மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை

“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.

மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.

மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.

இது கிழ மாடு என்று தெரிந்தேதான் வாங்கினார். நிறைய மாடுகள் பார்த்து விலை படியாததால், கடைசியாக இந்த மாட்டை தரகர் ஒருவர் மூலம் பார்க்கப் போனார்.

இந்த மாட்டின் உரிமையாளர் ‘இந்த மாடுக்கு வயதாகிவிட்டது; இதுதான் இதனின் கடைசி கன்றுக்குட்டி; இதற்குமேல் கன்று ஈனாது; பால் கறவையும் குறைந்துவிடும்’ என்றெல்லாம் கணக்குப் போட்டு எப்படியாவது இதை விற்றுவிடப் பார்க்கிறான்.

மேலும் மாட்டை சேறும் சகதியும் உள்ள இடத்தில் படுக்க கூட முடியாத நிலையில் கட்டி வைத்துள்ளான். சரியாக குளிப்பாட்டக்கூட இல்லை.

இதையெல்லாம் பார்த்த மாணிக்கத்திற்கு மனது ரொம்ப கஷ்டப்பட்டது. அந்த மாட்டின் உரிமையாளரை ‘ஒரு இழி பிறவி’ என்று மனதுக்குள் சபித்தார்.

அந்த மாடும் கிட்டத்தட்ட மாணிக்கத்தின் மனநிலையிலேயே இருந்தது.

‘இத்தனை காலம் எத்தனையோ கன்றை ஈன்று, ரத்தத்தை உருக்கி, பாலாக்கி உனக்கு வருமானம் ஈட்டித் தந்த எனக்கு கொஞ்சம் வயதானவுடன் யார் தலையிலாவது கட்டிவைக்க பார்க்கிறாய்’ என்று மாடும் விரக்தியும் வெறுப்புமாய் நின்று கொண்டிருந்தது.

மாணிக்கம் அந்த மாட்டருகே போய் அதன் தலையைப் பொறுமையாக தடவிக் கொடுத்தார்.

மாணிக்கத்தின் அருகாமை, ஸ்பரிசம் அந்த மாட்டுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அந்த மாடு மாணிக்கத்தை ஒரு பார்வை பார்த்தது. ‘என்னை எப்படியாவது இந்த நன்றி கெட்ட மனிதனிடமிருந்து அழைத்துச் சென்று விடு’ என்பது போல் அந்த பார்வை இருந்தது.

மாணிக்கமும் அந்த மாட்டை ‘நரகத்திலிருந்து மீட்டு சென்று நாம் பாதுகாக்கலாம்’ என்ற முடிவுக்கு வந்தவராய் கடகடவென்று தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து, அவன் சொன்ன விலைக்கு எந்த பேரமும் பேசாமல், அவன் முகத்தைக் கூடப் பார்க்க பிடிக்காமல் மாட்டையும் கன்றையும் ஓட்டி வந்து விட்டார்.

அந்த மாட்டுக்கு பெரும் சந்தோஷம். மாணிக்கத்தை தேவன் அனுப்பிய தூதுவனாகவே நினைத்தது.

மாட்டுக்கு மாணிக்கம் குடும்பத்தை ரொம்ப பிடித்து விட்டது. அவர்கள் தன்னை பராமரிக்கும் விதம் எல்லாம் ஏதோ சொர்க்க லோகத்திற்கு வந்தது போல் இருந்தது.

மாணிக்கம் குடும்பத்தினரும் அந்த மாட்டை போற்றிப் பராமரித்தார்கள்.

மாணிக்கம் வீட்டில் வளரும் எல்லா மாட்டுக்கும் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார்கள். ரேஷன் கார்டில் மட்டும் தான் சேர்க்கவில்லை.

அது போல் இந்த மாட்டுக்கும் மாணிக்கத்தின் அம்மாவின் பெயரான ‘ரஞ்சிதம்’ என்று பெயர் சூட்டினார்கள். அந்த பெயருக்கு அந்த மாடு ஓரிரு நாளில் பழகிவிட்டது.

ரஞ்சிதம் உற்சாகத்தில் ஒரு கிழ மாடு என்ற அறிகுறியே இல்லாமல் துள்ளிக் குதித்தது. கறவையும் அதிகமானது. அதுவும் மாணிக்கம் கறந்தால் இரு படி அதிகமானது.

