நண்பன் செந்திலின் தங்கை திருமண விழாவில் மொய்ப்பணம் வசூலிக்கும் வேலையைத் தினேஷூம் கார்த்திக்கும் செய்து கொண்டிருந்தார்கள்.
மொய் பணக்கவரைப் பிரித்து எவ்வளவு பணம், யார் தந்தது என்பதை கார்த்திக் சொல்ல தினேஷ் ஒரு நோட்டில் வரிசையாக எழுதிக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்து மொய்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்த கூட்டம் குறைய ஆரம்பித்தது.
அனைவரும் சென்ற பிறகு கார்த்திக் தன் பங்குக்கு ஆயிரம் ரூபாயை ஒரு கவருக்குள் வைத்துத் தன் பெயரை எழுதி தினேஷிடம் கொடுத்தான்.
தினேஷ் கார்த்திக் பெயரை எழுதி முடித்ததும், தன் பெயரை எழுதி ஆயிரத்து ஐநூறு என நோட்டில் குறிப்பிட்டுப் பர்சிலிருந்து ஒரே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக் கொடுத்தான்.
பிறர் கொடுத்த பணத்தோடு சேர்த்ததும் கார்த்திக் கேட்டான் “என்னடா, ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, நோட்டில் ஆயிரத்து ஐநூறு என எழுதியிருக்கே?”
“ஓ…அதுவா? செந்தில் நேரில் வந்து பத்திரிக்கை வைத்து நம்மை அழைக்க வந்த சமயம் நெருங்கிய நண்பர்கள் என்கிற முறையில் ஒவ்வொருவருக்கும் ‘பேண்ட்-ஷர்ட் அடங்கிய கிஃப்ட் பாக்ஸ்’ ஒன்றைத் தந்து புதிய டிரெஸ் அணிந்து தான் திருமணத்திற்கு வரவேண்டும் எனச் சொல்லியிருந்தான் இல்லையா?
அந்தப் பேண்ட், ஷர்ட் தைப்பதற்கு ஆன கூலி ஐநூறு ரூபாய். அதையும் சேர்த்துதான் மொய் பண நோட்டில் ஆயிரத்து ஐநூறு என எழுதினேன்” என்றான்.
தினேஷை வித்தியாசமாகப் பார்த்த கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998