மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை

சினிமா இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவருடைய கதைக்கு நான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி வந்தார்.

அப்போது நான் ரவி என்கிற இயக்குநரின் படத்தில் துணை இயக்குநராக வேலை செய்து வந்தேன். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருந்தது.

இந்த படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, நான் ஒரு இயக்குநரின் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன் என்று சொல்லியிருந்தேனே!

அந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்து, அந்த படத்தினுடைய படப்பிடிப்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை என்ற ஊரில் நடந்து கொண்டிருந்தது.

படப்பிடிப்புக்கு செல்லும் முன் அந்த படத்தின் இயக்குநர் என்னை இணை இயக்குநர் பணியை வந்து செய்யும்மாறு என்னை அழைத்தார்.

நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை. அதனால் நான் செய்ய வேண்டிய வேலைக்கு வேறொருவரை அழைத்து சென்றார்.

நான் வேலை செய்து கொண்டிருந்த படம் தயாரிப்பு நிர்வாகிகளின் பேராசை பிடித்த செயல்களால் பாதியிலயே நின்று விட்டது.

அதனால் நான் திரைக்கதை வசனம் எழுதிகொடுத்த இயக்குநருக்கு போன் செய்து எனது நிலைமையை தெரிவித்தேன்.

அவர் உடனடியாக என்னை படப்பிடிப்பு நடந்து வந்த பெருந்துறைக்கு கிளம்பி வர சொன்னார். நான் அவசரமாக அங்கே கிளம்பிச் சென்று அந்த படப்பிடிப்பு குழுவோடு இணைந்து கொண்டேன்.

அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு ஈமு கோழி தொழில் அதிபர்; திடீர் பணக்காரர். நான் அங்கு சென்றதும், இயக்குநர் தயாரிப்பாளரிடம் நம்ம படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினது இந்த தம்பிதான் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் ஒரு எழுத்தாளன் என்பதால் என் மீது அவருக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

நான் பெருந்துறைக்கு வந்து மூன்று நாட்கள் ஆனது. இதற்கு முன் நடந்த படப்பிடிப்பு நாட்களை விடவும் இந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு சிறப்பாகவும் துரிதமாகவும் நடந்தது. அதனால் தயாரிப்பாளர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்.

நான்காவது நாள் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குநரை தவிர்த்து விட்டு என்னையும் அந்த படத்தின் இணை இயக்குநரையும் அவருடைய ஈமு கோழி பண்ணைக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்தார். விருந்தை உயர்ந்த ரக மதுபானங்களோடு சிறப்பித்தோம்.

விருந்து முடிய இரவு பதினொரு மணி ஆனது. அதன்பிறகு எங்களை நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு அவரே அழைத்து செல்வதாகச் சொன்னார். ஈமு கோழி பண்ணைக்கும் நாங்கள் தங்கியிருந்த மணீஸ் விடுதிக்கும் கிட்ட தட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் இருந்தது.

ஈமு கோழி பண்ணையிலிருந்து கிளம்பி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்துக் கொண்டிருந்தபோது, ஒரு கணவனும் மனைவியும் ஏதோ ஒரு நிகழ்வுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

தயாரிப்பாளர் போதையின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு ஒரு இருபத்தைந்து, இருபத்தாறு வயதுதான் இருக்கும். சட்டப்பூர்வ திருமணம் ஆகாதவர். இலங்கை பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

அந்த பெண் ஒரு இலங்கையை சேர்ந்த மந்திரியின் மகள். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளை பார்த்ததும் தயாரிப்பாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சினிமாவில் வில்லன் காரில் இருந்து கொண்டு கதாநாயகன், நாயகியை துரத்துவது போல அவர்களை துரத்த ஆரம்பித்து விட்டார்.

என்னுடன் இருந்த இணை இயக்குநர் “விடாத பிடி, ம்… விடாத” என்று தயாரிப்பாளரை உற்சாகப்படுத்த துவங்கி விட்டார்.

நான் “சார் என்ன பண்றீங்க? அவங்கள ஏன் துரத்துறீங்க? இதெல்லாம் வேண்டாம். தப்பு பண்ணாதீங்க. ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விபரிதமாகி விடப்போகிறது.” என்றேன்.

