மனசுக்குள் நாய‌னச் சத்தம் – சிறுகதை

“லைட்டைக் கூட போடாம இருட்ல உட்கார்ந்துக்கிட்டு என்னடீ பண்றே?”

அம்மாவின் குரல் கேட்டதும் தான் சுயநினைவுக்கே வந்தேன்.

மணியைப் பார்த்தேன். இரவு மணி ஏழு. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக பிரமை பிடித்த நிலையில் உட்கார்ந்திருக்கிறேன். சுற்றுசூழல் மறந்து இருந்திருக்கிறேன்.

அம்மா சுவிட்சைத் தட்டியதும் இருட்டு மாயமாய் மறைந்து, அறை முழுக்க வெளிச்சம். ஆனால் என் உள்ளம் முழுக்கப் பரவியிருக்கும் இருட்டு எப்போது மறையும்?

என் மன இருட்டு மறைய சுவிட்ச் எங்கே? உணர்ச்சியற்ற முகத்துடன் அம்மாவை ஏறிட்டு நோக்கினேன்.

“நாளைக்குக் காலையிலே மெட்ராஸிலிருந்து ஒரு வரன் உன்னைப் பார்க்க வர்றாங்களாம். நம்ம தரகர் தனுஷ்கோடி கொஞ்ச நேரத்துக்கு முன்னால வந்து தகவல் சொல்லிட்டுப் போனார். நாளைக்கு காலையிலே மட்டும் பர்மிஷனோ, லீவோ போட்டுட்டு பத்துமணி சுமாருக்கு ரெடியாயிடணும் என்ன?”

அம்மாவின் வழக்கமான வேண்டுகோள் தான். வழக்கமான என்பதைவிட ‘இருபத்தோராவது’ வேண்டுகோள் என்பது தான் ரொம்ப சரி.

மூன்று மாதங்களுக்கொரு முறை வீதம், வருடத்திற்கு நான்கு தடவைகளாக, சென்ற ஐந்து வருடங்களில், இருபது தடவைகள், இது போன்ற அம்மாவின் வேண்டுகோள்கள் என்னால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு இடங்களிலிருந்து வரன்கள்.

திவ்யா.

எவ்வளவு அருமையான அழகான ஒரு பெயர் எனக்கு?

என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்பவர்கள் ‘திவ்யாவைப் பிடித்திருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறார்களா என்றால் அது தான் இல்லை.

என் கையால் நான் வினியோகித்த சொஜ்ஜியும், பஜ்ஜியும் தான் ‘திவ்யமாய் இருக்கு’ எனச் சொல்லியிருக்கின்றார்கள்.

எனக்கு முன் பிறந்த அக்காமார்கள் மூவரும் என்னைப் போல சிரிப்பாய் சிரிக்காமல், சீரழியாமல் வெகு சுலபமாக வாழ்க்கை என்னும் ஓடத்திலேறி பயணத்தைத் தொடர்ந்து விட்டனர்.

என் அண்ணன் திவாகரும் என்றைக்கோ ஓடத்தில் ஏறி பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

கடைக்குட்டியான நான் அவனை, வாழ்க்கை எனும் ஓடத்தில் ஏற விடாமல் குறுக்கே நின்று கொண்டு தடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னை வெளியில் தள்ளி ‘மங்களம் பாட’த்தான் எல்லோருமே முழு முயற்சியுடன் பாடுபடுகிறார்கள். வந்து பார்ப்பவர்களுக்குப் புரிவதே இல்லை.

அம்மா சொல்லிவிட்டுப் போய்விட்டாள். மீண்டும் ‘பிரமை’ என்னை ஆட்கொண்டது.

இப்பூவுலகில் அவதரித்திருக்கும் நான் சந்தித்த விந்தையான, வேடிக்கையான மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக என் மனக்கண் முன் தோன்றுகின்றன.

ஒருத்தன் வருகிறான்.

என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிகிறான்.

நான் பணிபுரிவதாக அறிந்ததும், அவன் தரப்போகும் வாழ்க்கைக்கு அதிக விலையை நிர்ணயிக்கிறான்.

