மனித உணர்வுகளில் மறைந்திருக்கும்
மகத்தான எண்சுவையோ மெய்ப்பாடு
(மெய்ப்பாடு என்றால் உணர்ச்சி என்று பொருள்)
கோவை செவ்விதழ் குவியா மலர்ந்து
முத்துப் பற்கள் சிப்பியைப் பிளந்து
திக்கெட்டும் ஒலிக்கும் குறு ஓசைச்
சுவையோ நகை
தன்னிலைக்கு அவலங்கொண்டோ பிறர்
நிலைக்கு அவலங்கொண்டோ விழி
சிந்தும் வீழருவியின் அவலச்
சுவையோ அழுகை
எள்ளி நகையாடும் கனவான்களின்
ஏளனப் பார்வையில்
ஏழையின் எண் சாண் உடம்பும் கோழையாய்
குறுகும் இளிச்சுவையோ இளிவரல்
அச்சத்திலும் ஆச்சரியத்திலும்
எச்சம் ஏதுமின்றி
உச்சத் திகைப்பை உணர்வால் உரைக்கும்
வியப்புச் சுவையோ மருட்கை
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட இலக்கு
நோக்கிய பயணத்தில் வெற்றிடமாய் அமையும்
பாதையில் பயணிக்கும் பய உணர்வுச்
சுவையோ அச்சம்
அகழாய்வு செய்யும் அறிஞனாலும் நங்கையவள்
அகவாய்வை ஆய்ந்து முடிவுரைக்க வியலாது
அத்தகைய முடிவுரைக்கும் மணாளனின் செருகுணச்
சுவையோ பெருமிதம்
இகழ்வினைத் தாளாது இமை விரிக்க
விழி சிவக்க வெகுண்டெழும் ரௌத்திரச்
சுவையோ வெகுளி
முப்பாலில் மூன்றாம் பாலுரைக்கும்
அகமகிழ்வின் திகட்டா
தீஞ்சுவையோ உவகை
முக உணர்வில் அரங்கேறும் முடிவிலா
வெளிப்பாடோ மெய்ப்பாடு
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!