தயாரிப்பாளர் நான் சொல்வதை காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. மாறாக என்னை பார்த்து “ரைட்டர உனக்கு நல்ல காட்சி கெடைக்கும்ய்யா. அமைதியாக வேடிக்கையை மட்டும் பாரு.” என்றார் தயாரிப்பாளர்.

என்னுடன் இருந்த இணை இயக்குநருக்கு அடுத்த படம் தருவதாக நான் பெருந்துறைக்கு செல்வதற்கு முன் சொல்லியிருக்கிறார். அதனால்தான் தயாரிப்பாளரின் செய்கையை அவர் ஆதரித்தார் என்று நினைக்கிறேன்.

ஊரை அடித்து உலையில் போட நினைக்கும் இவரிடம் எப்படி ஒரு நல்ல படைப்பை எதிர்ப்பார்ப்பது?

நாங்கள் செல்ல வேண்டிய பாதையை விட்டுட்டு மோட்டார் சைக்கிள் தம்பதிகளை துரத்திக் கொண்டு ஏதேதோ பாதையில் சென்று கொண்டிருந்தோம்.

நான் அவர‌து செய்கையை ஆதரிக்காததால் “நீயெல்லாம் எப்படிய்யா இயக்குநர் ஆவ? இந்த பயம் பயப்படுற.” என்று என் திறமைய பற்றி ஏளனம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

அதன்பிறகு நான் இவரிடம் பேசி பலன் இல்லை என்பதை உணர்ந்து, மனதிற்குள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

மோட்டார் சைக்கிள் தம்பதிகள் உயிர் பயத்தில் சென்றுகொண்டிருந்தனர். பயத்தில் வந்த வியர்வைகளால் அவர்களது ஆடைகள் நனைந்து போனது.

நாங்கள் சென்றுக் கொண்டிருந்த காட்டுக்குள், ஒரு சாலையோர இரவு சாப்பாட்டு கடையில் விளக்கு எறிந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் அந்த தம்பதிகள் கடைப் பக்கமாக சென்று மோட்டார் சைக்கிளை ஓரம் கட்டிவிட்டு நின்று எங்களை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

நாங்கள் அந்த தம்பதிகள் மோட்டார் சைக்கிளை ஓரம் கட்டியது தெரிந்ததும், ஒரு இரு நூறு அடி தூரத்துக்கு முன்னரே எங்களது வண்டியை நிறுத்திவிட்டு, விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு இருட்டுக்குள் நின்று அவர்களை கண்காணித்தோம்.

அந்த நேரத்தில் பார்த்து சப்பாட்டுக் கடைக்காரர் கடையை சாத்திவிட்டு கிளம்பி சென்றார். மோட்டார் சைக்கிள் தம்பதிகளுக்கு எங்களது கார் இருட்டுக்குள் நிற்பது தெரியவில்லை.

ஆனால் அவர்கள் நிற்பது கடையின் முன்னால் இருந்த மின்விளக்கு ஒளியில் எங்களுக்கு தெள்ள தெளிவாக தெரிந்தது. கடையின் முன் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் எங்களை சென்று விட்டார்கள் என்று நினைத்தார்களோ, இல்லை நடப்பது நடக்கட்டும் என்று முடிவு செய்தார்களோ தெரியாது. ஆனால் கிளம்பி சென்றார்கள்.

இதோடு விட்டு விடுவார் என்று நான் நினைத்திருந்த வேளையில், என் நம்பிக்கைகள் அத்தனையும் தூள் தூளாக்கியபடி காரை உசுப்பிக்கொண்டு மீண்டும் அவர்களை பின் தொடர ஆரம்பித்தார் தயாரிப்பாளர்.

மறுபடியும் சினிமா துரத்தல் காட்சி போல என் கண் முன்னால் விரிந்தது. பயத்தில் அவர்கள் எங்கேயும் விழுந்து விடக்கூடாது என இறைவனை வேண்டினேன்.. எங்களால் அவர்களுக்கு எந்த வித ஆபத்தும் நேராமல் என்னால் பார்த்துக்கொள்ள முடியுமென்று எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.

சிறிது நேர தூரத்தலுக்கு பின் ஒரு ஊர் வந்தது. அந்த ஊருக்குள் ஒரு மோட்டார் சைக்கிள் மட்டுமே செல்லக் கூடிய ஒரு சந்து தெரிந்தது. அவர்கள் அந்த சந்துக்குள் புகுந்து சென்றனர்.

