முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?

ஆம்லெட் முட்டையைக் கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகளுள் ஒன்று. இந்த உணவானது முட்டை அடை என்றும் அழைக்கப்படுகிறது.

எல்லா விதமான உணவுகளுடனும் சேர்த்து இதனை உட்கொள்ளலாம். பொதுவாக முட்டை ஆம்லெட் என்பது கோழி முட்டையிலிருந்து செய்யப்படுகிறது.

இதனை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் கால அளவு மிகக்குறைவு. எனவே இதனை அவசர காலங்களிலும் செய்து உண்ணலாம். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

எங்கள் ஊரில் ஆம்லெட் தயார் செய்யும் முறையினை முட்டை அடை ஊற்றல் என்று கூறுவர்.

இனி சுவையான முட்டை ஆம்லெட் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

கோழி முட்டை – ஒன்று

சின்ன வெங்காயம் – பத்து எண்ணம் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – பாதி சுண்டு விரல் அளவு

கல் உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

மிளகு – 3 எண்ணம்

 

செய்முறை

முதலில் முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

 

உடைத்த முட்டை
உடைத்த முட்டை

 

மிளகினை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

தேவையான அளவு கல் உப்பினை சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

பின் அதனை உடைத்த முட்டையில் ஊற்றி நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தோசை கல்லில் 3 ஸ்பூன் நல்ல எண்ணெயை ஊற்றவும்.

அதில் சதுரங்களாக வெட்டிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயத்தை வதக்கும்போது
வெங்காயத்தை வதக்கும்போது

 

சின்ன வெங்காயம் நிறம் மாற ஆரம்பித்தவுடன் அதனை முட்டைக் கரைசலில் சேர்க்கவும்.

 

வெங்காயம் சேர்த்த முட்டைக் கரைசல்
வெங்காயம் சேர்த்த முட்டைக் கரைசல்

 

இதனுடன் பொடித்து வைத்துள்ள மிளகினைச் சேர்க்கவும்.

பின் முட்டைக் கலவையை நன்கு கலக்கவும்.

பின் தோசைக் கல்லில் முட்டைக் கலவையை உள்ளிருந்து வெளிப்புறமாக வட்ட வடிவில் ஊற்றவும்.

தோசைச் சுற்றிலும் இரண்டு ஸ்பூன் நல்ல எண்ணையை ஊற்றவும்.

 

தோசைக்கல்லில் ஊற்றியதும்
தோசைக்கல்லில் ஊற்றியதும்

 

ஒரு பறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்.

ஓரிரு நிமிடங்களில் அடுப்பினை அணைத்து விட்டு முட்டையை எடுத்து விடவும்.

சுவையான முட்டை ஆம்லெட் தயார்.

 

எடுக்கத் தயார் நிலையில்
எடுக்கத் தயார் நிலையில்

 

நல்ல எண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் பயன்படுத்துவதால் ஆம்லெட் சுவையாக இருக்கும்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் முட்டை கலவையில் தேவையான அளவு மஞ்சள் பொடி சேர்த்து ஆம்லெட்டைத் தயார் செய்யலாம்.

முட்டை ஆம்லெட்டை தயார் செய்ய நாட்டுக் கோழி முட்டையை பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.