கிழ மாடு என்று கேலி பேசிய ஊரும் மக்களும் வாயடைத்துப் போனார்கள்.

மாணிக்கத்துக்கும் ஏக சந்தோஷம். மற்ற மாடுகளைக் காட்டிலும் ரஞ்சிதம் மீது ரொம்பவும் வாஞ்சையுடன் இருந்தார். ரஞ்சிதமும் மாணிக்கத்தை உயிருக்கு உயிராக நேசித்தது.

மாணிக்கம் எங்காவது வெளியில் வேலைக்குப் போய்விட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் வரை ரஞ்சிதம் முழித்துக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருக்கும்.

மாணிக்கம் வந்து லைட் சுவிட்சை போட்டதும், ஒரு குரல் கொடுக்கும். மாணிக்கமும் போய் அதை தடவிக் கொடுத்து விட்டு அதோடு பேசி விட்டுதான் வருவார். அப்போதுதான் இருவருக்கும் ஒரு ஆசுவாசம் கிட்டும்.

அந்த அளவுக்கு இவர்களின் நெருக்கம், கெமிஸ்ட்ரி ஊரே வியக்கும்படி இருந்தது. மாடும்-மாணிக்கமும் என்று எல்லோரும் கதை சொல்லி மகிழ்ந்தார்கள்.

ஆனால் காலம் எதையும் நேர்கோட்டில் விட்டு வைப்பதில்லை.

மாணிக்கதிற்கு ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைக் கொண்டுப் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஒரு வாரம், ரெண்டு வாரம் என்று மாதக்கணக்கில் வைத்தியம் தொடர்ந்தது.

மாணிக்கத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்த நாளில் இருந்து அவரைப் பார்க்காமல் ரஞ்சிதம் வாடி நின்றது.

மாணிக்கத்தின் உடைகள் ஆஸ்பத்திரியிலிருந்து துவைப்பதற்காக வீட்டுக்கு வரும் போது, அதை ரஞ்சிதம் முகர்ந்து மாணிக்கத்தின் நிலையை உணர்ந்து கொள்கிறது. உற்சாகம் இழந்து எப்போதும் கண்ணில் ஒரு ஈரக்கசிவுடன் ரஞ்சிதம் நின்றுகொண்டிருக்கிறது.

நாட்கள் நகர்ந்தன. எந்த வைத்தியமும் பலனளிக்காமல் மாணிக்கம் இறந்து விட்டார்.

மாணிக்கத்தின் சடலம் வீட்டுக்குள் வருகிறது. மாணிக்கம் உயிரோடு இருந்து எப்போது வீட்டுக்கு வந்தாலும் குரல் எழுப்பும் ரஞ்சிதம் அன்று அமைதியாக நிற்கிறது.

மாணிக்கம் இனி இல்லை என்று ரஞ்சிதத்திற்கு புரிந்துவிட்டது.

மாணிக்கத்தின் மனைவியைக் கட்டிப் பிடித்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். “மாணிக்கம் இல்லாமல் இனி எப்படி உன் வாழ்வு கழியும்” என்று பொருமிக் கரைகிறார்கள்.

அவர்கள் வாசலிலே கட்டியிருக்கும் ரஞ்சிதம் கழுத்தையும் கட்டிக்கொண்டும், “இனி உன்னை யாரு பார்த்துப்பா? நீ எப்படி மாணிக்கம் இல்லாம இருப்ப?” என்று ஒப்பாரி பாடி அழுகிறார்கள்.

ஊரே ஒரே சோகத்தில் தவிக்கிறது.

ஏனென்றால் மாணிக்கம் மாடுகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமான பரோபகாரியாக அங்கு வாழ்ந்து இருக்கின்றார். அவர் திடீர் மரணம் ஊரையே வாட்டி வதைக்கிறது.

மாணிக்கத்தின் சடலத்தை எடுத்து விட்டு வீட்டை கழுவி விடுகிறார்கள்.

காலையில் மாணிக்கம் உடல் வந்தபோது படுத்த ரஞ்சிதம் இதுவரை எழுந்திருக்கவே இல்லை; எதுவும் சாப்பிடவில்லை.

கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காண்பிக்கிறார்கள். அவர் பார்த்துவிட்டு “மாடு நன்றாகத்தான் இருக்கிறது. நாளை காலை சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

எல்லோரும் உறங்குகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு மாணிக்கத்தின் மனைவிக்கு ரஞ்சிதம் கத்தும் குரல் கேட்டது போல் இருந்தது.

எழுந்து வந்து பார்க்கிறாள் – ரஞ்சிதம் தலை சாய்ந்து செத்துக் கிடக்கிறது. மாடும் மாணிக்கமும் மரணத்திலும் இணைந்து விட்டார்கள்.

அவள் ஒரு பெருங்குரலெடுத்து அழுகிறாள். அதிகாலையில் ஊரே விழித்துக் கொள்கிறது. நிற்காத அவள் அழுகை எல்லாருடைய அடிவயிற்றையும் பிசைகிறது.

மொத்த கிராமமும் மாணிக்கத்தின் வீட்டின் முன் திரண்டு வந்து நிற்கிறது .

“உரிமையாளர் இறந்ததால் மாடும் இறந்துவிட்டது” என்று தொலைக்காட்சி செய்தியானது.

அம்மா பிள்ளையைக் கொல்கிறாள். பிள்ளைகள் தாயை வெட்டிக் கொல்கிறார்கள். நவ நாகரிக மனிதர்களால் உலகம் சின்னா பின்னமாகிக் கிடக்கிறது.

ஆனால், இங்கே மேற்படி மனிதர்களால் மிருகம் என்று அழைக்கப்படும் ஒரு ஜீவன், ஒரு மனிதனுக்காக, விசுவாசத்தின் பொருட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறது.

இதை மிருகமென்றோ, மாடென்றொ எப்படி இனம் பிரிப்பது?

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

4 Replies to “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”

 1. அருமை ஐயா!

  உங்கள் அனைத்து சிறுகதைகளும் மிகவும் எளிமையாகவும் படிப்பதற்கு இனிமையாகவும் மன நிகழ்ச்சியாகவும் உள்ளது ஐயா.

  மாடு என்று எதனைச் சொல்வீர் என்ற சிறுகதை மிகவும் அருமையாக உள்ளது ஐயா.

  என்னை நீங்கள் புதிய வாசகனாக மாற்றி விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா.

 2. இங்கே மேற்படி மனிதர்களால் மிருகம் என்று அழைக்கப்படும் ஒரு ஜீவன், ஒரு மனிதனுக்காக, விசுவாசத்தின் பொருட்டு தன்னை மாய்த்துக் கொள்ளும் என்ற வரிகள் ரணகளமாக்கியது…

  மாணிக்கம் பெயருக்கேற்ப மாணிக்கம் தான்…

  கதையும் சமூகமும் பண்பாடும் என்ற முப்பரிமான பாங்கில் வீரியம் தாங்கி நிற்கும் கதையும் வாழ்வியலும் கலந்த சோகம் அலாதியான உணர்வுடையது!

 3. மாடென்று எதனை சொல்வீர்கள் என்ற கேள்வி என்னை பளார் என்று அறைகிறது… தலைப்பே பிரமாதம்!

  யார் கூறினார்கள் மிருகங்களுக்கு ஐந்தறிவு என்று?

  பகுத்தறிவு எனப்படும் ஆறாம் அறிவு கொண்ட ரஞ்சிதம், மாணிக்கம் தனக்கு செய்த நன்றிக்கும் காட்டிய அன்பிற்கும் கைமாறாக, தன் உயிர்தான் உண்டு என்பதை உணர்ந்து அதையே காணிக்கையாக தந்துள்ளது.

  தன் அம்மாவின் பெயரை வைத்ததற்காக ஒரு அம்மா காட்டும் அன்பினை, ஏன் மனைவி கூட செய்ய துணியாததை, சில கால பழக்கத்திற்காக ரஞ்சிதம் செய்ததை பார்த்து திகைப்பூட்டுகிறது; கண் கலங்குகிறது.

  அன்பு உலகை விட பெரியது.

  இனி வார்த்தை இல்லாமல் வணக்கங்கள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.