அப்போதும் விடாமல் சுற்றி வந்து அந்த சந்தின் மறுமுனையில் நின்றோம். அவர்கள் சந்துக்குள் இருந்து வெளியே வரவில்லை. நாங்கள் சுற்றி வரும் முன்னரே அவர்கள் அந்த சந்தைக் கடந்து சென்று விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நாங்கள் அங்கே நின்றவாறு இவ்வளவு வேகமா எப்படி சென்றிருப்பார்கள் என்று யோசித்தவாறு நின்றுக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான் எங்களுக்கான நேரம் ஆரம்பித்தது.

அந்த பக்கமாக ரோந்து வந்து கொண்டிருந்த எஸ்.பி எங்களது காரை கவனித்துவிட்டு, எங்கள் அருகில் வந்து நின்று “என்னய்யா இங்க நிக்கறீங்க?” என்றார்.

நாங்கள் திருடர்கள் போல் விழித்துவிட்டு “கடை ஏதாவது திறந்திருந்தா பழம் வாங்கலாம்ன்னு பார்க்கறோம் சார்”

“எங்க இருந்து வர்றீங்க?”

ஈமுக்கோழி பண்ணை இருந்த இடத்தை சொல்லி நாங்க பெருந்துறையில இருக்கற மணீஸ் லாட்ஜிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னோம். அதன்பிறகு எங்கள் எல்லோரையும் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

முதலில் என்னிடம் வந்து “எந்த ஊரு?” என்றார்.

“சென்னையிலிருந்து சினிமா படப்பிடிப்பு விஷயமாக வந்திருக்கோம் சார்”

“இயக்குநர் யாரு?”

“அவரு லாட்ஜிக்கு போயிட்டாரு சார்.”

“குடிச்சிருக்கீங்களா?”

“இல்ல சார்”

“ஊது” என்றதும் நான் மட்டும் ஊதி காட்டினேன் என்னிடத்தில் எந்த விதமான மது வாசனையும் வரவில்லை.

ஓட்டுனர் இருக்கையில் இருந்த தயாரிப்பாளரை பார்த்து “இவன் யாரு?”

“அவர்தான் தயாரிப்பாளர்.”

“நீங்க ரெண்டு பேரும் யாரு?”

“நாங்க ரெண்டு பேரும் உதவி இயக்குநர்”

“தயாரிப்பாளருக்கு எந்த ஊரு?”

அந்த கேள்விக்கு “இந்த ஊருதான் சார்?” தயாரிப்பாளரே காரில் இருந்தவாறு சொன்னார்.

“ஏன், சார் கீழே இறங்கி வந்து பேச மாட்டிங்களோ?” என்றதும்.

தயாரிப்பாளர் இறங்கி எஸ்.பி அருகில் சென்றார். அவரை “நீ ஊது” என்றார்.

தயாரிப்பாளர் ஊதி காட்டினார்.

“குடிச்சிட்டு வண்டி ஒட்டுறயாடா?” என்று எஸ்.பி கேட்கும்போது நடக்கப் போற விபரீதங்கள் எனக்கு புரிந்து விட்டது.

தயாரிப்பாளரின் கார். சைலோ கார் அதற்கு மூன்று வரிசை இருக்கைகள் இருந்தது. முன் வரிசை இருக்கை ஓட்டுநருக்கும் இணை ஓட்டுநருக்குமானது. பின்னிருக்கையில் நானும் இணை இயக்குநரும் இருந்தோம்.
கடைசி இருக்கையில் ஒரு உரிமம் பெற்ற அசல் துப்பாக்கியும் ஒரு காவல்துறை ஆய்வாளரது உடையும் இருந்தது.

நான் போலீஸ்காரர்களை கண்டதும் துப்பாக்கியை ஒரு இரகசிய இடத்தில் மறைத்து வைத்தேன். உடை மட்டும் அதே இடத்தில் கிடந்தது. அங்கே இருந்த கான்ஸ்டபிளிடம் எஸ்.பி எங்களது காரை பரிசோதனையிட சொன்னார்.

சோதனையிட்ட போது ஆய்வாளர் உடையை பார்த்ததும் கான்ஸ்டபிள் “சார் ஒரு போலீஸ் உடை வண்டியில இருக்கு சார்?” என்றார்.