இன்னொருத்தன் வருகிறான். இவனுக்கு என்னைவிட, என் வேலையை விட என் அழகும் உடலும் ரொம்பப் பிடித்துப் போய் எது எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்கிறான்.

இவன் வரதட்சணை கேட்கவில்லை. நான் அவனுடன் வர்றதைப் பற்றித்தான் குறியாயிருக்கிறான்.

என் உடம்பை துளைத்தெடுக்கும் இவனது பார்வை ஒன்றே போதும், இவன் என்னை அடையத் துடிப்பதையறிய. ஆனால் இவனது பெற்றோருக்கு இவன் துடிப்பைப் பற்றியா கவலை?

மற்றொருவன் வருகிறான்.

மறுநாள் தகவல் சொல்வதாய் போகிறான். அவனைப் பொறுத்தவரை அவன் கூறிய மறுநாள் வரவேயில்லை.

இப்படிப் பலர்.

கலர் கலராய் நடமாடும் இவ்வுலகில் என்னை ஏன் படைத்தான் இறைவன்?

பிறவியே கூடாது. பிறக்கவே கூடாது.

அப்படியே பிறந்தாலும் பெண்ணாகப் பிறக்கவே கூடாது.

நாளை வருகிறானாம் ஒருவன்.

என் உள்ளத்தைப் படிப்பானா?

என் இதயத்தை ஊடுருவிச் செல்வானா?

சலிப்பிலிருந்து விடுபடத் துடிக்கும் என் குடும்பத்திற்கு உதவுவானா?

மீண்டும் அம்மா வந்து உசுப்பினாள். நினைவலைகளிலிருந்து மீண்டு இவ்வுலகுக்கு வந்தேன்.

எனக்கு விடிகிறதோ இல்லையோ, பொழுது விடிந்தது.

அக்காலைப்பொழுது என் வாழ்க்கையை நிர்ணயம் செய்யப் போவதாகக் காரணம் காட்டி, அண்ணன் மூலமாய் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனுப்பினேன்.

அரை நாளாவது நிம்மதியைத் தரப்போகிற அக்காலைப் பொழுதை வரவேற்றேன்.

அலுவலகத்தில் என்னைச் சுற்றி வட்டமிடும் கழுகுகளுக்கு ஏமாற்றம் தரப் போகும் காலைப் பொழுது. யந்திரமாய் செயல்பட்டேன்.

அவன் வந்தான்.

கூடவே அவனது உற்றார் உறவினர்கள்.

என்னைப் பார்த்தான்.

என்னைப் பற்றிய, எங்கள் குடும்பம் பற்றிய விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.

பரிமாறப்பட்டவைகளை ரசித்துச் சாப்பிட்டார்கள்.

இவைகள் அனைத்துமே என்னை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. இவனுக்கு முன் வந்து போனவர்கள் பின்பற்றியது தான் இவ்வளவும்.

திடீரென இருக்கையை விட்டு அவன் எழுந்தான்.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், திவ்யாவிடம் நான் கொஞ்சம் தனியாகப் பேச முடியுமா?”

யார் கேட்கிறார்கள் இப்படி?

அதிசயித்தேன்.

‘குபுக்’கென ஓர் குதூகலம் என் மனதில்.

வித்தியாசமான மாறுபட்ட ஓர் சூழ்நிலை உருவாகப் போகிறதா?

பரவசம் படர்ந்தது என்னுள்.

வியப்பு மேலிடத் தலைநிமிர்ந்து நோக்கிய போது அவன்தான், அவன்தான் கேட்டிருக்கிறான்.

அண்ணனும் அம்மாவும் முடியும் என வழிவகுத்துக் கொடுக்க,

இப்போது நானும் அவனும் தனிமையில், தனி அறையில்.

“என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”

தலையாட்டினேன்.

என் கண்கள் ‘பிடிச்சிருக்கு’ என்பதை ஒளிபரப்பின.

“உங்களையும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”

சுற்றி வளைக்காமல் ‘மறுநாளை’ எதிர் நோக்காமல் பட்டென நேருக்கு நேர் மனதில் பட்டதைச் சொல்லி விட்டான்.

