முட்டை கொத்து பரோட்டா செய்வது எப்படி?

முட்டை கொத்து பரோட்டா

முட்டை கொத்து பரோட்டா அசைவப் பிரியர்களின் விருப்ப உணவாகும். பரோட்டா கடைகளில் முட்டை கொத்து பரோட்டா தயார் செய்வதை பரோட்டாவை கொத்தும் சத்தத்தை வைத்து தூரத்திலிருந்தே அடையாளம் காணலாம்.

வீட்டிலும் இதனை தயார் செய்து குழந்தைகளைக் குஷிப் படுத்தலாம். வீட்டில் இதனைத் தயார் செய்யும் போது குறைவான விலையில் அதிக அளவில் பெற இயலும்.

இன்றைக்கு பரோட்டாவை விரும்பாதவர்களின் எண்ணிகை மிகவும் குறைவு. அத்தோடு இதனை நாமே தயார் செய்யும் போது புது அனுபவம் கிடைக்கும். இனி சுவையான முட்டை கொத்துப் பரோட்டா தயார் செய்வது எப்படி என்று பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பரோட்டா 4 எண்ணம்

முட்டை 2 எண்ணம்

பெரிய வெங்காயம் 2 எண்ணம் (பெரியது)

தக்காளி 2 எண்ணம் (நடுத்தரமானது)

முந்திரிப் பருப்பு 8 எண்ணம்

மிளகு சீரகப் பொடி 1 ஸ்பூன்

கரம் மசாலாப் பொடி 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை தேவையான அளவு

கறிவேப்பிலை 1 கீற்று

பரோட்டா சால்னா தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 5 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

முட்டை கொத்து பரோட்டா செய்முறை

பரோட்டாவை மிகவும் சிறிதாக பிய்த்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

தாளிதம் செய்யும் போது

அதனுடன் கறிவேப்பிலை மற்றும் முந்திரியைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயத்தைச் சேர்த்து வதக்கும் போது

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வதங்கியதும் அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளியைச் சேர்த்ததும்

தக்காளி நன்கு மசிந்ததும் மிளகு, சீரகப் பொடியைச் சேர்த்து ஒருநிமிடம் வதக்கி அதனுடன் கரம் மசாலாப் பொடியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

கரம் மசாலா சேர்த்ததும்

அதன் பின்னர் இரண்டு முட்டைகளை உடைத்து கலவையில் ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டையை ஊற்றியதும்

முட்டை சுருண்டதும் அதில் 3 குழிக்கரண்டி அளவு பரோட்டா சால்னாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.

சால்னாவைச் சேர்த்ததும்

2 நிமிடங்கள் கழித்து பிய்த்து வைத்துள்ள பரோட்டாக்களை அதில் சேர்த்து நன்கு வதக்கவும்.

பரோட்டாக்களைச் சேர்த்ததும்

சால்னாக் கலவை பரோட்டாத் துண்டுகளுடன் சேர்ந்து நன்கு சுருண்டதும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கி விடவும்.

சுவையான முட்டை கொத்து பரோட்டா தயார்.

சுவையான முட்டை பரோட்டா

தயிர் பச்சடியுடன் சேர்த்து இதனை உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி வட்டமாக வெட்டி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி முட்டை பரோட்டாவைத் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் பரோட்ட சால்னாவுடன் கோழி கிரேவி, மட்டன் கிரேவி சேர்த்து கிளறி முட்டை பரோட்டாவைத் தயார் செய்யலாம்.

பரோட்டாவை மிகவும் பொடிதாகப் பிய்த்துக் கொண்டால்தான் எளிதில் வதங்கி சுவை மிகும்.

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாய் இரண்டை பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி முட்டை பரோட்டாவைத் தயார் செய்யலாம்.

பரோட்டாக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முட்டை, வெங்காயம் உள்ளிட்ட மற்ற பொருட்களின் அளவுகளைக் கூட்டிக் கொள்ளலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.