உதவி ஆய்வாளரை பார்த்து “இவனுங்கள மேல எனக்கு சந்தேகமா இருக்கு. ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வாங்க விசாரிப்போம்”

எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கே மறுபடியும் விசாரணை ஆரம்பித்தது..

தயாரிப்பாளரை பார்த்து “என்னடா தொழில் பண்ணற?”

“ஈமுக்கோழி பண்ணை வச்சிருக்கேன் சார்?” என்றதும் எஸ்.பியின் மூளைக்குள் ‘சுர்’ என்று ஒரு வன்மம் ஏறியதை என்னால் உணர முடிந்தது. அதன் விளைவு தயாரிப்பாளரை ஒரு சுவர் பக்கமாக சென்று குத்துக்காலிட்டு அமர வைத்தார்.

அதன்பின் பார்வை எங்களது பக்கமாக திரும்பியது. “என்ன பண்றேன்னு சொன்னீங்க?”

“சினிமாவில் உதவி இயக்குநரா இருக்கறோம் சார்.”

“எப்படி நம்புறது?” என்றதும்.

நான் எனது இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டினேன். அதன் பின் அவர் எங்களை நம்பினார் என்று நினைக்கறேன்.

“என்ன விஷயமா வந்திருக்கீங்க?”

“படப்பிடிப்பு விஷயமா வந்திருக்கறோம்”

“இவன் தான் தயாரிப்பாளரா?”

“போலீஸ் உடைய எதுக்கு வச்சிருக்கீங்க?”

“தயாரிப்பாளர், இந்த படத்துல காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரம் பண்றாரு.”

“யாரு இந்த ஏமாத்துக்காற பைய காவல்துறை ஆய்வாளரா? சத்திய சோதனை” என்று தலையில் அடித்துக் கொண்டு ஒரு பெஞ்சை காட்டி “அந்த பெஞ்சில போய் உட்காருங்க” என்றார்.

இணை இயக்குநரும் நானும் அவர் சொன்ன பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டோம். மீண்டும் எஸ்.பி, தயாரிப்பாளரை குத்துக்காலிட்டு அமர வைத்தவாறே விசாரணையை துவங்கினார்.

“ஈமுகோழி வளர்க்கறேங்கற பேருல ஏதோ பெரிய தப்பு நடக்குது. அது என்னன்னுதான் தெரியல. புகார் எதுவும் வரல. எவனாவது ஒருத்தன் புகார் பண்ணட்டும். இந்த ஈமுக்கோழி தொழில் அதிபர்களுக்கெல்லாம் அப்ப இருக்குது” என்றார்.

காவல் துறையினர் ஈமுக்கோழி வளர்ப்பு தொழிலை அழிப்பதற்கான அஸ்திரங்களை தேடிக் கொண்டிருந்தனர் என்பது எனக்கு தெளிவாக விளங்கியது.

தயாரிப்பாரை விசாரித்துக் கொண்டிருந்தபோது கழிவறைக்கு செல்வது போல சென்று, எங்களுடைய திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை பண்ணிக் கொண்டிருந்தவரும், நிஜத்தில் வக்கீல் தொழில் செய்துக்கொண்டிருந்த பரமேஷ்வரன் என்பவருக்கு போன் செய்து விபரத்தை சொன்னேன்.

நள்ளிரவில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த வக்கீல் அடுத்த அரை மணி நேரத்தில் காவல் நிலையத்தில் காட்சி தந்தார்.

திடீரென்று காவல் நிலையத்துக்குள்ளே வந்து வணக்கம் சொல்லி, தன்னை அறிமுகம் செய்து கொண்ட வக்கீலைப் பார்த்து எஸ்.பி அதிர்ச்சியானார்.

தயாரிப்பாளரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து ஈமுக்கோழி வியாபாரம் சம்பந்தமாக சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம் என நினைத்திருந்தார்.

அப்போது ஈமுக்கோழி வளர்ப்பு நல்ல செல்வம் கொழிக்கும் தொழிலாக தொழில் செய்வோர்கள் மத்தியிலும் பொதுமக்களிடமும் பரவலாக ஒரு பேச்சு இருந்தது.

ஈமுக்கோழி வியாபாரத்தில் ஏதோ தப்பு நடக்கிறது என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது. ஆனால் அது சம்பந்தமாக எந்த விதமான புகாரும் எந்தவொரு காவல் நிலையத்துக்கும் வராமலே இருந்தது.

