யாரின் பிழை – கவிதை

இதமான சூழ்நிலை இருண்ட சூழ்நிலையாகி

வளமான தேசம் வறண்ட தேசமாகி

உழவர்க‌ள் வயலில் உழுத காலம் போய்

நோயின் பிடியில் விழுந்த காலம் வந்து

வீரக்காளை அடக்கிய இளைஞர் கூட்டம்

ஒற்றைக் கொசுவினால் உயிரிழந்து

மிளகு தக்காளி கசப்பைக் கூட விரும்பாத நாம்

எட்டிக் கசக்கும் நிலவேம்பை நாடும் நிலை வந்து

அள்ளிக் குடித்த அமுதநீர்

நச்சுக் கொல்லி கலந்த அற்ப‌ நீராகி

துள்ளி விளையாடிய வண்ணத்துப் பூச்சிகள்

தொற்று நோய்க்கு ஆளாகி

உயிர்ச் சுவாசமாய் இருந்த காற்று

மாசுத் துகள்களின் இருப்பிடமாகி

நகர வாழ் மக்கள் எல்லாம்

நரக வாழ்க்கை வாழும் நிலை

உணவை விதைத்த இம்மண்ணில்

நோய் உடலைப் புதைக்கும் அவல நிலை

அலைந்து திரிந்த ஆளுமை மனிதனை

வீட்டில் அடைக்கலம் வைத்தது யாரின் பிழை?

அந்நிய நாகரிகம் எனும் அநாகரிகத்தின் அலை!

சி.பபினா B.sc

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.