் வளிகள் இருப்பதால் அதனை ″மண் வளிமண்டலம்″ என்றும் அழைக்கிறார்கள்.
உங்களுக்கு தெரியுமா?
மண் வளிமண்டலத்தைப் பொறுத்த வரையில் நீர் எங்களுக்கு எதிரி தான்.
அதாவது, மண்ணின் கட்டமைப்பில் இருக்கும் துளைகளில் நீர் இல்லாத போது மட்டுமே எங்களால் அங்கு இருக்க முடியும். நீர் வந்தால் நாங்கள் வெளியேறி விடுவோம்.
மண்ணில் நீர் இல்லாமல் இருக்குமா? என கேட்போருக்கு என்னுடைய பதில் ″இருக்குமே″ என்பது தான்.
நானும் மண்ணில் இருந்தவன் என்ற முறையில் மட்டும் அல்ல, உங்களது அறிவியல் படியே சொல்கிறேன்.
ஆவியாதல், தாவர வேர்களின் நீர் உறிஞ்சுத் தன்மை முதலிய செயல்களால் மண் துளையிலிருந்து நீர் அகற்றப்படுகிறது. அப்பொழுது அந்த வெற்றிடத்தை நாங்கள் தான் இட்டு நிரப்புகின்றோம்.
முக்கியமான தகவல் என்னவெனில், வளிமண்டலத்திற்கும் மண் வளிமண்டலத்திற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன.
முக்கியமாக, மண்ணின் துளைகளில் இருக்கும் வாயுக்களின் கலவையானது, மண்ணில் நடைபெறும் பல்வேறு இரசாயன மற்றும் உயிரியல் செயல்முறைகளை பொறுத்து அமைகிறது.
சரி, மண் வளிமண்டலத்தில் இருக்கும் பொதுவான வாயுக்கள் எவை தெரியுமா?
ஆக்சிஜன், காரியமில வாயு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு, மற்றும் அம்மோனியா போன்றவையே.
மண்ணில் இருக்கும் மிக முக்கியமான மண் வாயு ஆக்சிஜன் என்பதை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
ஏனெனில் மண்ணில் இருக்கும் ஆக்சிஜன் தான் தாவர வேர்கள் மற்றும் மண்ணில் வாழும் உயிரினங்கள் சுவாசிக்க நேரடியாக பயன்படுகிறது.
அத்தோடு, சில நுண்ணுயிர் வளர்சிதை மாற்றத்திற்கும், பல உயிர்வேதியியல் வினைகளுக்குக்கும் இது முக்கியமானது.
மண்ணில் இருக்கும் கரிம சேர்மங்கள் சிதைவடைவதால் கரியமில வாயு உற்பத்தியாகிறது. இது மண்ணிலிருந்து வளிமண்டலத்திற்குள்ளும் நுழைகிறது.
கவனித்தீர்களா, கரிமக் கழிவுகளை எரிப்பதன் மூலம் மட்டும் அல்ல, மண்ணில் வீசப்படும் கரிமக் கழிவுகள் சிதைவுறும் போதும் கரியமில வாயு வெளியேறும்.
சரி மீத்தேன் வாயுவை பற்றி உங்களுக்கு தெரியும் தானே?
ஆமாம், நீங்கள்தான் மீத்தேன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்துகிறீர்களே.
இம், மண்ணில் ஆக்சிஜனில்லா சூழலில் மெத்தனோஜெனீசிஸ் மூலம் மீத்தேன் வாயு உற்பத்தியாகிறது.
பொதுவாக மீத்தேன், ஈர நிலங்கள் மற்றும் நெல் சாகுபடி செய்யும் மண்ணிலிருந்து உமிழப்படுவதை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சொல்ல மறந்துவிட்டேன்! நைட்ரஸ் ஆக்சைடு வாயுவும் காற்றில்லா நிலைமைகளின் கீழ் நைட்ரஜன் நீக்கம் மூலம் மண்ணில் உற்பத்தியாகிறது.
இயற்கை செயல்முறைகள் மட்டுமின்றி, நிலப்பரப்பு கழிவுகள், சுரங்க நடவடிக்கைகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்களை உருவாக்கும் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள் முதலியனவற்றின் மூலமாகவும் மண்ணில் வாயுக்கள் உருவாக்குகின்றன.
மண்ணில் இருக்கும் கரியமில வாயு போன்ற வாயுக்களின் வெளியேற்றத்தின் விகிதங்கள், அங்கு நிலவும் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு போன்ற காலநிலை காரணிகளை பொறுத்து அமைகின்றன என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
மண் வாயுக்கள் சமகால அறிவியல் ஆய்விகளிலும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக மைக்ரோ சீபேஜ் (micro seepage), அதாவது மண்ணில் இருக்கும் பெட்ரோலிய படிவுகளை தேடுவதற்கும் மண் வாயு பயன்படுகின்றது.
அத்தோடு, ரேடான் போன்ற மண் வாயுக்களின் இடப்பெயர்வை ஆராய்வதன் மூலம் அந்த பகுதியில் பூகம்பம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அறிய முடியும்.
எனக்கு தான் ஒளிவுமறைவு இல்லையே! அதனால், மண் வாயுக்களால் ஏற்படும் பாதகங்களையும் சொல்லிவிடுகிறேன்.
மண்ணிலிருந்து வெளியேரும் அம்மோனியா வளிமண்டலத்தில் தூசிப்படலம் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து மனித ஆரோக்கியமும் பாதிப்பிற்குள்ளாகிறது.
மண்ணிலிருந்து வெளியேரும் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஆகியன பசுமை இல்ல வாயுக்களாக செயல்பட்டு, உலகளாவிய காலநிலை மாற்றத்தை உண்டாகுவதில் பங்கு வகிக்கின்றன. .
இத்தோடு மண்ணின் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது நுண்ணுயிர் செயல்பாடு, மண் விலங்குகள் மற்றும் வேர் சுவாசம், இரசாயன சிதைவு, மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, ஊட்டச்சத்து மற்றும் அமில காரத் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
(குரல் ஒலிக்கும்)
கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com