கவலைகள் காணாமல் போகும்
கண்ணே உன் கண்ணசைவில்
கண்ணயரும் வேளையிலும்
கண்ணே உன் கால் கொலுசு ஓசை
தொடர நினைக்கும் கவலையையும்
எட்டி உதைக்கும்
என்ன நான் சொல்லிவிட்டேன்
இப்படி நீ சிரிக்கின்றாய்
என்ன நான் செய்து விட்டேன்
கட்டிக்கொள்ளத் துடிக்கின்றாய்
பட்டுப் பாதம் நொந்ததா
பால் வயிறும் பசித்ததா
பஞ்சணை விட்டு நெஞ்சணை
வந்ததென்னவோ கண்ணே
ஆசை இல்லா மனிதன்
இல்லை யார் சொன்னது
நீ உண்ணாத பொருளின் மீது ஆசை
இருந்தாலும் அதை வாங்குவதில்லை கண்ணே
நீ உண்ணும் பொருளின் மீது ஆசை
இருந்தாலும் அதை உண்ணுவதில்லை
உன் மழலை மொழியில்
என் மொழியும் மறந்து போகும்
உன் பிஞ்சு பாதம் பட்ட இடம்
எனக்கு வலிகள் தந்தாலும் சொர்க்கமாகும்
பிஞ்சுக் கைகள் அளாவும் உணவே அமிழ்தமாகும்
நெஞ்சுக் குழியில் நிறைந்து அமுத சுரபியாகும்