மாங்கா(க்கா) சிறுவன் – சிறுகதை

“டேய் ஒழுங்கா யார்கிட்டேயும் வம்பு பண்ணாம விளையாடிட்டு வரணும்டா”, அம்மாவின் எச்சரிக்கை ஒலிக்க, அந்த குடிசையை விட்டு வெளியே வந்தான் அவன்.

“சரி மா”, வேக வேகமாக பதில் சொல்லிவிட்டு வெளியே செல்ல துடித்த அவன் கால்களை அந்த குட்டி குரல் தடுத்தது.

“அண்ணே! அண்ணே! நானும் வரேன், கூட்டிகிட்டுப் போண்ணே”, கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் அவள்.

அண்ணனும் தங்கையும் கிளம்பிவிட்டார்கள்.

என்ன தான் அம்மா அப்பா பெரியவர்களாக தெரிந்தாலும் அவளுக்கு அவள் அண்ணன் தான் பெரியவன்.

அவளை பொறுத்த வரை விளையாட்டில் யார் சொல்லுவதை மற்ற சிறுவர்கள் கேட்கிறார்களோ அவர் தான் பெரியவர்.

அந்த விளையாட்டு உலகின் தலைவனும் அவனின் தங்கையும், அவர்கள் உலகத்தைக் காண ஊர்வலம் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது தான் அந்த தெரு முக்கம் வந்தது. அதனைத் தாண்டி செல்லும் போது அங்கே இருந்த ஒரு வீட்டை நோக்கி அந்த நான்கு கண்களும் திரும்பின.

வாத்தியார் கண்டிப்பில் வளரும் வாய்ப்பில்லாதவர்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவர்கள் கடக்கும் மனிதர்களில் சிலர் அவர்களுக்கு வாத்தியாராய் மாறி அவர்களுடைய கற்பிக்கும் திறனை மிரட்டலாக காண்பித்து வந்தனர்.

அந்த வீட்டை கடக்கும் போதெல்லாம் அதை பார்த்து ஏங்கி தவிக்கும் அந்த பிஞ்சு மனங்களின் குரல் வார்த்தைகளாக வாய் வழியே வாராது போனாலும், அந்த கண்கள் அதைக் காட்டி கொடுத்து விடுகின்றன.

உலகில் ஏழ்மை இருந்திருக்கக் கூடாது, அஃது ஒன்று இருப்பின் ஆசைகளை அடக்குவோருக்கு அது அமைந்திருக்கலாம்.

ஆனால் அந்த வீட்டிற்குள் இருப்பது அவனை விடுவதாய் தெரியவில்லை. அது அவனை வா வா என்று அழைத்து கொண்டிருந்தது.

அதை பார்த்த மறுகணமே அவன் மனம் சில நாட்களுக்கு முன் நடந்ததை புரட்டி பார்த்தது. என்ன நடந்தது அன்று?

 

எத்தனையோ முறை அதை கடந்து போன போதும் வாராது போன அந்த தைரியம் அன்று அவனுக்கு வந்தது.

சில நாட்களாகவே அந்த வீட்டை கடக்கும் போது யாரும் பார்க்கவில்லை என்பதை அறிந்து கொண்டு வந்தவன், அன்று அமாவாசை என்று தெரியாமல் தன்னையும் தன் தங்கையையும் அழைத்த அதனை நோக்கி வேகமாக சென்றான்.

“இன்னைக்கு எப்டியாவது அத பண்ணிடனும்” தங்கையிடம் சொல்லியவாறே கீழே தேடினான்.

அந்த வீட்டின் வெளிச்சுவருக்கும், தங்களுக்கு கிடைக்காதா என்று ஏங்க வைத்த ‘அதற்கும்’ சில அடிகள் தான் தூரம்.

“கெடச்சுடுச்சு”, கூறியவாறே ஒரு பெரிய கல்லை, அந்த வெளி சுவற்றை ஒட்டியவாறு போட்டான்.

அதன் மீது ஏறி நின்று, அவர்களை அங்கே அழைத்ததை அடைய கையை நீட்டினான்.

நன்கு பெரிதாக, ஒருபக்கம் சற்று சிவந்தும் மறுபக்கம் மஞ்சளும் பச்சையுமாக பார்ப்பவரை பறிக்க தூண்டும் அளவிற்கு செழிப்புடன் இருந்தது அந்த மாங்காய்.

 

எட்டி எட்டி ஒருவழியாக அதனை தொட்டு விட்டான். தொட்டுக் கொண்டிருந்த கையை எடுக்காமலே, திரும்பி தன் தங்கையை பார்த்து “மாங்கா” என்று வாயசைத்து சிரித்தான்.

அந்த சிரிப்பில் தான் எத்தனை ஆர்வம், எத்தனை ஆசை. கையைத் தட்டிக் கொண்டே சிரித்து கொண்டிருந்த தங்கையை அவன் பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது, “டேய் யாரடா அங்க” என்ற குரல் திடுக்கிட வைத்தது.

“ஓட்றா, ஓடு, மாங்கா திருட வந்துடுச்சிங்க, அப்பவே அவன்ட்ட சொன்னேன். பக்கத்துல சேரி இருக்குடா, இந்த இடம் வேணாம்னு, கேட்டானா அவன். இதுங்கள வெரட்டறதே வேலையா போச்சு”, கையில் இலையோடும், இலையில் வடையோடும் காகத்திற்காக வெளியே வந்த பாட்டி அவர்களை விரட்டிக் கொண்டிருந்தாள்.

“இத்தனை நாள் வெளியில வராத பாட்டி இன்னைக்கு எதுக்கு வெளியில வந்தாங்க” யோசித்து கொண்டே, அன்று தங்கையும் அவனும் ஓடிய ஓட்டம் இன்றும் அந்த மாமரத்தை பார்க்கும் போது அவனுக்கு ஞாபகம் வந்தது.

அதே மரம். அதே வீடு. அவன் அருகில் தங்கை.

இன்றும் அந்த பாட்டி எங்கிருந்தோ வரும் காக்கைகாக, கையில் இலையும், வடையும், சோறுமாக, வானை நோக்கி ‘ கா கா ‘ என்று கரைந்து கொண்டு இருந்தாள்.

“யார்கிட்டேயும் வம்பு பண்ண கூடாது” அம்மாவின் எச்சரிக்கை மீண்டும் மனதில் ஒலிக்க அந்த வீட்டை தாண்டி சென்று கொண்டிருந்தன அந்த கால்கள்.

ஞாழல், புதுக்கோட்டை

 

ஏழ்மையும் அது தரும் ஏக்கமும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் என சமூகத்தின் அவநிலையை மாங்கா(க்கா) சிறுவன் சிறுகதை படம் பிடித்துக் காட்டுகிறது.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.