மூர்த்தி நாயனார் – முழங்கையை அரைத்து காப்பிட முனைந்தவர்

மூர்த்தி நாயனார் இறைவனுக்கு சந்தனக் காப்பிட தன்னுடைய முழங்கைகளை அரைத்தவர். இறையருளால் அரச பதவி பெற்ற வணிகர்.

மூர்த்தி நாயனார் தமிழ் வளர்த்த மதுரையில் வணிகர் குலத்தில் தோன்றினார். மதுரை ஆலவாய் அண்ணலிடம் பேரன்பு கொண்டிருந்தார்.

பெரும் வணிகராய் இருந்த போதிலும் தினமும் மதுரை சொக்கேசருக்கு சந்தனப்பிடுவதற்கு, சந்தனக் கட்டை அரைத்து தரும் பணியைச் செய்து வருவதை குறிக்கோளாய் கொண்டிருந்தார்.

அப்போது மதுரையை கருநாடகத்தைச் சேர்ந்த அரசன் ஒருவன் கைபற்றினான். அவன் சமண சமயத்தைச் சார்ந்தவன். ஆதலால் சமண சமயத்தையும், அதனுடைய குருமார்களையும் பெரிதும் ஆதரித்தான்.

சைவ சமயத்தை பின்பற்றுபவர்களை சமண சமயத்திற்கு மாற்ற முற்பட்டான். அவ்வாறு மாறாதவர்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்தான்.

அவனுடைய கொடுமைகள் மூர்த்தியாருக்கும் தொடர்ந்தது. எனினும் அவர் சொக்கேசருக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் பணியை விடாது தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

கோபடைமந்த மன்னன் மூர்த்தியாருக்கு சந்தனக் கட்டை கிடைக்க விடாமல் செய்ய திட்டமிட்டான்.

அவனுடைய திட்டத்தால் ஒருநாள் மூர்த்தி நாயனார் மதுரை முழுவதும் சந்தனக்கட்டை தேடி அலைந்தும் கிடைக்காமல், திருஆலவாய் கோவிலை அடைந்தார்.

மனம் மிகவும் கவலையுற்று கோவிலில் சந்தனம் அரைக்கும் கல்லில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ‘சந்தனக் கட்டைதான் கிடைக்கவில்லை; ச‌ந்தனம் அரைக்கும் இந்த கட்டையின் முழங்கைகள் இருக்கின்றனவே. இதனைக் கல்லில் அரைத்து இறைவனுக்கு காப்பிடுவோம்’ என்று எண்ணினார்.

தன்னுடைய இரண்டு கைகளையும் சந்தனம் உரைக்கும் கல்லில் வைத்து தேய்க்கத் தொடங்கினார். ஐந்தெழுத்தை உச்சரித்தபடி வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து கல்லில் தேய்த்துக் கொண்டே இருந்தார்.

அவருடைய முழங்கைகளில் தோல் கிழிந்து எலும்பு நொறுங்கி உள்ளிருக்கும் சதை வெளியே வந்தது. அப்போது “மூர்த்தியாரே, உனக்கு தீங்கு செய்தவன் கைபற்றியிருக்கும் இந்நாடு நாளை உன் வசப்படும். அதனை ஏற்று நல்லாட்சி புரிந்து எம்மை அடைவாயாக.” இறைவன் வாழ்த்தியருளினார்.

இறை ஆணையைக் கேட்டதும் ‘சிவத்தின் விருப்பம் அதுதான் என்றால் அதனை நான் செவ்வனே செய்து முடிப்பேன்.’ என்று மனதிற்குள் எண்ணினார்.

அவருடைய கைகள் முன்போல் ஆயின. சந்தனம் திருஆலவாய் கோவில் எங்கும் மணத்தது.

அன்றைய இரவே கருநாடக மன்னன் இறந்தான். அவனுக்கு குழந்தையோ, மனைவியோ இல்லாததால் அமைச்சர்களே மன்னனுக்கு ஈமக்கிரியை முடித்துவிட்டு அடுத்த அரசனை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

அவர்களின் வழக்கப்படி பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து அதனுடைய கண்களைக் கட்டிவிட்டு மதுரைக்குள் அனுப்பினர். அப்போது மூர்த்தி நாயனார் ஆலவாய் கோவிலிருந்து வெளியே வந்தார்.

பட்டத்து யானை நேரே திருக்கோவிலின் வாயிலுக்குச் சென்றது. மூர்த்தியாரின் கழுத்தில் மாலையை அணிவித்து அவரை தன் மேல் அமர்த்தியது.

இதனைக் கண்டதும் அமைச்சர்கள் தங்களுடைய அரசன் தேர்வு செய்யப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்து, மூர்த்தியாரிடம் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டினர்.

அவரோ சமண சமயத்தை விடுத்து மதுரை மக்கள் எல்லோரும் சைவத்தைப் பின்பற்றினால் தாம் அரச பொறுப்பை ஏற்பதாகத் தெரிவித்தார். அமைச்சர்கள் அவரிடம் “அரசரின் விருப்பம் அதுவானால் அவ்வாறே நடக்கும்.” என்று தெரிவித்தனர்.

இதனால் மகிழ்ந்த மூர்த்தியார் அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்.

மறுநாள் அமைச்சர்கள் மணிமுடி சூடி சந்தனம்மிட்டு, அணிகலன்களை அணிந்து முறையாக அரச பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டினர்.

அவர்களிடம் மூர்த்தியார் “எனக்கு ஜடாமுடியே திருமுடி. திருநீறே சந்தனம். ருத்திராக்கமே அணிகலன்கள். இவற்றுடனே நான் அரச பொறுப்பை ஏற்பேன்.” என்று கூறி அவர்கள் கொடுத்ததை ஏற்க மறுத்து விட்டார்.

அறவழியில் சைவ நெறி ஓங்க நெடுநாட்கள் மதுரையை ஆட்சி புரிந்து இறுதியில் சிவபதத்தை அடைந்தார்.

மூர்த்தி நாயனார் குருபூஜை ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

உருத்திராக்கம், திருநீறு, ஜடாமுடி ஆகியவற்றால் அரசாண்ட மூர்த்தி நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்’ என்று போற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.