யானைக்குப் பானை சரி என்ற பழமொழிக்கு ஏற்ப பேசினால்தான் அடாவடி ஆட்களை அடக்க முடியும் என்று ஆசிரியர் ஒருவர் கூறுவதை அணில்குட்டி அன்பழகன் கேட்டது.
மேலும் பழமொழிக்கான விளக்கத்தை ஆசிரியர் கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் அணில்குட்டி அன்பழகன் எண்ணியது.
அப்போது சிறுவன் ஒருவன் எழுந்து “ஐயா இதனை சற்று விளக்கிக் கூறுங்களேன்” என்று ஆசிரியரிடம் கூறினான்.
அதற்கு ஆசிரியர் “இந்தப் பழமொழி ஏதோ மிகப் பெரிய பொருளுக்கு ஈடாக மிகவும் சிறிய பொருளை மதிப்பிடுவது போல உள்ளது.
ஆனால் இதற்கான நேரடியான பொருளோ வேறுவிதமானது. அதனை நான் சிறு கதை மூலம் விளக்குகிறேன்.
ஒரு ஊரில் பாகன் ஒருவன் யானை வைத்திருந்தான். அந்த யானையை வாடகைக்கு விட்டு பொருள் சம்பாதித்து அவன் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
ஒரு நாள் ஊர்வல நிகழ்ச்சி ஒன்றிற்காக யானையை ஒருவன் வாடகைக்கு எடுத்துச் சென்றான்.
என்ன காரணத்தாலோ ஊர்வலத்தின் இடையிலேயே பாதிவழியில் அந்த யானை இறந்துவிட்டது.
யானைப் பாகன் மிகவும் பொல்லாதவன். எனவே, யானையை அழைத்துச் சென்றவன் மிகமிக பயந்தான். என்ன செய்வது என்பது தெரியாமல் விழித்தான்.
யானைக்கு உரியவனிடம் போய் நடந்தவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினான்.
யானைக்கு உரிய நியாயமான விலையை தான் தருவதாக ஒப்புக் கொண்டான்.
ஆனால், பொல்லாத யானைப் பாகன் இவனது சமாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதோடு “அதே யானைதான் எனக்கு வேண்டும். பணம் ஏதும் வாங்கிக் கொள்ள மாட்டேன்.” என்று பிடிவாதமாகக் கூறினான்.
இந்த வழக்கு அவ்வூரில் உள்ள பஞ்சாயத்தாரிடம் சென்றது. அங்கு மிகத் திறமையான அறிவாற்றலும் சூழ்ச்சித் திறனும் படைத்த ஒருவரே தீர்ப்பு வழங்கி வந்தார்.
யானையை அழைத்துச் சென்றவன் “ஐயா, ஏதோ எனது துரதிஷ்டம் யானை இறந்து விட்டது. ஆனால் பாகனோ எனக்கு அதே யானைதான் வேண்டும் என்று கூறுகின்றான். யானையை யாரால் எழுப்பித்தர இயலும், நீங்கள் தான் எனக்கு ஒரு வழி கூற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.
“சரி நான் கூறியபடி செய். யானைப் பாகனிடம் இவ்விவகாரம் குறித்து பேசித் தீர்ப்பதற்காக வருமாறு உனது வீட்டுக்கு வரவழைக்க வேண்டும்.
அவன் வரும்போது கதவை மூடிவைத்து விடு. அந்தக் கதவிற்குப் பின்புறமாக பெரிய மண்பானைகளை அடுக்கி வைத்து விடு!
நீ உள்ளே இருந்து கொண்டு அவனை உள்ளே வருமாறு சொல். அவனும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வர முயற்சிப்பான்.
அந்த முயற்சியில் உனது பானைகள் உடைந்து விடும். நீ எனக்கு அதே பானைகள்தான் வேண்டும் என்று அவனிடம் சொல்.
அவன் மறுத்தால் என்னிடம் அழைத்து வா!” என கூறினார் அப்பெரியவர்.
போனவன் பெரியவரின் சொற்படியே செய்து வைத்து வீட்டுக்குள் அமர்ந்திருந்தான்.
யானைக்கு உரியவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தான். அவன் கதவை திறந்ததும் பானைகள் உடைந்தன.
இவனோ “எனக்கு என் பானைகள் தான் வேண்டும்” என்று கூறினான். யானைக்கு உரிமையாளர் “அதெப்படி முடியும்.
வேண்டுமானால் நீ கொடுக்க வேண்டிய யானைக்குரிய பணத்தை நான் உனக்கு பானைக்குரிய பணமாகத் தருகிறேன்” என சமாதானம் செய்ய முயன்றான்.
ஆனால் பானைக்குரியவன் அதை ஏற்றுக் கொள்ளாது யானைக்காரனை பஞ்சாயத்துக்கு அழைத்தான்.
இருவரிடம் விசாரித்த நீதிபதி யானை இறந்ததற்கு அதே யானையை தரவேண்டியது நியாயமானதுதான்.
அது போல பானைக்காரனுக்கு அதே பானையைத் தரவேண்டியது யானைக்காரனின் கடமை என்று கூறினார்.
யானைக்காரனோ “அதெப்படி உடைந்த பானையை தர முடியும்?” என்று கூறினான்.
“அப்படியானால் நீ பானையைத் தரவேண்டாம். அவன் உனக்கு யானையை தர வேண்டியதுமில்லை, யானைக்கு பானை சரி” என்று தீர்ப்பு கூறினாராம்.
இச்சம்பவம் இப்பழமொழி உருவாக காரணமாக அமைந்தது” என்று ஆசிரியர் கூறினார்.
இதனைக் கேட்ட அணில்குட்டி அன்பழகன் மாலையில் நாம் இந்தப் பழமொழியைக் கூறிவிட வேண்டியதுதான் என்று எண்ணியவாறு காட்டிற்குள் சென்றது.
மாலையில் வட்டப்பாறையில் வழக்கம்போல் எல்லோரும் கூடினர். காக்கை கருங்காலன் “இன்று யார் பழமொழியைக் கூறப்போவது?” ன்று கேட்டது.
அணில்குட்டி அன்பழகன் “நான் இன்று யானைக்குப் பானை சரி என்ற பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் கூறுகிறேன்” என்றது.
“சரி நீ கேட்டதைச் சொல்” என்று காக்கை கருங்காலன் கூறியது.
அணில்குட்டி அன்பழகனும் தான் கேட்ட பழமொழியையும் அதற்கான விளக்கத்தை கதையுடன் ஆசிரியர் கூறியவாறே காட்டில் எல்லா சின்னஞ்சிறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு விளக்கிக் கூறியது.
கதைக்கேட்டவுடன் குட்டியானை குப்பன் “பரவாயில்லையே. எங்கள் இனத்தாரைப் பற்றிய புதுப்பழமொழியையும் விளக்கத்தையும் நன்கு அறிந்து கொண்டேன். அணில்குட்டி அன்பழகனுக்கு மிக்க நன்றி” என்று கூறியது.
பின் எல்லோரும் நாளைய பழமொழியைப் பற்றிய அறிய கலைந்து சென்றனர்.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)