அந்த பிரபல சோப் கம்பெனி வாசலின் முன் இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினான் விக்னேஷ்.
என்னைப் பார்த்ததும், “என்ன ரவி என்னாச்சு? லீவா இன்னிக்கு? வழக்கத்துக்கு மாறா இருக்கு? நீ லீவே போடமாட்டியே?”
“அஃப் கோர்ஸ். மனசு சரியில்லைப்பா” என்று, ஒருவித மனஇறுக்கத்துடன் யந்திரத்தனமாய் நான் பதிலளித்தேன்.
“என்னது மனசு சரியில்லையா? அப்படி என்ன நடந்தது? வா, காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” என என்னை வலுக்கட்டாயமாகக் கம்பெனி கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான்.
என்னுடைய மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தைக் கொட்டி அழவேண்டும் போலிருந்தது.
மாசிலாமணியும், அவனது சகாக்களும் காலை கம்பெனி கேட் அருகே நின்று கொண்டு, நான் உள்ளே நுழையும் சமயம் என் காதில் விழுகிற மாதிரி பேசிய பேச்சு முள்ளாய் குத்திக் கொண்டிருந்தது.
மாசிலாமணி அக்கவுண்ட்ஸ் பிரிவில் பணிபுரிபவன்.
“சொல்லு ரவி. வேலைக்காக கம்பெனிக்கு வந்தவன் திடீர்னு லீவ போட்டுட்டுக் கிளம்பிட்டே. என்ன விஷயம்?”
என்னால் உடனடியாகப் பதில் பேசமுடியவில்லை. வார்த்தைகள் வராமல் ஆடிப்போயிருந்தேன்.
விஷயம் இதுதான்.
சோப் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களை சப்ளை செய்வதற்காக டெண்டர்களை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்ததில், நேரிலும் தபால் மூலமாகவும் பெற்றுக் கொண்டிருந்தவைகளை எல்லாம் நேற்று பரிசீலனை செய்து கொண்டிருந்தேன்.
காலை பத்து மணி வரை தான் காலக்கெடு. மாலை நான்கு மணியளவில் தனக்கு வேண்டிய ஒருவரின் டெண்டரைப் பெற்றுக் கொள்ளும்படி அவரையும் அழைத்து வந்து என்னிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் மாசிலாமணி.
கெடு நேரம் முடிந்து விட்டதால் எதுவும் செய்வதற்கில்லை, எனத் திருப்பி அனுப்பிவிட்டேன். அதன் விளைவுதான் இன்றைய கேட் சம்பாஷணை.
“காக்காய் பிடிக்கிறதப் பத்தி நீ என்னப்பா நினைக்கிறே?”
“எம்.டி.கிட்ட நல்ல பேரு வாங்கி, பிரமோஷன்ல போறதுக்குத்தான் பயல் இவ்வளவு கறாரா இருக்கான்.”
“அட போப்பா! கறாரா இருக்க வேண்டியது தான். அதுக்காக ஒரேயடியா, இப்படி காந்தியாகவும், புத்தராகவும் இருக்கக் கூடாது.”
“காலம் இருக்கிற இருப்புல பிழைக்கத் தெரியாத ஆளாய் இருக்கான்ப்பா. காலை பத்து மணியோட டயம் முடிஞ்சா என்ன? எல்லாமே டயப்படியா நடக்குது? “
“காதும் காதும் வச்ச மாதிரி டெண்டரை வாங்கி உள்ளே போட்டுக்கிட்டு, சுளையா பத்தாயிரம் ரூபாயை நொடியிலே சம்பாதிச்சிருக்கலாம். பாவி! சந்தர்ப்பத்தை நழுவ விட்டுட்டான்.”
“சரி, சரி விடுப்பா. நம்ம செக்சனுக்கு ஏதாவது வேலையா வராமலாப் போயிடுவான். அப்போ நாமும் காந்தியாவும், புத்தராகவும் மாறிட வேண்டியது தான்.”
நெருப்பாகச் சுட்ட அவர்களின் வார்த்தைகளை, சம்பாஷணைகளை விக்னேஷிடம் கொட்டித் தீர்த்தேன்.
“இதுக்குப் போயா இப்படி இடிஞ்சு போய் இருக்கே? இவ்வளவு சென்சிட்டிவா இருந்தா வாழ்க்கையிலே முன்னேறவே முடியாது ரவி.” என்றான் விக்னேஷ்.
“உனக்குத்தான் தெரியுமே விக்னேஷ். காலை பத்து மணி வரைதான் கெடுன்னு, சாயங்காலம் சாவகாசமாய் யாரையோ கூட்டிக்கிட்டு வந்து டெண்டரை வாங்கிக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தினா எப்படி? நீயே சொல்லு.
நேரம், காலம், கெடு இதெல்லாம் எதுக்கு இருக்கு? பத்து நாட்கள் சும்மா இருந்துட்டு, கடைசி நாளில் கெடு முடிஞ்ச பிறகு வந்து கெஞ்சினால் எப்படி அனுமதிக்க முடியும்?
எம்.டி.க்குப் பதில் சொல்றது யாரு? நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கன்னா, பின்னான்னு பேசறாங்க?”
“இன்னிக்கு உலகமே இப்படித்தான் ரவி. விமரிசனங்களிலிருந்து எவருமே தப்ப முடியாது. விமரிசனங்கிறது வெளியிலே அடிக்கிற காற்று மாதிரி.
