முலாம்பழம் / கிர்ணிப் பழம்

முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முக்கியமானது. இதனை கிர்ணிப் பழம் என்றும் அழைப்பர்.

நம் நாட்டில் கோடை காலத்தில் கிர்ணி பழச்சாறு அருந்துவது என்பது பழங்காலமாக நடைபெற்று வரும் செயலாகும். இப்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். ஆனால் தற்போது இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சீனா இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

வெள்ளரி, தர்பூசணி ஆகியோர் முலாம்பழத்தின் உறவினர்கள் ஆவர். இதன் தனிப்பட்ட சுவை, மணம் மற்றும் சாறு நிறைந்த சதைப்பகுதி ஆகியவை இதனை உண்ணும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

இப்பழம் தரையில் படர்ந்து வளரும் கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. ஊட்டசத்து மிகுந்த மணல் பரப்பில் இது செழித்து வளரும். தேனீக்கள் இத்தாவரத்தில் மகரந்த சேர்க்கை நடைபெற முக்கிய காரணிகளாகின்றன. இப்பழமானது ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலும் அதிகளவு கிடைக்கிறது.

கொடியில் முலாம்பழம் / கிர்ணிப் பழம்
கொடியில் முலாம்பழம் / கிர்ணிப் பழம்

 

முலாம்பழம் பொதுவாக வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் 4 முதல் 6 அங்குல விட்டத்துடன் காணப்படுகிறது. இப்பழமானது 500 கிராம் முதல் 800 கிராம் எடையளவில் காணப்படுகின்றது. சில நேரங்களில் இப்பழமானது 1000 கிராம் எடை அளவினையும் தாண்டி வளருவதுண்டு.

இப்பழத்தின் சதைப்பகுதி மெதுவாகவும், சாறு நிறைந்தும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இப்பழத்தின் மையப்பகுதி குழிந்தும் வெள்ளை நிற விதைகளைக் கொண்டுள்ளது.

 

முலாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

இப்பழத்தில் விட்டமின்கள் ஏ,சி,இ,கே,பி1(தயாமின்), பி2( ரிபோஃப்னோவின்), பி3 (நியாசின்), பி5 (பேண்டோதெனிக் அமிலம்), பி6( பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள், பொட்டாசியம், கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்களும், போலிக் அமிலம், பைட்டோ நியூட்ரியன்களும், நார்சத்தும் காணப்படுகின்றன.

 

முலாம்பழத்தின் மருத்துவப் பண்புகள்

நீர்கடுப்பினைத் தடுக்க

இப்பழமானது அதிக அளவு நீர்ச்சத்தினைக் கொண்டுள்ளது. இப்பழத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உடலில் ஏற்படும் நீர்கடுப்பினை சரிசெய்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நாள்பட்ட நீர்க்கடுப்பினையும் சரிசெய்யலாம்.

 

புற்றுநோயைத் தடுக்க

உடல் வளர்ச்சிதை மாற்றத்தின்போது ஏற்படும் ப்ரீரேடிக்கல்கள் உடல் உறுப்புகளில் புற்று நோயை ஏற்படுத்துகின்றன.

முலாம்பழத்தில் உள்ள பீட்டா கரோடீன்கள் ப்ரீரேடிக்கல்களை உடலை விட்டு அகற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு உடலை புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. இப்பழத்தில் காணப்படும் பைட்டோ நியூட்ரியன்கள் மூளையை புற்றுநோய் தாக்குதலிருந்து பாதுகாக்கின்றன.

 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

விட்டமின் சி-யானது இரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த வெள்ளை அணுக்களே உடலினை பாக்டீயா, வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. எனவே விட்டமின் சி அதிகமுள்ள முலாம் பழத்தினை உண்டு நாம் அதிக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.

 

ஆரோக்கியமான சருமத்தைப் பெற

இப்பழத்தில் அதிகஅளவு பீட்டா கரோடீன்கள் உள்ளன. இவை விட்டமின் ஏ உருவாக்கத்திற்கு காரணமானவை. விட்டமின் ஏ-யானது சருமத்தில் ஊடுருவி சரும செல்களை சிதைவுறாமல் பாதுகாக்கிறது.

மேலும் சிதைவுற்ற செல்களை மீண்டும் வளரச் செய்கிறது. இதனால் சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவது தடுக்கப்படுகிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் சரும எரிச்சலுக்கு இப்பழத்தினை அரைத்துப் பூச நிவாரணம் பெறலாம்.

 

கண்களைப் பாதுகாக்க

பீட்டா கரோடீன்கள் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதால் கண்புரை பாதிப்பிலிருந்து 50 சதவீதம் விடுபடலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பீட்டாகரோடீன்கள் அதிகமுள்ள முலாம்பழத்தினை உண்பதன் மூலம் கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுப்பதோடு கண் பார்வையும் தெளிவடையச் செய்கிறது.

இப்பழத்தில் உள்ள ஸீஸாக்தைன் என்ற கரோடீனாய்டு சூரிய புறஊதாக்கதிர் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. மேலும் இப்பழம் கண் தசை அழற்சி நோயிலிருந்தும் கண்களைப் பாதுகாக்கின்றது.

 

மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற

இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் பொட்டாசியம் மூளைக்கு இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் நன்கு கிடைக்கச் செய்கிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது. எனவே இப்பழத்தினை உண்டு உடல் மற்றும் உள்ளப் புத்துணர்ச்சி பெறலாம்.

 

புகைக்கும் பழக்கத்தை நிறுத்த

இப்பழத்தில் நுண்ஊட்டச்சத்துக்கள் புகைப்பிடிப்பதால் உடலில் தங்கும் நச்சான நிக்கோட்டினை வெளியேற்றுவதுடன் புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தடை செய்கிறது. எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்து புகைக்கும் பழக்கத்தை நிறுத்தலாம்.

 

உடல் எடையைக் குறைக்க

இப்பழத்தினை சிறிதளவு உண்ணும்போது இதில் உள்ள நார்சத்தானது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும் உணவு செரிமானத்தை தாமதப்படுத்தி நன்கு செரிக்கச் செய்கிறது. இதனால் உணவு இடைவேளையில் நொறுக்குத்தீனி தின்பது குறைக்கப்படுகிறது. இதனால் இப்பழத்தினை உண்டு உடல் எடையைக் குறைக்கலாம்.

 

இப்பழத்தினை வாங்கும் முறை

இப்பழத்தினை கையால் தூக்கும் போது அது கனமானதாக இருக்க வேண்டும். பழத்தின் மேற்பகுதியை தட்டும்போது மந்தமான ஆனால் ஆழமான ஒலியை உணர வேண்டும். பழத்தினை முகரும்போது நல்ல வாசனையை உணர வேண்டும்.

இப்பழத்தினை பயன்படுத்தும்போது ஓடும் தண்ணீரில் பழத்தினை நன்கு அலச வேண்டும். பின் துடைத்து விட்டு துண்டுகளாக்க வேண்டும்.

பழத்துண்டுகளை வெகு நேரம் அறை வெப்பநிலையில் வைக்கக் கூடாது. இப்பழத் துண்டுகளையும், பழச்சாற்றினையும் குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

இப்பழமானது அப்படியேவோ, பழச்சாறாகவோ, ஜாம், சர்பத், இனிப்புக்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
பராம்பரிய மிக்க சத்துக்கள் நிறைந்த கோடைக்காலத்துக்கு மிகவும் ஏற்ற முலாம்பழத்தினை உண்டு உடல் நலம் பேணுவோம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.