‘ஓலா’ செயலி மூலம் ஆவடியிலிருந்து தாம்பரம் செல்ல, ஆட்டோ சவாரிக்கு ஏற்பாடு செய்தான் செல்வா. அவனது மனைவி மல்லிகாவோடு ஆட்டோவில் ஏறினான்.
“ஓ.டி.பி சொல்லுங்க!” எனக் கேட்டான் ஆட்டோ ஓட்டுனர்.
“ஓ.டி.பி 6386” பதில் சொன்னான் செல்வா.
தாம்பரம் வந்து சேர்ந்தார்கள்.
“950 ரூபாய் கொடுங்க!” என கேட்டான் ஆட்டோ ஓட்டுனர்.
“830 ரூபாய் தானே சார்ஜ். எதுக்கு 120 ரூபாய் அதிகமா கேட்கிற? ஏமாத்துறியா?” கடுப்பானான் செல்வா.
“இதான் ரேட்டு, கேட்ட காசை சீக்கிரம் கொடுங்க!” கறாராகக் கேட்டான் ஆட்டோ ஓட்டுனர்.
“ஏங்க கேக்கிற காச குடுத்திட்டு வாங்க, நம்மள ஏமாத்துறவன வேற எவனாவது ஏமாத்துவான்” செல்வா வெறுப்போடு காசைக் கொடுத்தான்.
மதிய வேளையில், ஆட்டோவை வெளியே நிறுத்தி விட்டு, உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபொழுது, அவன் ஆட்டோவை காணவில்லை.
பதறினான் ஆட்டோ ஓட்டுனர்.
“தம்பி, நோ பார்க்கிங்குல ஆட்டோ நின்னதால டிராபிக் போலீஸ் தூக்கிட்டுப் போனாங்க. ஃபைன கட்டி ஆட்டோவ எடுத்திட்டு போ.” என்றார் அருகிலிருந்த பெரியவர்.
காலையில் 120 ரூபா அதிகம் வாங்கிய சவாரி நினைவுக்கு வர தன் தவறை உணர்ந்தான் ஆட்டோக்காரன்.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!