அதை பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்துதான் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது. எஸ்.பியிடம் தயாரிப்பாளர் “என் வக்கீல்கிட்ட பேசனும், கொஞ்சம் அனுமதி கொடுங்க” என்று கேட்டும் அதற்கு செவி சாய்க்காமல் இருந்தார்.

இப்போது வக்கீல் வந்ததும், யார் இவருக்கு தகவல் சொல்லிருப்பார்கள் என்பதுதான் அதிர்ச்சிக்கான காரணம். தனக்கு வணக்கம் சொன்ன வக்கீலுக்கு எஸ்.பி மரியாதை நிமிர்த்தமாக வணக்கத்தை ஏற்றுக் கொண்டது போல தலையாட்டிவிட்டு சைகையின் மூலம் வக்கீலை அமர சொன்னார்.

வக்கீல் அமர்ந்ததும் எஸ்.பி ”சொல்லுங்க” என்றார்.

அங்கே சுவரோரமாய் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த தயாரிப்பாளரை காட்டிவாறு “அதோ உட்கார வச்சிருக்கீங்களே, அவர் என்னோட Client. அவர் விஷயமாகத்தான் வந்திருக்கறேன். இப்ப என்ன விஷயமா இவங்கள கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு, நான் தெரிஞ்சிக்கலாமா?”

“Drink and Drive. அதுவும் இல்லாம அவரோட காரை சோதனை போட்ட போது ஒரு காவல்துறை ஆய்வாளருக்குரிய உடுப்பும் இருந்தது. அதுதான் சந்தேகப்பட்டு விசாரிக்கலாம்ன்னு கூட்டிட்டு வந்தோம்.”

“சார், என்னோட Client ஒரு படம் எடுக்கறாரு. அதுல அவரு ஒரு காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரம் பண்றாரு. அதுக்காக எடுத்ததுதான் அந்த உடுப்பு. தப்பான நோக்கத்துக்காக இல்லை.”

“சரி, காலையில வந்து கூட்டிட்டு போங்க”

“ஐயய்யோ காரியமே கெட்டு போயிடும் சார். நாளைக்கு படப்பிடிப்பு இருக்கு. சென்னையில இருந்து இவர் கூட நடிக்கிறதுக்கு சப்போர்ட்டிங்க் கேரக்டர் பண்ற நடிகர்கள் எல்லாரையும் வர வச்சாச்சி. எல்லாரும் பீல்டுல‌ இருக்கற பெரிய பெரிய நடிகருங்க. இவர் இல்லேன்னா, மூன்று லட்ச ரூபாய் நஷ்டமாயிடும்”

“எப். ஐ. ஆர் போட்டாச்சி” என்றார் எஸ்.பி.

“என்னன்னு போட்டுருக்கீங்க”

“Drink and Drive.”

“Drink and Drive தான. நாளைக்கு கோர்ட்டுல வந்து பைன்ன கட்டியிருதோம். இப்ப, ஆள விடுங்க”

எஸ்.பி. முடியாது என தலையாட்டினார்.

“அப்படி சொல்லாதீங்க சார்.” சொல்லிவிட்டு எஸ்.பி விடமாட்டார் என்று நினைத்ததாலோ என்னவோ உடனே தனது போனை எடுத்து நம்பரை டயல் செய்து “நான் வேணும்ன்னா ஈரோடு மாஜிஸ்ட்ரேட்க்கு போன் பண்ணி பேச சொல்லட்டா” என்றதும் வக்கீலின் செல்வாக்கை நினைத்து சிறிது பயந்துவிட்டார் போல.

அதனால் வக்கீலைப் பார்த்து ‘வேண்டாம்’ என்பது போல கையமர்த்தி தடுத்தார். இதுவரை வழக்கு எவுதும் பதியாமலே பதிந்ததாய் சொன்னவர் அதன் பிறகு தயாரிப்பாளரின் மேல் குடித்துவிட்டு வண்டி ஓட்டினார், என்று ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட்டு ஜாமினில் அனுப்பி வைத்தார்.

எங்கள் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் போது எங்களுக்கு எதிரில் இருந்த சுவரில்

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து

என்று இருந்தது.

ரக்சன் கிருத்திக்
8122404791

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.