தென்றலாய் வீசுகிற காற்று மாதிரி ஆரோக்கியமான விமர்சனமா இருந்துட்டா ஓ.கே. சூறாவளிக் காற்றாகவும், புழுதியை வாரி இறைக்கிற காற்றாகவும் கூட சிலரது விமரிசனங்கள் இருக்கும்.
நீ எப்படித்தான் கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டு உள்ளேயே இருந்தாலும் எங்கோ இருக்கிற மூலை, முடுக்கு, துவாரம் வழியாக அந்த விமரிசனக் காற்று உள்ளே புகுந்து விடும்.
எவ்வளவு தான் பெர்ஃபெக்டா நாம இருந்தாலும் இந்த சமுதாயம் நம்மை விமரிசித்தே தீரும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் வேலையே பார்க்க முடியாது.”
“இல்லை விக்னேஷ், டயம் முடிஞ்சப்புறமும் பாங்க்ல போய் பணத்தைப் போடணும் அல்லது எடுக்கம்னா அங்கே ஒத்துப்பாங்களா?
இவ்வளவு ஏன்? தியேட்டர்ல படம் ஆரம்பிச்சு டிக்கெட் கவுன்ட்டரை மூடினதுக்கப்புறம் நாம போய் டிக்கெட் கேட்டால் அவங்க கொடுப்பாங்களா?
கோயிலை எடுத்துக்கோ, நடையைச் சாத்திய பிறகு சாமி தரிசனம் செய்யணும்னா அனுமதிப்பாங்களா?
ரேஷன் கடை, பால்பூத், ஓட்டல் இப்படி ஒவ்வொரு இடத்திலுமே அவங்கவங்களுக்குன்னு ஒரு நேரம், காலம் இருக்கு. இதெல்லாம் ஏன் இவங்களுக்குப் புரியமாட்டேங்குது.”
ரொம்பவும் மனசு நொந்நு, ஒடிந்து போய் பேசினேன் நான்.
“காம்டௌன் ரவி! உனக்கு உலக அனுபவம் போதாது. நீ இன்னும் எவ்வளவோ அடிபட்டுத்தான் இந்த உலகத்தையும், மனுஷங்களையும் புரிஞ்சுக்கணும்.”
எந்த ஒரு நல்லதைச் செஞ்சாலும் அதைச் செய்யவிடாது இந்த உலகம். பேசிப் பேசியே காரியத்தைக் கெடுத்துருவாங்க.
அவங்கவங்க எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி மறுக்காமல் நடந்துக்கிட்டா நாம் நல்லவர்கள்! இல்லேன்னா கெட்டவர்கள்!
நெற்பயிர் நல்லதுதான். உணவாக நாம் பயன்படுத்தும் கீரை நல்லதுதான். இவைகளையெல்லாம் பயிரிட்டு வளர்ப்பதற்குள் என்ன பாடுபடுகிறோம்?
ஆடு மாடுகள் மேய்ந்து அழிக்கத்தான் பார்க்கும். அதையெல்லாம் தடுத்து, மீறிச் செயல்பட்டு பலனை அனுபவிப்பதில்லையா, அதுமாதிரி தான், நம் நேர்மைக்கும், நாணயத்துக்கும், திறமைக்கும் எவ்வளவோ சோதனைகள், இடையூறுகள் வரும்; போகும்.
எவ்வளவோ பேரின் வாயில் அன்றாடம் நாம் விழத்தான் வேண்டியிருக்கும். அனைத்தையும் பொறுமையாய் தாங்கிக்கிற பக்குவத்தை நமக்குள்ளே வளர்த்துக்கிட்டு, படிப்படியாய் முன்னேறுவதே வாழ்க்கை.
‘ரோஜா மலர்’! முட்கள் நடுவே தான் இருக்கு. இறைவனின் படைப்பு அப்படி! முட்களால் ரோஜாவுக்கு எவ்விதத் தீங்கும் இல்லை. ரோஜாவின் மகிமை அப்படி!
ரோஜாவை விரும்பித் தேடி வர்றவங்க முட்களைப் பற்றி கவலைப்படமாட்டாங்க. ரோஜாவை மட்டும் ரொம்ப லாவகமாய் பறிச்சுக்கிட்டுப் போயிடுவாங்க.
முள்ளில் ரோஜாவாய் நாம் இருக்கிறது தான் நமக்குப் பெருமை!
“மாசிலாமணியும், மத்தவங்களும் பேசின பேச்சு நெருப்பாய் சுடுகிறது விக்னேஷ். அம்பு எய்தவனை விட, அம்பினால் அடிபட்டவனுக்குத் தான் வலி தெரியும்.”
“கரெக்ட் ரவி. நெருப்பை அணைக்கத் தண்ணீர் தான் வேண்டும் என்றில்லை. சுடுநீர் அல்லது வெந்நீர் கொண்டு கூட அணைக்கலாம்.
இப்படிப் பேசறவங்கெல்லாம் அவங்கவங்க கேரக்டர் கொண்ட ஆட்கள் மூலமாகத் தான் திருத்த முடியும்.
இவங்களையெல்லாம் திருத்தற வீண் முயற்சியில் நாம் நேரத்தை வீணடிக்காமல் நம்மோட முன்னேற்றம், வளர்ச்சியில் கவனம் செலுத்துறது தான் புத்திசாலித்தனம்!”
நண்பன் விக்னேஷின் பேச்சினால் இப்போது ஓரளவிற்கு தெளிவாகியிருந்தேன். உள்ளத்தில் ஒருவித உத்வேகம் ஜனிக்க, அந்த சந்தோஷத்தில் விக்னேஷூடன் திரும்பவும் கம்பெனிக்குள் நுழைந்தேன்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998