சில நேரங்களில் மௌனம் சிறந்த பலன்களைக் கொடுக்கும். தடுமாறும் தருணத்தில் மௌனத்தின் பலன் எவ்வாறு இருந்தது? என்பதை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.
பொறுமை இல்லாத செயல் நமக்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்பதையும் இந்நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நம் எல்லோருக்கும் தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றித் தெரியும். நிறைய கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர்.
அறிவியல் கண்டுபிடிப்பு என்றால் நம்முடைய நினைவிற்கு சட்டென வருபவர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு சமயம் ஒலிப்பதிவு அமைப்பு ஒன்றைக் கண்டுப் பிடித்தார்.
வெஸ்டன் யூனியன் என்ற அமெரிக்க நிறுவனம் எடிசனின் புதிய கண்டுப்பிடிப்பை விலைக்கு வாங்கிக் கொள்ள முன் வந்தது.
எடிசன் அப்புதிய கண்டுபிடிப்பிற்கான விலையைச் சொல்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார்.
அந்த இரண்டு நாட்ளில் திருமதி எடிசன் புதிய கண்டுபிடிப்பிற்கான விலையாக 20 ஆயிரம் டாலர் கேட்கலாம் என்று எடிசனுக்கு யோசனை கூறினார்.
ஆனால் எடிசனுக்கு 20 ஆயிரம் டாலர் விலை மிக அதிகமாகத் தோன்றியது.
ஒலிப்பதிவு அமைப்பின் விலையை பற்றி பேச வெஸ்டன் யூனியன் அலுவலகத்தில் நுழையும் போது மிகவும் யோசித்துக் கொண்டே சென்றார் எடிசன்.
வெஸ்டன் யூனியன் நிர்வாகத்தின் நிறுவன அதிகாரியைச் சந்தித்தார் எடிசன்.
நிறுவன அதிகாரி எடிசனிடம் ‘சொல்லுங்கள் எடிசன், நீங்கள் உங்களின் ஒலிப்பதிவு அமைப்பினை என்ன விலைக்கு விற்கிறீர்கள்?‘ என்று கேட்டார்.
எடிசனோ இருந்த குழப்பத்தில் தடுமாறினார். ஏதும் பேச முடியாமல் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தார்.
எடிசனின் பதிலுக்கு காத்திருந்த நிறுவன அதிகாரியால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
‘ஒரு லட்சம் டாலர் உங்களின் கண்டுபிடிப்புக்கு சம்மதமா?’ என்று கேட்டார்.
எடிசன் சரி என்றார்.
எடிசன் பதில் சொல்ல முடியாமல் விழித்த, நிசப்தமாய் கழித்த அந்த நிமிடங்கள் அவருக்கு ஆதாயத்தை பெற்று தந்தன.
மௌனமாய் இருந்ததில் எடிசனுக்கு லாபம்.
பொறுமையை இழந்ததால் வெஸ்டன் யூனியன் நிறுவன அதிகாரிக்கு இழப்பு.
ஆதலால் குழப்பமான சூழ்நிலையில் மௌனம் சிறந்த தீர்வு தரும். பொறுமையை இழந்தால் இழப்பு என்பதை மௌனத்தின் பலன் என்ற இந்நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!