அரிக்கும் அமிலத்தில் ஆளேதீய்ந் தாலும்
வரிவாங்கித் தின்பாரடி – கிளியே
வசூலொன்றே கொள்கையடி!
வாக்காளர் சேர்ப்பதற்கு வாழ்நாள் செலவிடுவார்
வாய்க்கால் மறந்தாரடி – கிளியே
வடிவெள்ளம் சூழ்ந்ததடி!
நோகாமல் நுங்கெடுக்கும் நுண்கலையில் தேறியவர்
வாகாக வாழ்ந்தாரடி – கிளியே
வலிநந் தலையிலடி!
ஆண்டாண்டு காலமாக அள்ளி முடிப்பமென்று
நீண்ட பிதற்றுரைதான்- கிளியே
நீங்கவில்லை துன்பமடி!
பாலில் புனலூற்றிப் பாம்புக்குப் பாலூற்றித்
தாலில் பிழைத்தாரடி- கிளியே
தகரமிங்கே தங்கமடி!
கட்டை விரலளவும் கண்ணகர் ஓங்கவில்லை
கொட்டம் அடித்தாரடி – கிளியே
கொலைகளவு செய்தாரடி!
இன்னார் பிழைகளினால் இந்த நிலைமையென்றே
சொன்னார் எவர்வரினும் – கிளியே
சொல்வதெல்லாம் உண்மையடி!
சாலைக் குடிநீரும் சாய்க்கடை மின்னினைப்பும்
மேலைக் கனவென்றே – கிளியே
மேன்மக்கள் எண்ணுதடி!
ஐப்பசி கார்த்திகையில் ஆள்வதற்குத் தேர்தலென
மெய்ப்பசி வேண்டிநின்றால் – கிளியே
மேடுபள்ளம் ஓடுமடி!
அண்டிப் பிழைப்பவர்க்(கு) ஆளரசைத் தந்தழியும்
மண்டூக மக்களடி- கிளியே
மாலைக்கண் வீரரடி!
பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574