“அதே சமயம் என்னைப் பற்றி நீங்களும் முழுமையாகத் தெரிஞ்சுக்க வேண்டாமா? எங்க குடும்பம் பற்றி, என் படிப்பு, உத்தியோகம், சொத்து, சுகம் பற்றியெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கிட்டிருப்பீங்க.

யாருமே சொல்லாத ஒரு உண்மையை, இப்போ நான் உங்களுக்குச் சொல்லிடறேன். அதையும் தெரிஞ்சுக்கிட்டுப் பிறகு, உங்க முடிவைச் சொன்னா நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்” எனக் கூறியவன், நிறுத்திவிட்டு என்னைக் கனிவுடன் பார்த்தான்.

கனிவை விட, ஏக்கம் தலைதூக்கிப் பார்த்து சில வினாடிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன், தொடர்ந்தான்.

“நான் ஒரு செவிடு. காலேஜ் படிச்சிக்கிட்டு இருந்தப்போ, தாக்கிய கடுமையான டைபாய்டு ஜூரத்துல என் காதுகள் செவிடாயிடுச்சு. நான் எவர்கிட்டையும் எதையும் எதிர்பார்க்கலே. நகையோ, பணமோ எதுவும் எனக்குத் தேவையில்லை.

என்னை முழுமையாகப் புரிஞ்சுக்கிற, என் சுக துக்கங்களை என்னோடு பங்கு போட்டுக்கிற, பாசமும் நேசமும் உள்ள, உண்மையான அன்பு செலுத்துற இதயமுள்ள ஒரு நல்ல பெண் தேவை. அவ்வளவு தான்.

அப்படியிருந்தும் பெண் பார்க்கப் போகிற இடத்திலெல்லாம், நான் செவிடுன்னு தெரிஞ்சதும் பெண் வீட்டுக்காரங்க யாருமே என்னை ஏத்துக்க முன் வரலே. இப்பகூட, என் உறவுக்காரங்க இந்த உண்மையை உங்க குடும்பத்தார் கிட்ட மறைச்சுட்டாங்க.

என் மனசு கேட்கலே. மேலும் எனக்கு எதையும் மறைச்சுப் பழக்கமில்லை. அதனால்தான் நானே உங்களைத் தனியாகக் கூப்பிட்டுச் சொல்லி விட்டேன். என்னை ஏத்துக்கிறதும், ஏத்துக்காததும் உங்க இஷ்டம்.”

என் கண்கள் பனித்தன.

இதயத்தை மட்டுமே விரும்பும் ஓர் ஜீவன். ஆத்மார்த்தமான அன்புக்கு மட்டுமே ஏங்கும் ஓர் ஆன்மா.

உள்ளத்தை அழகாகவும் அருமையாகவும் வைத்து, உடலில் குறை வைத்துப் படைத்திருக்கும் இறைவனைத் தூற்றியிருக்கிறேன் இதுகாறும். இப்போது தான் புரிகிறது இறைவனின் கணக்கு.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கோர கார் விபத்தில், என் கண் எதிரிலேயே துடிதுடித்து உயிரை விட்ட அப்பாவின் மரண அதிர்ச்சியால் பேசும் சக்தியை இழந்து ஊமையாகி, இருண்டு போயிருந்த என் வாழ்க்கையில் ஒளி வீசப் போகிறதா?

வசந்தம் வரப் போகிறதா? இருண்ட வானத்தின் மூலையில் ஒளிரும் ஓர் நட்சத்திரமாய் அவன் எனக்குத் தோன்றினான்; புரிந்து கொண்டேன்.

அவனைப் பார்த்து விட்டு நாணம் கலந்த புன்னகையுடன் தலை கவிழ்ந்தேன்.

புரிந்து கொண்டான் என்னை.

ஊமையான எனக்கும் வாழ்வு. செவிடான அவனுக்கும் வாழ்வு.

இறைவனின் கணக்கு ஒருபோதும் பொய்ப்பதில்லை.

மயான அமைதியாய் இருந்த என் மனசுக்குள் நாய‌னச் சத்தம் ஒலித்தது.

This image has an empty alt attribute; its file name is RajaGopal.webp

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.