யார் தலைவன்?

யார் தலைவன் என்பது வலிமை கொண்ட மக்கள் எப்படித் தந்திரவாதிகளால் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதைச் சொல்லும் கதை.

நரி ஒன்றிற்கு காட்டின் தலைவனாக வேண்டும் என்ற ஆசை நெடுநாள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் நரி காட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே புலி ஒன்று வந்தது. புலியோ மிகவும் பசியுடன் இருந்தது. அதற்கு அன்றைக்கு எந்த விலங்கும் அகப்படவில்லை.

தூங்கிக் கொண்டிருந்த நரியைப் பார்த்ததும் புலி “இன்றைக்கு எனக்கான இரை இதுவே” என்று எண்ணி நரியை பிடித்தது.

தூக்கத்தில் இருந்த நரி தன்னை யாரோ பிடிப்பது போல் இருப்பதை உணர்ந்து கண் விழித்தது. புலியிடம் தான் மாட்டிக் கொண்டதை நரி கண்டது.

எப்படியாவது புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணியது. திடீரென அதற்கு ஒரு யோசனை தோன்றியது.

தன்னுடைய திட்டம் பலித்து விட்டால் புலியிடம் இருந்து தப்பிப்பதோடு காட்டின் தலைவனாகவும் மாறலாம் என்று எண்ணியது.

தன்னுடைய திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் புலியிடம் “ஏய், புலியே நீ என்னைத் தின்ன முடியாது” என்று கூறியது. அதற்கு புலி அதனிடம் “ஏன் உன்னைத் தின்ன முடியாது?” என்று கேட்டது.

“சொர்க்கத்திலிருக்கும் கடவுள் என்னை விலங்குகளுக்கு எல்லாம் அரசனாக படைத்து இங்கு அனுப்பி இருக்கிறார். நீ என்னைக் கொன்று தின்றால் கடவுளின் உத்தரவை மீறி அவரை அவமதித்ததாகக் கருதப்படுவாய். உனக்கு அதற்கான தண்டனையும் கிடைக்கும்.” என்று கூறியது.

ஆனால் புலியோ நரி சொன்னதை நம்பவில்லை. யோசித்தது. இதனைக் கவனித்த நரி அதனிடம் தொடர்ந்து பேசலானது.

“நான் சொல்வதை நீ நம்ப மாட்டாய் போல் இருக்கிறது. என்னோடு புறப்பட்டு வா. நான்தான் கடவுளால் அனுப்பட்ட அற்புத தலைவன் என்பதை உனக்கு நிரூபிக்கிறேன்.

என்னைப் பார்த்ததும் காட்டில் உள்ள விலங்குகள் எல்லாம் பயந்து ஓடுவதைப் பார்த்த பிறகாவது நம்புவாய் அல்லவா?” என்று கூறியது.

புலியும் நரி கூறியதற்கு “சரி வா. போகலாம்” என்று கூறி புறப்பட்டது. உடனே இரண்டும் சேர்ந்து காட்டுக்குள் சென்றன.

புலி வருவதைக் கண்ட விலங்குகள் எல்லாம் பயந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடின.

இதனைக் கண்டதும் புலி நரியைக் கண்டுதான் விலங்குகள் பயந்து ஓடுகின்றன என்று நினைத்தது.

புலி நரியிடம் “கடவுளால் அனுப்பப்பட்ட நீயே காட்டின் தலைவன்” என்று கூறியது.

வலிமையானவர்கள் யோசிக்காமல் செயல்பட்டால் புலியைப் போல் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும் என்பதை யார் தலைவன் என்ற கதையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.